தீபா கர்மாகர்

தீபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கு பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர். 2016 ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைத் தவற விட்ட போதிலும் தீபா கர்மாகர் ஒரு மிகப்பெரிய சாதனையாளரே.

சர்வதேசப் போட்டியில் பங்கு பெற்று பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்டிக் வீரர் ஆவார்.

புராடுநோவா என்னும் ஆபத்தான விளையாட்டான அந்தரத்தில் இரண்டு குட்டிக்கரணங்கள் போட்டு கால்பதிக்கும் விளையாட்டில் இதுவரை வெற்றிகரமாக விளையாடி முடித்த ஐந்து பெண்களில் இவரும் ஒருவர் என்ற பெருமை இவரைச் சாரும்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் தனி நபர் பிரிவில் 15.066 புள்ளிகள் பெற்று நான்காம் இடம் பெற்றார். இவர் 0.015 புள்ளிகள் வித்தியாசத்தில் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை தவற விட்டார்.

இவர் 2014 காமன்வெல்த் போட்டியிலும், 2015 ஆசியன்சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் பெற்றார். ஏப்ரலில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

 

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

இவர் திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சார்ந்தவர். இவர் வங்காள குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் துலால் கர்மாகர் மற்றும் கிட்டா கர்மாகர் என்பவர்களுக்கு 09.08.1993 மகளாகப் பிறந்தார்.

இவருடைய தந்தை ஸ்போர்ட்ஸ் அத்தாரட்டி ஆப் இந்தியாவில் பணிபுரிகிறார். இவர் பளுதூக்கும் பிரிவின் பயிற்சியாளர் ஆவார்.
தீபா தனது ஆறாவது வயதில் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் இவர் ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டினாலும் அவருடைய தந்தையார் அளித்த ஊக்கம் மற்றும் தைரியத்தில் ஜிம்னாஸ்டிக்கை விரும்பி ஏற்றார். பிஸ்வேஸ்வ‌ர் நந்தி என்பவர்தான் இவருடைய பயிற்சியாளர் ஆவார்.

இவருடைய பயிற்சியாளர் இவரைப் பற்றிக் கூறும்போது இவருடைய பாதமானது வளைவுகள் இல்லாமல் நேராக இருந்ததாகவும் அவ்வாறு இருப்பது ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்குப் பொருந்தாது எனவும் ஆகையால் கடினப் பயிற்சிகள் மேற்கொண்டே இவருடைய பாதங்களை வளைவு பெறச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோ ஸ்போட்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பே இவரின் விளையாட்டிற்கு உதவியது.

 

சாதனைகள்

இவர் தனது 15 வயதிற்குள் 77 பதக்கங்களைப் பெற்றுள்ளார். இதில் 67 தங்கப்பதக்கங்கள் அடங்கும். இவருடை தளராத முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பே இப்பதக்கங்கள் பெறக் காரணமாகும்.

2014-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைபற்றினார். இதன் மூலம் சர்வதேசப் போட்டியில் பங்கு பெற்று பதக்கம் பெற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

2014-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்று நான்காவதாக வந்தார்.

2015-ல் ஹிரோசிமாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்சிப் போட்டியில் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைபற்றினார்.

2015 அக்டோபரில் நடைபெற்ற உலக ஆர்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று 5வது இடத்தைப் பிடித்தார்.

2016 ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடம் பெற்றார். அத்தோடு இந்திய மக்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

தீபா தினமும் காலையில் 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் பயிற்சி மேற்கொள்கிறார்.

 

விருதுகளும் சிறப்புகளும்

2015-ல் இவர் விளையாட்டு வீரருக்கான மத்திய அரசின் அர்ஜீனா விருதினை பெற்றுள்ளார்.

2016-ல் இந்திய விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றில் நான்காவது இடத்தைப் பெற்றதன் மூலம் விளையாட்டுத்துறை உதவி இயக்குநர் பதவியை வழங்கி திரிபுரா அரசு இவரை பெருமைப்படுத்தியுள்ளது.

விடா முயற்சிகளின் மூலம் கடினமான விளையாட்டுப்பிரிவிலும் சாதிக்க இயலும் என்பதற்கு தீபா கர்மாகர் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இவரைப் போலவே தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பின் மூலம் வாழ்வில் அவரவர் துறையில் சாதனை செய்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.