கின்னஸ் சாதனையாளர் பாடகி பி.சுசீலா

17695 பாடல்களைப் பாடியதால் கிடைத்த கின்னஸ் சாதனையைக் கொண்டு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் பாடகி பி.சுசீலா. 1960களிலிருந்து இன்று வரை தமிழ் ரசிகர்களுக்கு தனது தேன்மதுர குரலால் விருந்தளித்து வருபவர் இவர்.

வார்த்தைகள் உச்சரிப்பு, சொற்களின் சுத்தம், மொழி மேன்மை ஆகியவற்றை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி இன்றளவும் தனக்கென்று ரசிகர் கூட்டத்தை கொண்டவர் பி.சுசீலா.

சுசீலா பின்னனிப் பாடல்கள் பாடி தென்னிந்திய மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர்; இசையரசி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், ஒரியா, இந்தி, பெங்காலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் பின்னனிப் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூசன் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார். சுமார் அரை நூற்றாண்டுகளாக பின்னனிப் பாடல்கள் பாடி வருகிறார். இவரின் இசைப் பயணம் பற்றிப் பார்க்கலாம்.

 

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை

பி.சுசீலா எனப்படும் புலப்பாக்கம் சுசீலா ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜய நகரம் என்ற ஊரில் 13.11.1953ல் பிறந்தார். புலப்பாகம் முந்தராவ் கவுத்தாரம், ஷேசாவதாரம் ஆகியோர் இவரின் பெற்றோர் ஆவர். ஐந்து சகோதரிகளும், மூன்று சகோரர்களும் உள்ளனர். இவருடைய தந்தை வக்கீலாகப் பணியாற்றியவர்.

படிக்கும் போதே இவருக்கு இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் ஆந்திராவில் புகழ் பெற்று விளங்கிய துவாரம் வெங்கடசாமிநாயுடு என்பவரிடம் இசையை முறையாகப் பயின்றார்.

பின் சென்னை மகாராஜா இசைக் கல்லூரியில் சேர்ந்து இசைக் கல்வி கற்றார். பின் ஆந்திரா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இசைத் துறையில் டிப்ளமோ முடித்தார். 1957ல் னுச.

மோகன்ராவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

 

இசைப்பயணம்

இவர் இளம் வயதிலேயே கர்நாடாக இசையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். 1950ல் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார்.

இவரின் திறமையைக் கண்டு இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் அவர்கள் தன்னுடைய பெற்றதாய் திரைப் படத்தில் முதன் முதலில் பின்னனி குரலில் பாட வைத்தார்.

பின் 1953ல் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். பிறகு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போது லட்சுமி நாராயணம் என்பவரிடமிருந்து தமிழ் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தார்.

பின் 1955ல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே போன்ற பாடல்களைப் பாடினார். இப்பாடல்கள் இவரை இசை உலகுக்கு அடையாளம் காட்டின.

அதே ஆண்டில் எம்.வி.பிரசாத் இயக்ககத்தில் வெளிவந்த மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் இவர் பாடிய வாராயோ, வெண்ணிலாவே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தன. அது முதல் இவர் தனது இனிய குரலால் ரசிகர்களை ஆடவைத்தும், பாடவைத்தும், உருகவைத்தும் தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

நாகேஸ்வரராவ், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்.எஸ. விஸ்வநாதன் என அன்றைய இசை அமைப்பாளர்களில் தொடங்கி, இசைஞானி இளையராஜா இசைப்புயல் ஏ.ஆர்.ரஷ்மான் உள்ளிட்ட இன்றைய இசையமைப்பாளர்கள் வரை எல்லோருடைய இசையிலும் பின்னனிப் பாடல்கள் பாடியுள்ளார்.

 

விருதுகள்

இவரின் இசைச் சேவையைப் பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 1969ல் உயர்ந்த மனிதன் படத்தில் பாடிய’ நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா‘ பாடலுக்கு முதல் தேசிய விருதுகளை வாங்கினார். 1969, 1971, 1976, 1982, 1983 ஆண்டுகளில் மொத்ததம் ஐந்து முறை தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.

1969, 1981, 1989 ஆண்டுகளில் மொத்தம் மூன்று முறை பின்னனிப் பாடகிக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971, 1975 ஆண்டுகளில் மொத்தம் இரண்டு முறை கேரள மாநில அரசின் சிறந்த பின்னனிப் பாடகிக்கான விருதைப் பெற்றார்.

1977, 1978, 1982, 1984, 1987, 1989 என ஆறு முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பின்னனிப் பாடாகிக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2001ல் ஆந்திர மாநில அரசு ரகுபதி பெங்கையா விருது இவருக்கு வழங்கியது. 2008ல் மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூசன் விருதை இவரது சேவையைப் பாராட்டி வழங்கியது.

இங்கையில் கொழும்பு கம்பன் கழகம் சார்பில் 2016ல் கம்பன் புகழ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. கலைமாமணி விருதையும் பெற்று இசைப் பயணத்தின் உச்சியில் இன்றளவும் உள்ளார்.

1960 களிலிருந்து ஆறு இந்திய மொழிகளில் தனியாக, டூயட் மற்றும் கோரஸாக மொத்தமத் 17,695 பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்ற அறிவிப்பு 30.03.2016 அன்ற வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இசைப் பயணத்தில் இவருக்கு கிடைத்த விருதுகளில் மகுடமாகக் கொண்டாடப்படுகிறது.

கின்னஸ் விருது பெற்றதற்காக பி.சுசீலா பற்றி கவிஞர் வைரமுத்து பாராட்டும் போது “பி.சுசீலா அவர்கள் எந்த மொழியல் பாடினாலும் தாய் மொழியைப் போல் பாடுவார்; அவரின் சொல்லியம், அழகு, மேன்மை, நேர்த்தி மிகுந்து கேட்போர் எல்லோரையும் மயங்க வைக்கும்” என்றார்.

தமிழின் சிறப்பு ‘ழ’ கர உச்சரிப்பை கண்ணுக்கு மையழகு பாடலில் சுசிலா அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாகவும், மலர்ந்து மலராத பாதி மலர் போல பாடலில் சொற்களை மட்டுமில்லாமல், ஒலிக்குறிப்பான விசும்பலையும் மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருப்பதாகவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

 

இவர் பாடிய பாடல்களில் சில
யாருக்கு மாப்பிள்ளையாரோ

பார்த்தால் பசிதீரும்

முத்தான முத்தல்லவோ

அமுதைப் பொழியும் நிலவே

பக்கத்து வீட்டு பருவ மச்சான்

லவ்பேர்ட்ஸ்

அத்தான் என்னத்தான்

சிட்டுக்குருவி

அத்தை மகனே

உன்னை ஒன்று கேட்பேன்

கண்ணன் வருவான்

கங்கைக் கரைத் தோட்டம்

ராமன் எத்தனை ராமனடி

கண்ணா கருமை நிறக் கண்ணா

கொஞ்சி கொஞ்சி பேசி

ஆடாமல் ஆடுகிறேன்

நினைக்கத் தெரிந்த மனமே

அழகேவா

உன்னைக் காணாத

என்னை மறந்ததேன்

மாலைப் பொழுதின்

மன்னவனே அழலாமா

நாளை இந்த வேளை

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

காதல் சிறகை

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

காட்டுக்குள்ளே திருவிழா

அத்தை மகள் ரத்தினத்தை

மறைந்திருந்து பார்க்கும்

தேடினேன் வந்தது

சிட்டுக் குருவிக் கென்னக்கட்டுப்பாடு

ரோஜா மலரே ராஜகுமாரி

தாமரைக் கன்னங்கள்

அனுபவம் புதுமை

பேசுவது கிளியா

அமைதியான நதியினிலே

நான் மலரோடு தனியாக

கற்பூர முல்லை

முத்துமணிமால

கண்ணுக்கு மையழகு

 

எம்.எஸ்.வி. கிருஷ்ண கானத்தில் இவர் பாடிய‌

குருவாயூருக்கு வாருங்கள்

கோகுலத்தில் ஒரு நாள் ராதை

புல்லாங்குழலின் ஓசையிலே ஆகிய பாடல்களும்,

ரட்ச ரட்ச ஜெகன் மாதா

ஜெய ஜெய தேவி

மாணிக்க வீணை ஏந்தும் ஆகிய அம்மன் பற்றிய பாடல்களும் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அழியாப் புகழ் பெற்றவையாக உள்ளன.

 

இசை சேவை

பி.சுசிலா அவர்கள் தனது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். இவ்வறக்கட்டளையின் மூலம் இசையில் தேசிய அளவில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி ஆண்டுதோறும் கௌரவித்து வருகிறார்.

தனது குரல் வளமையால் ரசிகர்களின் மனதிற்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் ஊட்டிய இசையரசியை நாமும் அவரின் இசை சேவைக்கு தலை வணங்கி அவரின் பாடல்களை இன்றும் என்றும் ரசிப்போம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.