ஒரு திருவார்த்தை – கவிதை

நான்… நீ….

நீ… நான்…

என்ற ஒத்த வார்த்தைக்குள்

ஒளிந்து கொண்டு இருக்கிறோம்.

எந்த வெளிச்சத்திலும்

இல்லாமல் நாம் என்ற

ஒரு சொல்லாய்.

 

சில நேரங்களில்

தோழியாக,

காதலியாக,

சகோதரியாக,

தாயாக

இருந்து கொண்டிருக்கிறாய்

என்னில் – நீ.

 

எந்த இலக்கியத்திலும்,

எந்த அகராதியிலும்

தேடிப் பார்த்தாலும்

இந்த உறவுக்கு

பெயர் சொல்ல

முடிவதில்லை

நமக்கு.

 

என்னால் அழ முடியவில்ல

உன்னால் சிரிக்க முடிவதில்லை

என்னால் சிந்திக்க முடிகிறது

நம்மைக் குறித்து.

 

நம்மை தொலைத்த

ஒரு நொடியைத் தேடிக்

கொண்டிருக்கிறேன்

நாள் கணக்காக.

 

ஒரு கவிதை

என்று கேட்டால்

உடனே தயங்காமல்

உன் பெயரைச்

சொல்லி விடுவேன்.

 

மழையாய்,

வெயிலாய்,

புயலாய்,

குளிராய்,

பனியாய்,

நீ பேசும் போது வார்த்தைகள்

அன்பாய்,

அழகாய்,

அதிர்வால்

அடக்கமாய்,

புனிதமாய்.

 

யாரோ,

எதுவோ,

எப்பொழுதோ,

எழுதி விட்டுச் சென்ற

புரியாத கவிதை

ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன்

உன்னைப் போலவே.

 

எனக்கு

காலத்திலும் ஒரு கோபம்,

நேரத்திலும் ஒரு வெறுப்பு,

நொடியும் ஒரு அதிர்ப்த்தி

உன்னைக் காணாத போது.

 

எனக்கு

புலன்கள் அய்தாய்

மட்டுமில்லாமல்

உயிராய்,

உணர்வாய்

இருக்கிறாய் – நீ.

 

ஏன்?

இத்தனையும் என்னுள்

நீ செய்து

உனக்குள் நான் இல்லாதவன் போன்று இதயத்தை

மாராப்புக்கிடையில் திரையிட்டு மறைத்து

வைத்து இருக்கிறாய்.

 

நம்

சின்ன இதயத்திற்கு

பொய் சொன்னால்

பிடிக்காது என்பது

உனக்கு எப்படி

தெரியாமல் போனது?

 

உலகம் ஆயிரம் சொல்லும்.

உனக்கும்… எனக்கும்…. நமக்கும்….

உண்மை சொல்ல யாருண்டு?

அதனால்

உண்மையைச் சொல்லிவிடு

நம் உறவுக்கு பெயர்

நீயாகிலும் அல்லது

என்னையாவது சொல்ல விடு

அந்த ஒரு திருவார்த்தையை.

முனைவர் பாவலன்
சென்னை

 

2 Replies to “ஒரு திருவார்த்தை – கவிதை”

  1. திருவார்த்தையின் ஒரு வார்த்தையை கவிதையின் உள் ஒளித்து வைத்துக் கொண்டே செல்கிறார். கவிஞர் அருமையான கவிதை ஐயா.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.