கதிரியக்க மாசுபாடு

மனித செயல்களினால் அதிகஅளவு கதிரியக்கம் ஏற்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையே கதிரியக்க மாசுபாடு என்கிறோம்.

கதிரியக்கப் பொருளானது நிலைப்புத் தன்மையை அடையும் வரை அதிக ஆற்றலுடன் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். இம்மாசுபாடு நிலையான, வழக்கமான நிகழ்வினைப் பெற்றிருப்பதில்லை.

 

கதிரியக்க மாசுபாட்டின் வகைகள்

கதிரியக்க மாசுபாட்டினை தொடர்ச்சியான கதிரியக்க மாசுபாடு, தற்செயலான கதிரியக்க மாசுபாடு, அவ்வப்போது நிகழும் கதிரியக்க மாசுபாடு என மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.

 

தொடர்ச்சியான கதிரியக்க மாசுபாடு

யுரேனிய சுரங்கங்கள், அணுஉலைகள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனிதனின் தொடர் செயல்பாடுகளால் கதிரியக்க மாசானது தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றது. இதனால் தொடர்ச்சியான கதிரியக்க மாசுபாடு ஏற்படுகின்றது.

 

தற்செயலான கதிரியக்க மாசுபாடு

கதிரியக்கமானது கருவிகள் குறைபாடு, கதிரியக்கக் கசிவு, பாதுகாப்பு கருவிகளின் கோளாறு ஆகியவற்றால் தற்செயலாக நடைபெறுகிறது. இந்நிகழ்வு தற்செயலான கதிரியக்க மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.

 

அவ்வப்போது நிகழும் கதிரியக்க மாசுபாடு

கதிரியக்கப் பொருட்கள் பற்றிய ஆய்வுகள், தனிப்பட்ட சோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது கதிரியக்கம் அவ்வப்போது அளவுக்கு அதிகமாக நிகழ்கிறது. இந்நிகழ்வு அவ்வப்போது நிகழும் கதிரியக்க மாசுபாடு என்றழைக்கப்படுகிறது.

 

கதிரியக்க மாசுபாட்டின் மூலங்கள்

கதிரியக்க மாசுபாடானது இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளால் நடைபெறுகின்றது.

இயற்கை மூலங்கள்

கதிரியக்க கனிமங்கள், காஸ்மிக் கதிர்கள், கதிரியக்கச்சிதைவு அணுக்கருக்கள் ஆகியவை கதிரியக்க மாசுபாட்டினை ஏற்படுத்தும் இயற்கை மூலங்கள் ஆகும்.

 

கதிரியக்க கனிமங்கள்

யுரேனியம்-235, யுரேனியம்-238, தோரியம்-232, ப்ளுட்டானியம்-239 போன்ற கதிரிக்க கனிமங்கள் கதிரியக்க மாசுபாட்டினைத் தோற்றுவிக்கும் கதிர்வீச்சினை வெளியிடுகின்றன.

 

காஸ்மிக் கதிர்கள்

சூரியனிடமிருந்து வெளிவரும் மிகவும் ஆற்றலுடைய காஸ்மிக் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் இம்மாசுபாட்டினைத் தோற்றுவிக்கின்றன. காஸ்மிக் கதிர்களின் தாக்கமானது அட்ச, தீர்க்க ரேகைகளைப் பொறுத்து மாறுபடுகிறது.

பூமியின் துருவப்பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைந்தும் காணப்படுகிறது.

 

கதிரியக்கச்சிதைவு அணுக்கருக்கள்

நிலையில்லாத கதிரியக்கச்சிதைவு அணுக்கருக்கள் மிகச்சிறிய துகள்களாக சிதறி ஆற்றல் மிக்க கதிரியக்கத்தை வெளியிடுகின்றன. இவை நம் சுவாசம் வழியாக உடலுக்குள் ஊடுருவுகின்றன.

 

மனித நடவடிக்கை மூலங்கள்

அணுமின் நிலையங்கள், கதிரியக்க கழிவுகள், அணுக்கருப் பிளவுகள் மற்றும் ரேடியோ ஐசோடோப்புகள், அதிநவீன சாதனங்களின் பயன்பாடுகள் ஆகியவை கதிரியக்க மாசுபாட்டினை ஏற்படுத்தும் மனித நடவடிக்கை மூலங்கள் ஆகும்.

 

அணுமின் நிலையங்கள்

அணுமின் நிலையங்களிலிருந்து தொடர்ச்சியான கதிரியக்க வெளிபாடு இருந்து கொண்டே இருக்கும். இவை இம்மாசுபாட்டினை உருவாக்குகின்றன. மேலும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நேரும்போது இம்மாசுபாட்டின் அளவு அதிகரிக்கிறது.

 

கதிரியக்க கழிவுகள்

அணுமின் நிலையங்களிலிருந்து அதிகளவு கதிரியக்கப் பொருளானது கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. இப்பொருட்கள் உலகளாவியப் பிரச்சினையை உண்டாக்கியுள்ளது. வளர்ந்த நாடுகள் இக்கழிவுப் பொருட்களை மற்ற நாடுகளுக்கு அருகில் உள்ள கடலில் கொட்டி சர்வதேசப்பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன.

 

அணுக்கருப் பிளவுகள்

அணுக்கருப் பிளவின்போது அதிகளவு கதிரியக்கச்சிதைவு அணுக்கருக்கள் உருவாகின்றன. இவை மழை நீரில் கலந்து நிலமாசுபாடு மற்றும் நீர் மாசுபாடுகளை உருவாக்குகின்றன. இவை பின் உணவுச்சங்கிலியில் நுழைந்து உயிர்களுக்கு தீங்கினை உருவாக்குகின்றன.

 

ரேடியோ ஐசோடோப்புகள்

அணுக்கருப் பிளவு மற்றும் அணுக்கரு இணைவு ஆகிய நிகழ்வுகளின்போது ரேடியோ ஐசோடோப்புகள் உருவாகின்றன. இவை கதிரியக்க மாசுபாட்டினை உருவாக்குகின்றன.

 

அதிநவீன சாதனங்களின் பயன்பாடு

இன்றைய நாகரீக வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தொலைக்காட்சிப் பெட்டி, செல்போன்கள், செல்போன் டவர்கள், கணினிகள் உள்ளிட்ட அதிநவீன சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அவை கதிரியக்க மாசுபாட்டினை உருவாக்குகின்றன.

 

கதிரியக்க மாசுபாட்டின் விளைவுகள்

கதிரியக்கம் திசு மூலக்கூறுகளை அயனிகளாக்கி ப்ரீ ரேடிகல்களை உருவாக்குகிறது. கதிரியக்க மாசுபாடு செல்லின் உட்கருவில் உள்ள மரபணுக்கூறுகளை மாற்றம் அடையச் செய்கிறது. இதனால் புற்று நோய் உண்டாகிறது.

கதிரியக்கம் எலும்பு மஞ்சையில் செயல்பட்டு லுக்குமியா என்ற ரத்தப் புற்று நோயைத் தோற்றுவிக்கிறது.

கதிரியக்கம் தோலில் உள்ள செல்களை உருமாறச் செய்து தோல் புற்றுநோயை உண்டாக்குகிறது.

கர்ப்பிணிப் பெண்களின் இடுப்புப் பகுதியில் ஏற்படும் கதிரியக்கத்தால் கருவில் உள்ள குழந்தை இறக்க நேரிடும்.

மேலும் கதிரியக்கமானது உயிர்களில் மலட்டுத் தன்மையை உருவாக்குகிறது.

கதிரியக்க மாசுபாட்டினை தடுக்கும் நடவடிக்கைகள்

அணுஉலைகள், தொழிற்சாலைகள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கதிரியக்க பொருட்களின் கசிவுகள் நிறுத்தப்பட வேண்டும்.

கதிரியக்கப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும். கதிரியப் பொருட்கள் தீங்கு விளைவிக்காதப் பொருளாக மாற்றிய பின்தான் அகற்றப்பட வேண்டும்.

இயற்கை கதிர்வீச்சு நிலையானது அனுமதிக்கப்பட்ட அளவினைவிட மிகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அணுமின் நிலையங்களில் விபத்துக்கள் நிகழா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.