அன்பு செய் மனமே

அன்பு செய் மனமே என்பது இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை. ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் நல்ல படிப்பினை தரும் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.

“யய்யா, டவுண்க்கு போகனும். இங்க நின்னா பஸ்சு வருமா?” என்று வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் கன்னியம்மாள் பாட்டி.

“வரும் பாட்டி; இங்கேயே நில்லுங்க.” சொல்லிவிட்டு ஒவ்வொருவரும் பஸ் ஏறி சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து ஒரு பேருந்து வந்து தள்ளிப்போய் நின்றதைப் பார்த்ததும், பாட்டி ஓட முடியாமல் வேகமாக நடந்து போனார்.

“யய்யா, டவுண் போகுமா?”

“ஆங், போவும். சீக்கிரம் ஏறு.” என்றார் நடத்துனர்.

பாட்டி கீழே வைத்திருந்த கூடையை எடுத்துக் கொண்டு ஏறுவதற்குள் பேருந்து கிளம்பியது.

பாட்டி “யய்யா, நில்லுய்யா” என சொல்லிக் கொண்டே நடக்க, பேருந்து சென்றுவிட்டது.

சற்றுநேரத்தில் மற்றொரு பேருந்து வந்தது. ஆனால் யாரும் அந்தப் பேருந்திலிருந்து இறங்கவில்லை.

மேலும் பேருந்து நிறுத்தத்தில் பாட்டியைத் தவிர யாரும் நிற்காததால் பேருந்து நிற்காமல் சென்று விட்டது.

அந்தப் பேருந்து செல்வதைப் பார்த்த பாட்டி “இந்த பஸ் டவுனுக்குப் போகாது போல.  ஏனா, டவுனுக்கு போறதா இருந்தா,   நிப்பாட்டிருப்பானுல்ல” என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார்.

ஒரு மணி நேரமாக அப்படியே உட்கார்ந்து டவுண் பேருந்திற்காக காத்திருந்தார்.

அன்பு செய் மனமே

பாட்டி தனியாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரர் ஒருவர் பாட்டியிடம் வந்தார்.

“யம்மா, ஏன் ரொம்ப நேரமா தனியா இங்கேயே இருக்கீங்க. பணம் ஏதும் இல்லையா?” என்றார்.

வருத்தத்தோடு கன்னியம்மாள் “ஒருபஸ் வந்துச்சி. நான் ஏறங்குள்ளேயும் போயிடுச்சு. அதுக்கப்புறம் எந்த பஸ்ல போகணும்னு தெரியல. அதான் இங்கேயே இருக்குறேன்.” என்றார்.

பாட்டி சொன்னதைக் கேட்டதும் அவருக்கு மனசு வருந்தியது.

“யம்மா, நானே நின்னு உங்கள பஸ் ஏத்திவுட்டுட்டு போறேன். சரியாம்மா”

“ரொம்ப நன்றியா, நீயாவது இந்த கிழவிக்கு ஒத்தாசை செய்ய வந்திருக்கயே. ரொம்ப சந்தோசம் ய்யா…”

“யம்மா, நீங்க எதுக்கு தனியா வந்தீங்க. வீட்ல யாரையாவது கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதுதான.”

“யாரும் வரமாட்டாங்க. ஏனா, எனக்கு வயசாயிட்டு. நான் ஏதாவது தொனதொனனு பேசிட்டு வருவேன். அது யாருக்கும் பிடிக்காது. அதனால் இனிபேசாம அமைதியா இருக்கனும். அப்பத்தான் யாராவது துணைக்கு வருவாங்கனு நினைப்பேன். ஆனா அமைதியா, பேசாம வரமுடியலய்யா. அதான் நான் மட்டும் தனியா வந்தேன்.”

“வருத்தப்படாதீங்கம்மா, இளமை யாருக்கும் நிலையானது கிடையாது. கண்டிப்பா ஒருநாள் முதுமை வரும். அப்போ புரியும் உங்க அருமை. முதுமையும் ஒருகுழந்தை மாதிரிதான். ஆனால் முதுமையை யாரும் ரசிக்கமாட்டாங்க. இதுதான் நிதர்சனமான உண்மை. வயதான குழந்தை போன்ற உங்களை இப்படிவிட்டது தப்புதான்.”

“ஐயா, எங்கள ரசிக்கலாம் வேண்டா. எங்களுக்கு இருக்க இடமும், திட்டாம சாப்பாடும் கொடுத்தாப் போதும்.”

அப்போது பேருந்து ஒன்றுவர “யம்மா, பஸ் வந்திடுச்சு. வாங்க” என்றபடி கையைப் பிடித்து மெதுவாக பேருந்தில் ஏற்றிவிட்டு கீழே இறங்கினார்.

கன்னியம்மாள் பாட்டி அவரிடம் “யய்யா, நீ நல்லா இருப்ப. உன்பிள்ளை குட்டி எல்லாம் நல்லா இருக்கும்.” என வாழ்த்தினார்.

பாட்டி சொன்னதை கேட்ட‌தும் கடைகாரருக்கு ரொம்ப சந்தோசமாக, பெரிய சாதனை செய்ததுபோல் மனமகிழ்ச்சியுடன் சிரித்தபடியே அங்கேயிருந்து சென்றார்.

நெல்லை M.E. இசக்கி இம்ரான்

One Reply to “அன்பு செய் மனமே”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.