எளிய ஜோதி வழிபாட்டு முறைகள்

திருவண்ணாமலையில் இருக்கும் இறைவனை வழிபட உதவும் எளிய ஜோதி வழிபாட்டு முறைகள் பற்றிப் பார்ப்போம்.

இறைவனை வழிபாடு செய்யும் முறைகளுள் ஜோதி வழிபாட்டு முறையும் ஒன்று. ஜோதி வழிபாடு என்றவுடன் திருவண்ணாமலையே நினைவில் முதலில் நிற்கும்.

திருவண்ணாமலையில் இருக்கும் இறைவனை வழிபட பிலாகாச ஜோதி, ஆகர்சண‌ ஜோதி, பர்யந்த ஜோதி போன்ற எளிய ஜோதி வழிபாட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 

பிலாகாச ஜோதி வழிபாடு

திருவண்ணாமலையில் ஊதுபத்திகளை இடைவிடாது ஏற்றிக் கைகளில் தாங்கியவாறே இறைசிந்தனையோடு கிரிவலம் மேற்கொள்வது பிலாகாச ஜோதி வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதால் மனதை உறுத்தும் குற்றச் சுமைகளும், பாவச் செயல்களினால் ஏற்பட்ட குற்றமும் அகன்று நல்வழி கிடைக்கும். இதுவும் ஒரு வகையான அக்னி வழிபாடு ஆகும். இவ்வாறான ஜோதியுடன் மலையை வலம் வருவது பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.

திருவண்ணாமலையாரின் மலைத் திருமேனியிலுள்ள சில அபூர்வமான மூலிகை சக்திகள் தீபக்கதிர்கள் மூலமாக பரவி தேகத்தினையும், வளிமண்டலத்தையும் அடைகின்றன.

புதன்தோறும் சந்தன மணம் நிறைந்த ஊதுபத்தி ஜோதியுடன் திருவண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் செய்து வந்தால் திருமணம் போன்ற நற்காரியங்களில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கி சுபகாரியங்கள் துரிதமாக நடைபெறும்.

 

ஆகர்சண‌ ஜோதி

திருவண்ணாமலையை சாம்பிராணி தூபமிட்டவாறே கிரிவலம் வருதலும் சிறந்த தீப வழிபாடாகும். இதற்கு ஆகர்சண‌ ஜோதி வழிபாடு என்று பெயர்.

எத்தனையோ விதமான எண்ணங்களுடன் பல்லாயிரக்கணக்கானோர் கிரிவலம் செய்கின்றனர். எண்ணம் என்பது ஒருவருடைய மனதில் தோன்றியதும் தேகத்திலிருந்து வெளிவந்து சுற்றுப்புறத்தை அடைகிறது.

எண்ணத்தின் வலிமையைப் பொறுத்து அதன் விளைவுகளும் அமைகின்றன. நல்ல எண்ணமாயின் அதைப் பெறுகின்ற சுற்றுப்புறச் செடிகொடிகள், மரங்கள், விலங்குகள், மனிதர்கள் நல்லமுறையில் இயங்குவர். தீய எண்ணமாயின் அதன் இயல்பும் தீமையானவையாகவே இருக்கும்.

சாம்பிராணி தூபத்திற்கு தீய எண்ணங்களின் தன்மையைத் தவிர்த்து அண்டவெளியை புனிதப்படுத்தும் கூடுதல் சக்தியும் உண்டு. அது மட்டுமல்லால் தெய்வீக சக்திகளை ஆகர்சிக்கும் ஆற்றலும் உண்டு.

சாம்பிராணி புகையும் ஜோதியிலிருந்தான் உருவாகிறது. சாம்பிராணி தூபம் எழும் ஜோதிக்கு குங்கிலியக்ருத ஆகர்சண‌ ஜோதி என்று பெயர்.

சாம்பிராணி தூபமிட்டவாறே தொடர்ந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்ய நாளடைவில் எத்தகைய தீயபழக்கங்களும் மறைந்துவிடும்.

புகையிலை, மது, புகைப்பிடித்தல் போன்ற தீயொழுக்கத்திற்கு ஆளானோர் மனதார வருந்தி சாம்பிராணி தூபமிட்டவாறே திருவண்ணாமலையை கிரிவலம் செய்தால் நிச்சயமாக கெட்ட பழக்கங்களிலிருந்து விடுதலை பெறலாம்.

 

பர்யந்த ஜோதி

பெருமளவு பச்சரிசி மாவு, அகல்விளக்குகள், பஞ்சதீப எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை கிரிவலத்தில் நந்தி தரிசனங்கள், அஷ்டதிக் லிங்கங்கள், தீர்த்தங்கள், சிறுகோயில்கள், திருப்பாதப்படிவுகள், முக்கியமான தரிசனப்பகுதிகள் ஆகியவற்றில் கோலமிட்டு அகல் விளக்கை ஏற்றி இருகைகளாலும் மேலே ஏந்தி கண்களுக்கு எதிரே உயர்த்தி திருவண்ணாமலையின் உச்சியில் அகல்விளக்கு ஜோதி தெரிவதாக பாவித்து ஜோதியின் ஊடே அருணாச்சலத்தை தரிசித்து வணங்கிக் கோலத்தின் நடுவில் அகல்விளக்கை வைத்திட வேண்டும்.

இவ்வாறு திருவண்ணாமலை கிரிவலம் முழுவதும் எந்த அளவிற்குக் கோலங்களிட்டு அகற்சுடர் ஏற்றுகின்றோமோ அந்த அளவிற்கு தனபாக்கியம் பெருகி வறுமையும் தரித்திரமும் தீரும். வறுமையைப் போக்கும் எளிய பர்யந்த ஜோதி வழிபாடு இதுவே ஆகும்.

மேற்கூறிய எளிய ஜோதி வழிபாட்டு முறைகள் கொண்டு இறைவனை மனதார வழிபாடு செய்து வாழ்வில் நன்னிலை அடைவோம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.