கோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி?

கோதுமை கொழுக்கட்டை கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் அருமையான சிற்றுண்டி ஆகும்.

இதனுடைய சுவையும் மணமும் எல்லோருக்கும் பிடிக்கும். கொழுக்கட்டை ஆவியில் வேக வைக்கப்படுவதால், உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது சாப்பிட ஏற்றது.

இதனை சுவையாக எளிமையாக வீட்டில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – கால் படி (1 பங்கு)

கருப்பட்டி – ஆழாக்கு (½ பங்கு)

உப்பு – மிகவும் சிறிதளவு

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

தேங்காய் – 4 சில்லு

பொரிகடலை – 4 ஸ்பூன்

கோதுமை கொழுக்கட்டை செய்முறை

முதலில் கோதுமை மாவினை வெறும் வாணலியில் போட்டு ஐந்து நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் வறுத்த மாவினை ஆற வைக்கவும்.

 

கோதுமை மாவினை வறுக்கும்போது
கோதுமை மாவினை வறுக்கும்போது

 

கருப்பட்டியை நன்கு நொறுக்கிக் கொள்ளவும்.

கருப்பட்டி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

கருப்பட்டி கரைந்து கொதித்ததும் இறக்கி விடவும்.

 

கருப்பட்டி பால் தயார் செய்யும்போது
கருப்பட்டி பால் தயார் செய்யும்போது

 

பின்னர் கருப்பட்டி பாலை வடிகட்டி வறுத்த கோதுமை மாவில் சேர்க்கவும்.

 

கருப்பட்டி பாலை மாவுடன் சேர்க்கும்போது
கருப்பட்டி பாலை மாவுடன் சேர்க்கும்போது

 

அதனுடன் உப்பு, பொரிகடலை, பற்களாக்கிய தேங்காய் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

பொரிகடலை, தேங்காய் சேர்த்ததும்
பொரிகடலை, தேங்காய் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

இறுதியில் 2 ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி மாவினை ஒரு சேரத் திரட்டவும்.

 

திரட்டிய கோதுமை மாவு
திரட்டிய கோதுமை மாவு

 

திரட்டிய மாவிலிருந்து சிறிதளவு எடுத்து விரும்பிய வடிவில் உருண்டையாகவோ, நீள்வடிவிலோ கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.

இவ்வாறு எல்லா மாவினையும் கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.

 

கொழுக்கட்டைகளாகத் திரட்டியதும்
கொழுக்கட்டைகளாகத் திரட்டியதும்

 

இட்லிப் பானையை அடுப்பில் வைத்து கொழுக்கட்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

 

வேகவைத்த கொழுக்கட்டைகள்
வேகவைத்த கொழுக்கட்டைகள்

 

சுவையான கோதுமை கொழுக்கட்டை தயார்.

 

சுவையான கோதுமை கொழுக்கட்டை
சுவையான கோதுமை கொழுக்கட்டை

 

இதனை குழந்தைகளுக்கு பள்ளிக்குச் சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.

குறிப்பு

கருப்பட்டியை நன்கு தட்டி அதன் பின்னர் அளக்கவும்.

மேலே கொடுத்துள்ள கோதுமை மாவு அளவிற்கு 2 சில் கருப்பட்டி போதுமானதாக இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் கருப்பட்டிக்குப் பதில் மண்டை வெல்லத்தைச் சேர்த்து மேற்கூறிய முறையில் கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் தேங்காய்க்குப் பதில் பொரிகடலையை மட்டும் பயன்படுத்தி கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.