கடன் வாங்குதல்

கடன் வாங்குதல் என்பது இன்று நம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. கடனை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிந்தால் நம் பொருளாதாரம் வளமாக இருக்கும்.

வருமானம், கடன் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு என்ன?

கடன் என்பது திருப்பிச் செலுத்த வேண்டியது. கடனாகப் பெறும் பணம் வருமானம் ஆகாது.

ஆனால் சம்பளம் மற்றும் கூலியாக நாம் பெறும் பணத்தை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. அது நம் வருமானம் ஆகும்.

தவணைகளாக திரும்ப செலுத்தும் கடன் தொகை நமக்குச் செலவு ஆகும்.

 

நாம் எப்போது கடன் வாங்குகிறோம்?

வருமானத்திற்கு மேல் செலவு அதிகமாக இருந்தால், அல்லது அவசரத் தேவைகள் ஏற்படும் போது நாம் கடன் வாங்குகிறோம்.

சில வர்த்தக ரீதியான நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் போதும் நாம் கடன் வாங்குகிறோம்.

 

பணப்பற்றாக்குறையின் போதெல்லாம் கடன் வாங்க வேண்டுமா?

நகைகள் அல்லது விலை உயர்ந்த நுகர் பொருட்கள் வாங்க, திருவிழாக்கள் கொண்டாட, ஆடம்பரமான திருமணம் போன்ற செலவினங்களுக்காக கடன் வாங்காதீர்கள்.

நாம் இவற்றிற்காக நம் வருமானத்திற்குட்பட்டு அல்லது நம் சேமிப்பிலிருந்து தான் செலவு செய்ய வேண்டும்.

கடன் வாங்கியே தீர வேண்டுமென்ற சூழ்நிலை ஏற்பட்டால் நம் வருமானத்திலிருந்து மாதம் எவ்வளவு திருப்பி செலுத்த முடியும் என்று மதிப்பிட வேண்டும்.

நுகர்பொருள் செலவுகள் எந்த வருமானமும் தராது. இந்நிலைமையில் முதலில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் கடன் வாங்கிக் கடன் வலையில் விழ நேரிடும்.

கடனை நிர்வகிக்க கற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் கடன் உங்களை சீர்குலைக்கும்.

 

ஏன் வருமானம் தரக்கூடிய நடவடிக்கைகளுக்கு கடன் பெறுவது நல்லது?

நாம் கடன் வாங்கும் போது, அதை நாம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நம் திருப்பிச் செலுத்தும் திறனையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

நாம் வியாபாரம் செய்தால் வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்திலிருந்து கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த முடியும்.

எடுத்துக் காட்டாக நாம் ரூ.1000 கடன் பெற்று விதைகள் வாங்கிப் பயிரிட்டு அறுபடையை ரூ.10000க்கு விற்க முடியுமென்றால் நம்மால் ரூ.1000க்கு ரூ.100 வட்டியுடன் கடனைத் திருப்பித்தர முடியும். ரூ.8900 நம்முடைய லாபமாக இருக்கும்.

எனவே நாம் வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டிய தொகையைவிட அதிக வருமானம் தரக்கூடிய வணிக காரணங்களுக்காக மட்டுமே கடன் வாங்க வேண்டும்.

இல்லையேல் முந்தைய கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி நிரந்தரக் கடனாளி ஆக நேரிடலாம்.

உங்கள் வருமானத்தை பெருக்கக்கூடிய நடவடிக்கைகளுக்காக மட்டும் கடன் வாங்குங்கள்.

 

ஏன் அளவாக கடன் வாங்க வேண்டும்?

எந்த கடனும் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட வேண்டியதே. கடனைத்திரும்பச் செலுத்துமளவிற்கு உங்கள் வருமானம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒரு எளிய வழி இதுதான். உங்கள் வருமானம் செலவு மற்றும் உங்கள் மாதாந்திர சேமிப்பு எவ்வளவென்று பாருங்கள். உங்கள் மாதாந்திர சேமிப்பு நீங்கள் திரும்பிச் செலுத்தும் மாதத் தவணைத் தொகையை விட அதிகமாக இருக்க வேண்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.