உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்

உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் தன் மகனான உக்கிரபாண்டியனுக்கு நாட்டு மக்களின் நலனுக்காக வேல்வளை செண்டு வழங்கியதை குறிப்பிடுகிறது.


உக்கிரபாண்டியனின் திருமணம், உக்கிரபாண்டியனுக்கு முடிசூட்டல், சுந்தரபாண்டியரும், தடாதகை பிராட்டியாரும் இறைவடிவில் மீண்டும் சிவலோகத்தை அடைதல் ஆகியவற்றைப் பற்றியும் இப்படலம் விளக்கிக் கூறுகிறது.

இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் பன்னிரெண்டாவது படலம் ஆகும். பெற்றோர்களின் கடமைகள் பற்றி இப்படலம் விளக்கிக் கூறுகிறது.

உக்கிரவர்மனுக்கு பெண் தேடுதல்

சுந்தரபாண்டியனார் தன் மகனான உக்கிரவர்மனுக்கு முதலில், முடிசூட்டுவதா? மணம் முடிப்பதா? என்று மற்றவர்களிடம் கலந்தாலோசித்து இறுதியில் மணம் முடிப்பது என்று தீர்மானித்தார்.

பின் உக்கிரவர்மனின் திருமணத்திற்காக பெண் தேடுதல் நடைபெற்றது. மதுரையை அடுத்த மணவூரில் இருக்கும் அரசனான சோமசேகரனின் மகளான காந்திமதியை உக்கிரவர்மனுக்கு மணமகளாகத் தேர்வு செய்து திருமணம் முடிக்கக் கருதினர்.

அன்றிரவு சோமசேகரனின் கனவில் தோன்றிய சோமசுந்தக் கடவுள் “மதுரையை ஆண்டு வரும் சுந்தரபாண்டியனாரின் திருமகனான முருகனை ஒத்த உக்கிரவர்மனுக்கு உன் பெண்ணை மணம் முடிப்பாயாக.” என்று கூறினார்.

இதனைக் கேட்ட சோமசேகரன் விழித்து எழுந்தான். இறைவனின் ஆணையை நிறைவேற்ற விடியலுக்காக காத்திருந்தான். பின் விடிந்ததும் நித்திய கடமைகளை முடித்து தன் சுற்றத்தார் மற்றும் மகளுடன் மதுரையை நோக்கிச் சென்றான்.

முந்தைய நாளில் முடிவு செய்தபடி அமைச்சர்கள் சுந்தரபாண்டியரின் சுற்றத்தாரோடு மதுரையிலிருந்து மணவூரை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் எதிர்ப்பட்ட சோமசேகரனைக் கண்டு “உன்னுடைய புதல்வியை முருகக்கடவுளைப் போன்ற உக்கிரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடுப்பாயாக” என்று கேட்டனர்.

சோமசேகரனும் “சொக்கநாதரின் கட்டளையும் அதுவே. ஆதலால்தான் என்னுடைய மகளையும் அழைத்துக் கொண்டு மதுரையை நோக்கி வருகிறேன்.” என்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.

அமைச்சர்கள் திருமணத்திற்கான சோமசேகரனின் சம்மதத்தை சுந்தரபாண்டியனாருக்கு தெரிவித்தனர்.

உக்கிரவர்மனின் திருமணம்

சோமசேகர மன்னன், காந்திமதி மற்றும் சுற்றத்தாரை அழைத்துக் கொண்டு சுந்தரபாண்டியனாரின் அமைச்சர்கள் மதுரையை அடைந்தனர். சோமசுந்தரரும் பெண்வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அரண்மனை ஒன்றில் தங்க வைத்தார்.

பின்னர் அமைச்சர்கள் அனைவரும் கூடி திருமணநாளை நிச்சயித்தனர். மற்ற அரசர்களுக்கு திருமண ஓலையை அனுப்பினர். மதுரை மக்களுக்கு திருமண முரசினை அறிவித்து திருமணச் சேதியை அறிவித்தனர்.

மதுரை மக்கள் உக்கிரவர்மனின் திருமணத்திற்காக வாழைமரங்கள் மற்றும் கமுகு மரங்களைக் கொண்டு தோரணங்கள் கட்டி தங்கள் வீட்டினையும், மதுரை நகரினையும் அழகுபடுத்தினர்.

உக்கிரவர்மனின் திருமணத்திற்கு மன்னர்கள், தேவர்கள், முனிவர்கள், தவசிகள் உள்ளிட்டோர் மதுரைக்கு வருகை தந்தனர். சுந்தரபாண்டியனார் காந்திமதியின் அழகினைக் கண்டு மகிழ்வடைந்தார்.

தேவர்களின் குருவான வியாழபகவானும், “காந்திமதி சமுத்திரிகா லட்சணம் நிறைந்த‌ பெண்” என்று பெருமையாகக் கூறினார். உக்கிரவர்மன் திருமண நாளன்று வைகை ஆற்றின் நீரில் நீராடி மணமகனாக அலங்காரம் செய்து கொண்டு மணமேடையை அடைந்தார்.

காந்திமதியையும் மணப்பெண்ணாக அலங்கரித்து உக்கிரவர்மனின் அருகில் அமரச் செய்தனர். சோமசேகரப் பாண்டியன் தனது பெண்ணை உக்கிரவர்மனுக்கு தாரை வார்த்து கொடுத்து பலபரிசுப் பொருட்களையும் வழங்கினான்.

இவ்வாறாக உக்கிரவர்மன், காந்திமதி திருமணம் இனிது நடைபெற்றது. அறுசுவை உணவுகள் திருமணத்திற்கு வருகை புரிந்தோர்களுக்கு திருமண விருந்தாக வழங்கப்பட்டது.

திருமணத்திற்கு வருகைபுரிந்தவர்கள் சுந்தரபாண்டியனாரையும், தடாதகை பிராட்டியாரையும் வணங்கி விடைபெற்றனர்.

சுந்தரபாண்டியனார் வேல்வளை செண்டு ஆகியவற்றை உக்கிரவர்மனுக்கு அளித்தல்

ஒருநாள் சுந்தரபாண்டியனார் உக்கிரவர்மனை அழைத்து “மகனே உனக்கு இந்திரனும், கடல்அரசனும் பெரும் பகைவராவர்.

இந்திரனால் ஆபத்து வரும்போது அவனுடைய முடி சிதறும் வண்ணம் இந்த வளையினைக் கொண்டு எறிவாயாக.

கடலரசன் மதுரையை அழிக்கவரும்போது இந்த வேலை எறிந்து அவனைத் தடுப்பாயாக. மேருவின் செருக்கினை அழிக்க இந்த செண்டினால் அடிப்பாயாக” என்று கூறி மூன்று படைக்கருவிகளையும் உக்கிரவர்மனுக்கு அருளினார்.

உக்கிரவர்மனும் தன் தந்தையை வணங்கி அப்படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டான்.

பின்னர் உக்கிரவர்மனுக்கு அரசனாக முடிசூட்டிய சுந்தரபாண்டியனார் “வாய்மை வழியே நின்று சிறப்பான முறையில் ஆட்சி செய்” என்று கூறி ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைந்தார்.

அன்றிலிருந்து உக்கிரவர்மன் உக்கிரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான்.

பின்னர் சுந்தரபாண்டியனார் சிவகணங்களை முந்தைய வடிவத்தினைக் கொடுத்து தடாதகை பிராட்டியாருடன் திருக்கோயிலினுள் சென்று எழுந்தருளினார். உக்கிரபாண்டியனார் சிறப்புடன் ஆட்சி புரிந்து வந்தார்.

இப்படலம் கூறும் கருத்து

பிள்ளைகளைப் பெற்று நல்வழியில் வளர்த்து அவர்களின் வாழ்க்கை வேண்டிய பொருளாதாரத்தை நல்வழியில் ஈட்டச் செய்து, நல்ல மணவாழ்க்கையையும் அமைத்து தருவது பெற்றோரின் கடமை ஆகும். இதுவே உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் : உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்

அடுத்த படலம்:  கடல் சுவற வேல்விட்ட படலம்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.