சங்கடகர சதுர்த்தி

சங்கடகர சதுர்த்தி என்பது விநாயகரை விரதமிருந்து வழிபாடு செய்யும் முறை ஆகும். மாதந்தோறும் பௌர்ணமியை அடுத்து வரும் நான்காவது நாளான சதுர்த்தியில் (தேய்பிறை சதுர்த்தி) இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

சங்கடகர என்பதில் உள்ள “கர” என்பதற்கு நீக்குதல் என்றும், சங்கடகர என்பதற்கு துன்பங்களை நீக்குதல் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் தங்களுடைய வாழ்வியல் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் அடைவதாக கூறப்படுகிறது.

இவ்வழிபாடானது மிகவும் பழமையானது மற்றும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறைகளில் முக்கியமானது ஆகும். இவ்விரதத்தினை தொடர்ந்து மேற்கொள்வதால் காரியத்தடை, திருமணத் தடை, நீண்ட நாள் நோய் ஆகியவை நீங்கும். நீண்ட ஆயுள், புத்தி கூர்மை, நிலையான செல்வம், நன் மக்கட் பேறு, சந்தோசம் ஆகியவை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

 

சங்கடகர சதுர்த்தி தோன்றிய விதம்:

ஒரு முறை விநாயக பெருமான் தனது வாகனமான மூஞ்சுறுவுடன் ஆனந்த நடனம் செய்தார். அவருடைய உடல் அமைப்பு, நடனம், வாகனம் ஆகியவற்றை சந்திரன் எள்ளி நகையாடினான். இதனால் சினமுற்ற விநாயகப் பெருமான், சந்திரன் தனது ஒளியை இழக்குமாறு சாபமிட்டார்.

தன் தவற்றினை உணர்ந்த சந்திரன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு வழி கேட்டான். அதற்கு விநாயகப் பெருமான் ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தியில் தன்னை நினைத்து விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் பழைய நிலையை அடையலாம் என்று கூறினார். சந்திரனும் அவ்வாறே வழிபாடு செய்து தன் இன்னல் நீங்கப்பெற்று பெரு வாழ்வு பெற்றான். அப்போது முதல் இவ்வழிபாடு தோன்றியது என ஒரு கதை உண்டு.

தாண்டகாவனம் என்ற காட்டில் விப்ரதன் என்னும் வேடன் வசித்து வந்தான். அவன் கொலை, கொள்ளை ஆகிய கொடுஞ்செயல்களைச் செய்து வந்தான். ஒரு நாள் அக்காட்டின் வழியே வந்த முத்கலர் என்ற முனிவரை தாக்க முற்பட்டான். அவர் தனது சக்தியால் அவனை செயல் இழக்கச் செய்தார்.

வேடனோ நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு தன்னை நல்வழிப்படுத்தவும் வேண்டினான். அதற்கு அவர் விநாயக பெருமான் மந்திரத்தையும், சங்கடகர சதுர்த்தி விரத முறையையும் கூறி, இன்னல்கள் நீங்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டினார். அவ்வேடனே இவ்விரத முறையைப் பின்பற்றி விநாயகப் பெருமான் அருள் பெற்று புருசுண்டி என்ற முனிவர் ஆனார். புருசுண்டி முனிவர் பூலோக மக்கள் தங்கள் துயரங்கள் நீங்கி நல்வாழ்வு பெற இவ்விரத மகிமையை கூறி மக்களைக் கடைப்பிடிக்கச் செய்தார் எனவும் ஒரு கதை உண்டு

கிருஷ்ணர் வளர்பிறை நான்காம் நாள் சந்திரனைப் பார்த்ததன் விளைவாக, சியமந்தக மணியால் பெரும் அவமானத்திற்கு உள்ளானார். அவர் சங்கடகர சதுர்த்தி விரதம் மேற்கொண்டு விநாயக பெருமானை வழிபட்டு தேய்பிறை நான்காம் நாள் சந்திரனைப் பார்த்து தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்கியதாகவும், அன்று முதல் இவ்வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

மஹாசங்கடகர சதுர்த்தி

ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சங்கடகரசதுர்த்தி மஹாசங்கடகர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இவ்விரத வழிபாட்டு முறையை முதலில் மேற்கொள்வோர் மகாசங்கடகரசதுர்த்தி நாளிலிருந்து ஆரம்பிக்கின்றனர்.

செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடகர சதுர்த்தி அங்ககார சங்கடகர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் இவ்விரத முறையினை கடைப்பிடித்தே நவகிரக அந்தஸ்த்தைப் பெற்றதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

விரத வழிபாட்டு முறை

இவ்விரத முறையில் நாள் முழுவதும் உணவு அருந்தாமல் இறை சிந்தனையுடன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. சங்கடகர சதுர்த்தி அன்று காலையில் எழுந்து நித்திய கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் நீராடி பின் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது அருகில் உள்ள விநாயகர் கோவிலிலோ வழிபாடு நடத்தப்படுகிறது.

பின் பகல் முழுவதும் உணவு அருந்தாமலும், ஒரு சிலர் பால், பழம் மட்டும் ஒரு வேளை உட்கொண்டும், பகலில் உறங்காமல் இறை சிந்தனையோடு இருந்து, மாலை நேரத்தில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெறும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொள்ளப்படுகிறது. பின் வீடு திரும்பி சந்திர தரிசனம் செய்து பின் உணவருந்தி விரத முறையானது பூர்த்தி செய்யப்படுகிறது.

இவ்விழாவில் விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு பால், பழம், மஞ்சள், திரவியப்பொடி, சந்தனம், நெய், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யப்படுகிறது. பின் விநாயகருக்கு அருகம்புல், வெள்ளெருக்கு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. விநாயகர் அகவல் மற்றும் விநாயகர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன.

இவ்வழிபாட்டின்போது தீபாராதனை முடிந்தவுடன் கோவிலை எட்டு முறை வலம் வரப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. விநாயக பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றான சங்கடநாசன கணபதி என்ற வடிவமே சங்கடகர சதுர்த்தி வழிபாட்டில் வணங்கப்படுகிறது.

 

விரத மகிமை

இவ்விரதத்தினை மேற்கொண்டு கிருத்தவீரியன் என்ற அரசன், கார்த்த வீரியன் என்ற வீர மகனைப் பெற்றான் எனவும், சந்திரன் சயரோகம் என்னும் நோய் நீங்கப்பெற்று புதுப்பொலிவு பெற்றான் எனவும், புருசுண்டி முனிவர் தனது பிதுர்களுக்கு சொர்க்கம் கிடைப்பதற்கு வழி செய்தார் எனவும், செவ்வாய் நவக்கிரக அந்தஸ்து பெற்றான் எனவும், அனுமன் சீதையைக் கண்டுபிடித்ததும், தமயந்தி நளனையும், அகலிகை கௌதமரையும் கணவனாக அடைந்தார்கள் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

மேலும் இவ்வழிபாடானது அனைத்து துன்பங்களையும் போக்கி, சௌபாக்கிய வாழ்வினைத் தரும் எனவும் நம்பப்படுகிறது.வளர்பிறை சதுர்த்தி (நான்காம் பிறை) சந்திரனைப் பார்ப்பதால் ஏற்படும் தொல்லையானது தேய்பிறை சங்கடகரசதுர்த்தி வழிபாட்டினை மேற்கொண்டால் சரியாகும் என்று நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்விரத வழிபாட்டினை மேற்கொண்டு நாமும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுவோம்.

 

2 Replies to “சங்கடகர சதுர்த்தி”

  1. பேரன்புடையீர்க்கு,
    வணக்கம், எனக்கு வெகு நாட்களாகத்தெரியாத விளக்கம் இன்றுதெளிந்தது.எனக்கு வயது 60 .எனக்கு சிறு அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது, எனவே சீக்கிரம் இவ்விரதத்தை ஆரம்பித்து விடலாம் என எண்ணுகிறேன்,
    நன்றி!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.