இஞ்சி இயற்கையின் அற்புதம்

இஞ்சி இயற்கையின் அற்புதம் ஆகும். இது உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

இது அப்படியேவோ, காய வைக்கப்பட்டோ, பொடியாக்கப்பட்டோ, சாறு எடுக்கப்பட்டோ, எண்ணையாக்கப்பட்டோ பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள், ஏலக்காய் ஆகியோர் இஞ்சியின் உறவினர் ஆவர். இஞ்சியானது இந்தியா, சீனா, அரேபிய, ரோம, கிரேக்க நாகரிகங்களில் பன்னெடுங் காலமாகவே பயன்படுத்தப்பட்டு வரும் பராம்பரியம் கொண்டது.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துப் பொருளாக ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

இஞ்சியின் அமைப்பு மற்றும் வளரியல்பு

இஞ்சியானது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த சிறுசெடி வகைத் தாவரம் ஆகும். இச்செடியானது 50-100 செமீ உயரம் வளரும் இயல்புடையது.

 

இஞ்சி செடி
இஞ்சி செடி

 

இது வெப்பம், ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் செழித்து வளரும். நீர்த்தேங்காத இயல்புடைய மண்வகை இது வளருவதற்கு ஏற்றது.

இலைகள் கூர்மையாகவும், கத்தி போன்று சுழல் வடிவில் அமைந்தவை. இலைகள் 15-25 செமீ நீளமும், 2 செமீ அகலமும் உடையவை. பச்சை கலந்த மஞ்சள் நிறப்பூக்கள் இத்தாவரத்தில் காணப்படுகின்றன.

 

இஞ்சியின் பூ
இஞ்சியின் பூ

 

நாம் பயன்படுத்தும் இஞ்சியானது ரைசோம் எனப்படும் தரைகீழ் தண்டு ஆகும். இது பூமிக்கு அடியில் காணப்படுகிறது. இது பரந்து விரிந்து கைபோன்ற வடிவில் காணப்படும்.

 

தரைகீழ் தண்டு இஞ்சி
தரைகீழ் தண்டு இஞ்சி

 

இஞ்சியின் மேற்புறமானது பழுப்பு நிறத்தோலைக் கொண்டிருக்கும். இஞ்சியின் உட்புறமானது இளம் மஞ்சள், மஞ்சள், இளஞ்சிவப்பு நிறத்தில் தசைப்பற்று மிகுந்து இருக்கும்.

 

இஞ்சியை குறுக்காக வெட்டும் போது
இஞ்சியை குறுக்காக வெட்டும் போது

 

இது தனிப்பட்ட மணத்தினையும், காரச் சுவையையும் கொண்டிருக்கும். இதனுடைய அறிவியல் பெயர் ஸிங்கிபர் ஆஃபீஸ்னாலே என்பதாகும்.

 

இஞ்சியின் வரலாறு

இஞ்சியானது இந்தியாவில் உள்ள இமயமலை அடிவாரத்தை தாயகமாகக் கொண்டது என்றும், தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது என்றும் கருதப்படுகிறது.

இந்தியாவில் தோன்றிய இது பின் தென் மத்திய சீனாவிற்குப் பரவியது. இது ஆசிய, ஐரோப்பிய மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள வெப்ப மற்றும் மிகவெப்ப மண்டலகளில் அதிக அளவு காணப்படுகிறது.

இன்றைக்கு உலகில் விளைவிக்கப்படும் முக்கிய வணிக மூலிகை மசாலாப் பயிர் ஆகும். இந்தியா, நைஜீரியா, சீனா, இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகள் இஞ்சியை அதிகளவு உற்பத்தி செய்கின்றன.

 

இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இஞ்சியில் விட்டமின் சி, பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவும், விட்டமின் இ, பி5(பான்டாதெனிக் அமிலம்), பி3(நியாசின்), பி9(ஃபோலேட்டுகள்) ஆகியவையும் உள்ளன.

இதில் தாதுஉப்புக்களான மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, செம்புச்சத்து ஆகியவை அதிகளவும், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் காணப்படுகின்றன.

இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் இருக்கின்றன.

மேலும் இதில் டிரிப்டோபன், திரியோனின், ஐசோலுயூசின், லுயூசின், லைசின் ஆகிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் ஜிஞ்சரோல், சோகோலோல், ஸெர்போமோன், டெர்ஸ்போயிட்ஸ், பாராசோல், ஜெனெரோன் போன்றவையும் உள்ளன.

 

இஞ்சியின் மருத்துவப்பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

இஞ்சியானது நல்ல செரிமானம் நடைபெற ஊக்குவிப்பியாகச் செயல்படுகிறது. இஞ்சியானது நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன.

இஞ்சியானது பசியின்மையைப் போக்கி நமக்கு பசி உணர்வினைத் தூண்டி விடுகிறது.

மேலும் வயிற்றில் உண்டாகும் அதிகப்படியான வாயுவினை இது அகற்றுவதோடு, மீண்டும் வாயு உருவாகாமல் தடை செய்கிறது.

எனவே செரிமானம் நன்கு நடைபெறவும், பசி உணர்வினை உண்டாக்கவும் இஞ்சியை பயன்படுத்துதல் நலம்.

 

சளி தொந்தரவிற்கு

இஞ்சியானது சளி மற்றும் சுவாச தொற்றிற்கு எதிராக செயல்பட்டு அதிலிருந்து நிவாரணம் தருகிறது.

சளித் தொந்தரவின் போது இஞ்சிடீ-யை பருகினால் நச்சுப்பொருட்களை அது உடலிலிருந்து வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. சளி தொந்தரவினால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சியை உபயோகிக்கலாம்.

 

தசைவலியைப் போக்கும்

இஞ்சியின் எதிர்ப்பு அழற்சி பண்பானது உடல்வலி, தசைவலி, பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலி உட்பட வலிகளை நீக்குகிறது.

தினமும் 2 கிராம் அளவில் இஞ்சியை உட்கொள்பவர்கள் தசைவலியிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

குமட்டலின் தீர்வு

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் குமட்டலுக்கு இஞ்சியானது தீர்வளிக்கிறது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உண்டாக்கு குமட்டல் மற்றும் வாந்தியுணர்வினை இஞ்சி சரிசெய்கிறது.

அறுவைச்சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உண்டாகும் குமட்டலுக்கு எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் இஞ்சியானது தீர்வாக அமைகிறது.

 

அல்சரை சரிசெய்ய

இஞ்சியானது அல்சரால் உண்டாகும் அதிகப்படியான வாயுக்களை நீக்குகிறது. மேலும் அல்சர் நோய்க்கு காரணமான எச்.பைலோரி பாக்டீரியவின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. இதனால் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து அல்சரைச் சரிசெய்யலாம்.

 

கீல்வாதத்திற்கு

இஞ்சியானது மூட்டுகளில் உண்டாகும் கீல்வாதத்தைக் குறைத்து எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணுகிறது. இதில் காணப்படும் ஜிஞ்சரோல் எனப்படும் அழற்சி எதிர்ப்பு பொருள் கீல்வாதத்தால் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்கவும், முடக்கு வாதத்தைப் போக்கவும் செய்கிறது.

அழற்சியை உண்டாக்கும் சைட்டோயின்கள், செமோக்கீன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஜிஞ்சரோல் தடுக்கிறது.

 

கல்லீரல் பாதுகாப்பிற்கு

காட்மியம் உட்கொள்ளுதலால் உண்டாகும் நச்சுத்தன்மையிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள எண்ணெய் சத்துக்கள் உடல் பருமன் காரணமாக உண்டாகும் கல்லீரல் பாதிப்பினைத் தடுக்கிறது.

 

புற்றுநோயினைத் தடுக்க

இஞ்சியில் உள்ள 6-ஜிஞ்சரோலானது புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. கணைய புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் இஞ்சியில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது நம்மை பாதுகாக்கிறது.

 

முதியவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க

வயதோதிகத்தால் முதியவர்களுக்கு ஏற்படும் டிமென்ஷியா, பார்கின்சனின் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களிலிருந்து இஞ்சியானது நிவாரணம் அளிக்கிறது.

இஞ்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வயதுமுதிர்வினால் மூளையானது நினைவாற்றலை இழக்காமல் இருக்க உதவுகிறது.

 

இதய நலத்திற்கு

இஞ்சியானது கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இரத்தம் உறைதல் தடுக்கப்படுகிறது.

இது உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நலத்தைப் பேணுகிறது. எனவே இதய நலத்திற்காக இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

தொற்றுநோய் தடுப்பிற்கு

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோலானது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. வாயில் உள்ள நோய்கிருமிகளை அழித்து பற்சொத்தை, பல்வலி உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

இதன் நோய்தடுப்பு பண்பானது சிறுநீரகத் தொற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

 

சருமத்திற்கு

இஞ்சியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது எக்ஸிமா எனப்படும் நோயின் அறிகுறிகளை அழிக்கிறது. சருமத்தில் உண்டாகும் சருமத்தடிப்பு நோய், முகப்பரு, சொரியாஸஸ் நோயிலிருந்தும் இஞ்சி பாதுகாப்பு அளிக்கிறது.

 

இஞ்சியைப் பற்றிய எச்சரிக்கை

இஞ்சியானது கல்லீரலின் சுரப்பினை அதிகரித்து கல்லீரல் கல்லினை உண்டாக்கி விடும். இரத்தத்தை உறைதலை தடுப்பதற்காக மருந்தினை உண்பவர்கள் இஞ்சியை தவிர்ப்பது நலம்.

 

இஞ்சியை வாங்கி பயன்படுத்தும் முறை

இஞ்சியை வாங்கும் போது ஒரே சீரான நிறத்துடன், கனமானதாக மேற்தோலை நகத்தால் கீறினால் எளிதாக வரவேண்டும்.

மேற்புறத் தோலானாது கடினமாக சுருங்கி வெட்டுகாயங்கள் கொண்டு இருந்தால் தவிர்த்து விடவேண்டும். இஞ்சியை குளிர்பதனப் பெட்டியில் ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பொடி செய்யப்பட்ட இஞ்சியை காற்று புகாத டப்பாவில் அடைத்து குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

இஞ்சியை அப்படியேவோ, ஊறுகாய் செய்தோ பயன்படுத்தப்படுகிறது. இது உணவுகளில் சுவையை அதிகரிக்கவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது.

கேக்குகள், மிட்டாய்கள், ரொட்டிகள், பானங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி இயற்கையின் அற்புதம் ஆகும். இஞ்சியை அடிக்கடி உணவில் அளவோடு சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

One Reply to “இஞ்சி இயற்கையின் அற்புதம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.