கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று சிறுவர்களுக்கு ஆசிரியர் பழமொழி சொல்லித் தருவதை மரத்திலிருந்து குரங்கு ரங்கன் கவனித்துக் கொண்டிருந்தது.

ஆசிரியர் பழமொழியுடன் அதற்கு கதை மூலம் உதாரணத்தையும் கூறி விளக்கியதை மனதில் நன்கு பதிய வைத்துக் கொண்டது.

மாலை நெருங்கும் வேளையில் காட்டில் அனைவரும் வழக்கமாகக் கூடும் வட்டப்பாறையினை நோக்கி வேகமாகச் செல்லலானது.

குரங்கு ரங்கன் வட்டப்பாறையினை அடைந்த போது எல்லோரும் அங்கே கூடியிருந்தனர். காக்கை கருங்காலனின் வருகைக்காக குட்டிகளும், குஞ்சுகளும் காத்திருந்தன.

‘பழமொழியை யாரும் கூறுவதற்கு முன் வட்டபாறையினை அடைந்து விட்டோம்’ என்று மனதிற்குள் எண்ணி நிம்மதி அடைந்தது குரங்கு ரங்கன்.

காக்கை கருங்காலன் தூரத்தில் வருவது தெரிந்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கருங்காலன் கூட்டத்திற்கு வந்து பேசலானது. “என் அருமைக் குழந்தைகளே இன்றைக்கு பழமொழியை கூறாதோர் எவரேனும் வந்து பழமொழியைக் கூறி விளக்கமளியுங்கள்” என்றது.

குரங்கு ரங்கன் எழுந்து “தாத்தா நான் இன்று பள்ளியில் கேட்ட பழமொழி பற்றி விளக்குகிறேன். எனக்கு அதனை கூற அனுமதி தாருங்கள்” என்றது.

காக்கை கருங்காலனும் “நல்லது. இன்று நமது குரங்கு ரங்கன் தான் கேட்ட பழமொழி பற்றிக் கூறுவான். எல்லோரும் அவன் கூறுவதைக் கேளுங்கள்” என்றது.

குரங்கு ரங்கன் எழுந்து “எல்லோருக்கும் வணக்கம். நான் இன்றைக்கு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழியையும் அதனை விளக்க ஒரு சிறு கதையையும் கூறினார். அதனை நான் உங்களுக்கு இப்பொழுது கூறுகிறேன்.

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழியானது கல்விச் செருக்குற்ற சிலரை, அவரின் செருக்கை அடக்குவதற்காக சொல்லப்பட்டது.

 

இந்திரபுரி என்ற நாட்டினை தர்மசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது அவையில் கல்வியில் சிறந்தோர் பலர் இருந்தனர்.

ஒரு சமயம் அவனது நாட்டிற்கு பண்டிதன் ஒருவன் வந்தான்.
அரசவைக்கு சென்ற பண்டிதன் அரசனிடம் “நான் கல்வியில் சிறந்தவன். என்னை உங்கள் நாட்டில் உள்ளவர் யாரேனும் வாதத்தில் தோற்கடித்தால் நான் நாட்டை விட்டு சென்று விடுவேன். நான் வாதத்தில் வெற்றி பெற்றால் அரச பதவியை நீங்கள் எனக்கு தர வேண்டும். இது தான் போட்டி. போட்டிக்கு நீங்கள் தயார் தானே?” என சவால் விட்டான். அரசனும் போட்டிக்கு தயார் என அறிவித்து விட்டான்.

தனது அரசவையில் இருந்த கல்வியில் சிறந்தவர்களிடம் “நாளை பண்டிதனுடன் வாதத்திற்கு தயார் ஆகுங்கள். நாம் தோற்றுவிட்டால் பண்டிதனுக்கு நாம் அடிமையாகி விடுவோம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்”என்று கூறினான்.

போட்டி பற்றிய அறிவிப்பை நாடு முழுவதும் அறிவிக்கச் செய்தான் அரசன் தர்மசேனன்.

அரண்மனை சேவகனின் பத்து வயது மகன் அமுதன் இவ்வறிப்பைக் கேட்டான். நாளை நாமும் அரண்மனைக்குச் செல்லுவோம் என்று மனதில் தீர்மானித்தான்.

மறுநாள் அரசவையில் பண்டிதன்  கல்வியில் சிறந்தவர்களிடம் வாதிட்டு அவர்களை வென்றான். பின் அரசனிடம் “உங்கள் நாட்டில் என்னை வெல்ல எவருமே இல்லை. ஆதலால் நீங்கள் அரச பதவியை எனக்கு தாருங்கள்” என்றான்.

அப்போது அமுதன் “என்னிடம் உள்ள கேள்விக்கு நீங்கள் பதில் கூறுங்கள். பின் அரச பதவியைப் பெறுங்கள்” என்றான். அவனைப் பார்த்ததும் பண்டிதன் ஆணவத்துடன் “உங்கள் நாட்டில் கல்வியில் சிறந்தோர் எல்லோரும் என்னுடன் வாதில் தோற்றனர். நீயோ சிறுவன். உன்னையும் நான் வெல்வேன். உன் கேள்வியைக் கூறு” என்றான்.

அமுதனும் தனது ஒரு கையில் மணலினை எடுத்துக் கொண்டு அதனைப் பண்டிதனிடம் காட்டி “என் கையில் எவ்வளவு மணல் உள்ளது எனக் கூறுங்கள்?” என்றான்.

இதனைக் கேட்ட பண்டிதன் சிரித்தவாறே “சிறுவனே மணலினை எண்ண முடியாது என்பது உனக்கு தெரியாதா. கேள்வியின் மூலமே நீ சிறுபிள்ளை என்பதை நிரூபித்துவிட்டாய். இக்கேள்விக்கு எல்லாம் பதில் கிடையாது.”என்று கூறினான்.

அமுதனும் “கேள்விக்கான விடையை நான் கூறுவேன். நீங்கள் உங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு இங்கிருந்து செல்ல வேண்டும்.” என்றான்.

“சரி கூறு பார்ப்போம்” என்றான் பண்டிதன். “ஐயா என் கையில் ஒரு கையளவு மணல் உள்ளது. இதனைக் கூட உங்களால் சரியாகக் கூற முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொள்வீர்கள் தானே” என்றான் அமுதன்.

பண்டிதன் எதுவும் கூறாமல் நாட்டை விட்டு வெளியேறினான். இதனைக் கண்ட அரசன் “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று ஒளவையார் தனது பாடலில் கூறியுள்ளார் என்று சொன்னான்.

கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு
வெண்பற்றுள்ள கலை மடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறம்பத் தயங்கூற வேண்டா புலவீர்!
எறும்புந்தன் கையால் எண்காண்! என்பதே இப்பாடல்.

கலைமகளே தான் கற்றது கைமண்ணளவே என்றும் இன்னும் கற்க வேண்டியது உலகளவு உள்ளது என்று கையைக் கட்டிக் கொண்டு இருக்கிறாள். இவ்வாறு இருக்க நாமோ சிறிதளவு கல்வியைக் கற்றுவிட்டு இறுமாப்பு கொண்டு அலைவது பேதமை எனபதே இப்பாடலுக்கான பொருள் ஆகும்.” என்று குரங்கு ரங்கன் கூறியது.

காக்கை கருங்காலனும் “குழந்தைகளே. நாம் கற்றுக் கொண்டது நமது கையினைப் போன்ற சிறியஅளவே ஆகும். ஆனால் கற்றுக் கொள்ளாதது உலத்தினைப் பொல பெரியஅளவாகும். ஆதலால் யாரும் எனக்கு எல்லாம் தெரியும் என்று செருக்கு கொள்ளக் கூடாது. இதனை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றது.

பின் கூட்டத்தினரைப் பார்த்து “நாளை பழமொழியை கூறாதவர்கள் யாரேனும் தாங்கள் கேட்ட பழமொழி பற்றிக் கூறுங்கள். இப்பொழுது கலைந்து செல்லலாம். நாளை சந்திப்போம்.” என்று கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.