கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள்

கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள் பற்றி கேள்வி பதில் வடிவில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

1. மனித உடலின் சராசரி வெப்பநிலை என்ன?

மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். (36.1-37.8 டிரிகி செல்சியஸ்).

சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலைவிட அதிகமாகும்போது உடலில் வியர்வை, தோலுக்கு அதிக இரத்தஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனிதஉடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.

 

2. கோடை வெப்பத்தால் ஏன் பாதிப்பு அடைகிறோம்?

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

 

3. கோடை வெப்பத்தால் அதிகம் பாதிப்பு அடைவது யார்?

பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

4. கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களை எவ்வாறு தடுக்கலாம்?

அதிக அளவு நீர் பருக வேண்டும்

தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீர் பருக வேண்டும். சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும்.

சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும்.

அதிக அளவில் மோர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் ROS உப்புக் கரைசல் ஆகியவற்றைப் பருக வேண்டும்.

வெளியே செல்லும் போது

பயணத்தின் போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.

தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆடை உடுத்தும் முறை

வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி / துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம்

சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைசீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்து வைத்துக் கொள்ளலாம். குளிர்ந்த நீரால் குளிக்க வேண்டும்.

ROS உப்புக் கரைசலை தயார் செய்யும் முறை

1 பாக்கெட் ROS பொடியை 1 லிட்டர் சுத்தான குடிதண்ணீரில் கலக்கவும். புதிதாக கலந்த கலவையை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

வெளியில் வேலை செய்யும்போது

அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

தலையில் துண்டு அணிந்து கொள்ளலாம்.

பருத்தி ஆடைகளை தளர்வாக அணிந்து கொள்வது நல்லது.

களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

 

5.கோடை வெயிலால் பாதிப்படைந்தால் என்ன செய்ய வேண்டும்?

சூரியவெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால்.

உடனே வெப்பம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து வெப்பம் குறைவாக உள்ள இடத்திற்குச் செல்லவும்.

மேலும் தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, ROS கரைசல் ஆகியவற்றைப் பருக வேண்டும்.

மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்.

மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

 

5.கோடை வெயிலால் பாதிப்படைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்?

வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ எவரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக மருத்தவரையோ / ஆம்புலன்சையோ அழைக்க வேண்டும்.

மயக்கமுற்ற நபரை ஒருபுறமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும்.
நாடித் துடிப்பு, இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

மருத்துவருக்கோ ஆம்புலன்சுக்கோ காத்திருக்கும்போது பாதிக்கப்பட்ட நபரை சமதரையில் படுக்க வைத்து கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயர்த்தி பிடிக்க வேண்டும்.

உடைகளை தளர்த்தி ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தெளிக்க வேண்டும்.

காற்றோட்ட வசதி தொடர்ந்து கிடைக்கச் செய்ய வேண்டும்.

உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றம் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக் கூடாது.

கோடை காலத்தில் அதிகம் உட்கொள்ள வேண்டியவை

நுங்கு

இளநீர்

தர்பூசணி

மோர்

 

கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள் பற்றி அறிந்து கொண்டீர்கள் அல்லவா. உங்களைக் காத்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் இதனைத் தெரிவிக்கவும்.

 

கூடுதல் தகவல்களுக்கு:

கட்டணமில்லா தொலைபேசி: 104

தொலைபேசி: 044 – 24350496 / 044 – 24334811

கைபேசி: 9444340496 / 9361482899

 

வெளியீடு:

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை

சென்னை – 6

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.