நன்னாரி – மருத்துவ பயன்கள்

நன்னாரி வேர் இனிப்பும், சிறு கசப்பும் சேர்ந்த சுவையானது. குளிர்ச்சியான தன்மை கொண்டது. வியர்வை, சிறுநீர் ஆகியவற்றைப் பெருக்கும்; தாது வெப்பத்தை அகற்றும்; உடலைத் தேற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; வண்டு கடி, நீரழிவு, கிரந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.

நன்னாரி கொடி வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்கில் குறுக்கு மறுக்காக அமைந்த நீளமான அகலத்தில் குறுகிய இலைகளைக் கொண்டது. கம்பி போன்ற வளைந்து படரும். நன்னாரி மலர்கள், மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு நிறமானவை. நன்னாரி செடிச்சாறு பால் போன்றது. நன்னாரி வேர்கள் நறுமணமுள்ளவை. மருத்துவத்தில் பயன்படுபவை.

நறுக்கு மூலம், நறுநீண்டி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, கிருஷ்ணவல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் நன்னாரி தாவரத்திற்கு உண்டு. நன்னாரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே விளைகின்றது. சமவெளிகள், முட்புதர் காடுகள் மற்றும் கடற்கரையோரங்களில் அதிகமாகக் காணப்படும்.

மலைப் பகுதியில் வளரும் நன்னாரியின் வேர் தடிப்புடன் பெரியதாக இருக்கும். நன்னாரி வேரின் மருத்துவ உபயோகம் மற்றும் நறுமணப் பயன்கள் கருதி பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. இது காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

ஒரு பிடி பசுமையான நன்னாரி வேரைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு, இடித்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து இரசம் வைக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை சேர்த்து, வெறும் வயிற்றில் ½ டம்ளர் அளவு இரசத்தை குடிக்க எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாகும்.

நன்னாரி வேர்த்தூள் 2 தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடிக்க சிறுநீர் கட்டு குணமாகும்.

நன்னாரி வேர்த்தூள் ஒரு பங்குடன் 25 பங்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை 50 பங்கு சேர்த்து மணப்பாகு செய்து 15 முதல் 25 மிலி வீதம் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கி குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.

நன்னாரி இரு வகைப்படும். வேர்கள் சிறியதாக உள்ள சிறு நன்னாரியின் பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைகள் அகலத்தில் குறுகியவை. சமவெளிகள், புதர்காடுகளில் வளர்பவை.

மற்றொரு வகை, வேர்கள் பெரியதாக உள்ள பெரு நன்னாரியின் மலர்கள் கருஞ்சிவப்பு நிறமானவை. இலைகள் அகலத்தில் அதிகமானவை. மலைப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வளர்கின்றன.