கடகம் – கவிதை

அலைமோதும் முகிலினங்கள்

கனமழையால் கரைந்தோடும்

கார்முகில் கூட்டமோ?

 

அனல் பறக்கும் தீ பிளம்பைக்

கண்டால் கலைந்தோடும்

இந்த கரியின் கூட்டம்…

 

வன அழிப்பால் வாழ்வாதாரம்

தேடி படையெடுத்தாய்

நெடுவீதியை நாடி…

 

நெடுவீதியில் உந்தன் அணிவகுப்பைக்

கண்டால் உரு கொண்ட உயிரினம்

அனைத்தும் உயிர்காக்க உருண்டோடும்…

 

திருவோணமென்றால் மட்டும்

உந்தன் கருமேனியும் திருமேனியாய்

மிளிர்கிறது பொன்னால்…

 

நிலமதிரும் உந்தன் வரவைக்

கண்டால் அரிமாவும்

அச்சப்பட்டு அஞ்சியோடும்…

 

நிலப்பரப்பில் உந்தன்

நீள்விரிப்பு சிறுகுன்றையே

நினைவுறுத்தும்…

 

கருநிறமும் சிறுவிழியும்

குறுநடையும் கூர்நினைவும் கொண்ட

வேழக்கூட்டமே இந்த கடகம்!

 

(குறிப்பு: கடகம் என்றால் யானைக் கூட்டம் என்று பொருள்)

க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.