அறிவு உயிர் காக்கும் – சிறுகதை

அறிவு உயிர் காக்கும் என்பது ஒரு நல்ல‌ சிறுகதை. நாம் கஷ்டமான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை.

பூங்காவனம் என்ற காட்டிற்கு ராஜாவாக சிங்கம் ஒன்று இருந்தது. அது தனக்கு ஆலோசனை சொல்வதற்கு மூன்று மந்திரிகளை நியமிக்க எண்ணியது.

அதன்படி கரடி, குரங்கு, நரி ஆகியோரை மந்திரிகளாக நியமித்தது.

அவை அனைத்தும் மந்திரியான சந்தோசத்தில் மகிழ்ச்சியாகக் காலம் கழித்தன.

ஒரு முறை காட்டில் பஞ்சம் ஏற்பட்டது. சிங்கத்திற்கு வேட்டைக்கு விலங்குகள் சரியாக அகப்படவில்லை.ஒருநாள் சிங்கத்திற்கு உண்ணபதற்கு இரை ஏதும் கிடைக்கவில்லை.

பசியால் வாடிய சிங்கத்தின் கண்களில் அதன் மந்திரிகளான கரடி, குரங்கு, நரி மூன்றும் தென்பட்டன.

மந்திரிகள் மூவரையும் கொன்று தின்ன சிங்கம் தீர்மானித்தது. காரணமில்லாமல் கொன்றால் மற்ற பிராணிகள் எதிர்காலத்தில் தன்னைச் சந்தேகித்து அருகில் நெருங்காது என்று நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் சிங்கத்தின் மனதில் ஒரு திட்டம் உதித்தது.

அதன்படி மூன்று மந்திரிகளையும் அழைத்து “நீங்கள் என்னிடம் எவ்வளவு உண்மையாக நடந்து கொள்கிறீர்கள் என்று இப்போது சோதிக்கப் போகிறேன்.” என்றது.

மூன்று மந்திரிகளும் சிங்கம் கூறப்போவதை ஆவலுடன் எதிர்நோக்கின.

சிங்கம் தன்னுடைய வாயை அகலத் திறந்து “கரடியே, என்னுடைய வாயிலிருந்து எப்படிப்பட்ட வாசம் வீசுகிறது?” என்று கேட்டது.

உடனே கரடி “மாமிசம் சாப்பிடும் உங்களுடைய வாயில் மாமிச நாற்றம்தான் வீசுகிறது. அதுதான் உண்மை.” என்றது.

“என்ன, என் வாயா நாறுகிறது? நான் ராஜா என்பதையும் மறந்து இப்படிக் கேவலமாகப் பேசிய உனக்கு மரணம்தான் சரியான தண்டனை.” என்று கூறி கரடியைக் கொன்று தின்றது.

 

பிறகு குரங்கிடம் “என் வாயில் என்ன வாசம் வீசுகிறது?” என்று சிங்கம் கேட்டது.

கரடிக்கு நேர்ந்த கதியைப் பார்த்த குரங்கு “உம்முடைய வாயில் மல்லிகைப் பூ வாசம் வீசுகிறது.” என்றது.

“நீ பெரிய அண்டப் புளுகனாக இருக்கிறாயே. மாமிசம் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்ட என்னுடைய வாயில் மல்லிகைப் பூ மணம் கமழ்வதாகச் சொல்கிறாயே. முகஸ்துதி என்பது ஒரு ஏமாற்று வேலை. உனக்கும் மரண தண்டனையே” என்று கூறி குரங்கைக் கடித்து தின்றது.

 

நடந்தவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நரி எப்படியாவது சிங்கத்திடம் இருந்து தப்பிக்க எண்ணியது.

அப்போது சிங்கம் நரியிடம் “என்னுடைய வாயில் என்ன வாசம் வீசுகிறது?” என்றது.

“அரசே எனக்கு இரண்டு நாட்களாக ஜலதோசம். ஆதலால் என்ன வாசம் என்று இப்போது சொல்ல இயலாது. பிறகு ஒருநாள் சொல்கிறேன்.” என்று கூறியது.

 

சிங்கமும் அதனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது.

இரவானதும் நரி தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்றுவிட்டது. மீண்டும் நரி சிங்கத்திடம் திரும்பி வரவே இல்லை.

கடினமான சூழ்நிலைகளில் நாம் அறிவைப் பயன்படுத்தி ஆபத்திலிருந்து தப்பிக்க வேண்டும்.

அறிவு உயிர் காக்கும் என்பதை இக்கதையிலிருந்து தெரிந்து கொண்டீர்களா?

 

இனிது தமிழ் கதை பட்டியல்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.