சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் விளையாட்டின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அதிக சாதனைகளையும் மிக அதிக ரசிகர்களையும் கொண்டவர் அவர்.

தனது அபாரமான விளையாட்டு திறமையால் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்தவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் எனப்படும் சச்சின் டெண்டுல்கர். இவர் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், டெண்டுல்யா என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

 

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

 

கிரிக்கெட்டில் வலதுகை மட்டை வீச்சாளரான இவரது சாதனைகள் எண்ணிலடங்காதவை. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உள்பட பல விருதுகளை வாங்கி உள்ளது தனிச்சாதனை.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது தனிச்சிறப்பு.

கிரிக்கெட்டில் புதிதாக உருவாகும் மட்டை வீச்சாளர்களும், ஏற்கனவே உள்ள மட்டை வீச்சாளர்களும் சச்சின் டெண்டுல்கரையே தங்களது ரோல் மாடலாக கருதுகின்றனர் என்பது இவரின் தனித் தன்மை ஆகும்.

சச்சின் டெண்டுல்கர் 26.04.1973 அன்று பம்பாயில் (மும்பை) நிர்மல் நர்ஸிங் ஹோம் என்ற மருத்துவ மனையில் பிறந்தார். இவரது பெற்றோர் ரமேஷ் டெண்டுல்கர், ராஜினி ஆவார். தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்தி கதை ஆசிரியர் ஆவார். தாயார் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணியாற்றியவர்.

சச்சினுக்கு நித்தின் மற்றும் அஜித் என இரு சகோதரர்களும், சவிதா என்ற சகோதரியும் உள்ளனர். இசையில் ஈடுபாடு கொண்ட தந்தை இவருக்கு சச்சின் தேவ்பர்மன் என்ற இசையமைப்பாளரின் நினைவாக சச்சின் டெண்டுல்கர் எனப் பெயரிட்டார். சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும், சாரா (1997) என்ற மகளும், அர்ஜூன் (1999) என்ற மகனும் உள்ளனர்.

சச்சின் சிறுவயதில் மும்பையின் பான்ந்ரா பகுதியில் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். பள்ளியில் துறுதுறுப்பு மற்றும் சேட்டைகள் நிறைந்தவராக இருந்தார். 1984ல் ராம்காந்த் ஆர்ச்சிகார் என்ற பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரிடம் கிரிக்கெட் கற்றுக் கொள்ள அவரது சகோதரர் அஜித் ஏற்பாடு செய்து சச்சினின் கவனத்தை கிரிக்கெட்டின் மீது திரும்பினார்.

முதல் சந்திப்பின் போது இளவயது சச்சின் நன்றாக விளையாடவில்லை. சச்சின் தனது கூச்ச சுபாவம் காரணமாக பயிற்சியாளர் முன்னிலையில் நன்றாக விளையாடவில்லை. ஆதலால் இன்னொரு வாய்ப்பு தருமாறு பயிற்சியாளரிடம் அஜித் வேண்டுகோள் விடுத்தார்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்ததை சச்சின் சரியாகப் பயன்படுத்தி நன்றாக விளையாடினார். அவருடைய விளையாட்டு முறையை மரத்தின் பின்னால் நின்று கொண்டு கவனித்த ராம்காந்த் ஆர்ச்சிகார் தனது பயிற்சி பள்ளியில் சச்சினை சேர்த்துக் கொண்டார்.

பயிற்சியாளரின் அறிவுரையின்படி மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சரதாஸ்ரமம் வித்யாமந்திர் உயர்நிலைப் பள்ளிக்கு சச்சின் மாறினார். மும்பையின் தாதர் பகுதியில் தான் நிறைய கிரிக்கெட் பிரபலங்கள் உருவாகி இருக்கின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள வலிமை வாய்ந்த அணியுடன் விளையாடும் வாய்ப்பு சச்சினுக்கு கிடைத்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சியாளர் வழிகாட்டுதலின் படி, சிவாஜி பார்க்கில் சச்சின் பயிற்சி மேற்கொண்டார்.

அவ்வப்போது பயிற்சியாளர் ஸ்டம்பின் மீது ஒரு ரூபாயை வைத்து யார் ஒருவர் சச்சினை ஆட்டமிழக்கச் செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த ரூபாய் பரிசளிக்கப்படும் என்றும், ஒரு வேளை அன்றைய தினத்தில் சச்சின் ஆட்டமிழக்காமல் இருந்தால், சச்சினுக்கு அந்த ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற போட்டி நடத்துவார்.

இவ்வாறாக நடத்தப்பட்ட போட்டிகளில் மொத்தம் 13 தடவை வென்று 13 நாணயங்களை தான் பெற்றதாகவும் தான் பெற்ற பரிசுகளில் இது முதன்மையானது எனவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

1984ல் தனது 14 வயதில் சென்னையில் உள்ள எம்.ஆர்.எப். பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது வேகபந்து வீச்சாளராக உருவாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளரான டென்னிஸ் லில்லி என்பவர் சச்சினை மட்டை வீச்சாளராக பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதுவே அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

1987ல் இந்திய மட்டை வீச்சாளரான சுனில் கவாஸ்கர் தனது ஒரு ஜோடி காலுறைகளை பரிசாக அளித்து, பம்பாய் கிரிக்கெட் அசோசியேசனின் சிறந்த ஜீனியர் கிரிக்கெட் விளையாடுபவர் என்ற பரிசை பெற முடியாததற்கு வருந்தாமல், நன்றாக விளையாடுமாறு ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்வு தனக்கு மிகவும் உற்சாகம் அளித்ததோடு, நன்றாக விளையாட ஊக்கமாக இருந்ததாக, சச்சின் கவாஸ்கரின் சாதனையான டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்கள் என்ற சாதனையை முறியடித்த போது குறிப்பிட்டார்.

1987ல் மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியின் போது பந்து எடுத்துப் போடும் சிறுவனாக சச்சின் பணியாற்றினார். 1988ல் மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில் தனது நண்பர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்தார்.

பின்னர் மும்பை அணி சார்பாக விளையாடிய போது 100 ஓட்டங்களை குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையேயானது. அப்போது சச்சின் வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது.

1989ல் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடிய போது சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இடம் பிடித்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் கராச்சியில் களம் இறங்கினார்.

முதல் போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அத்தொடரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் வாக்கர் யூனிஸ் வீசிய பந்தில் மூக்கில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் தொடர்ந்து விளையாடினார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதன் முதன்மையாக களம் இறக்கப்பட்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதன் மூலம் மிக இளம் வயது வீரராக இந்திய சார்பில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானவர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.

1990ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டில் 119 ரன்கள் எடுத்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து நிகழ்ந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் 148, 114 ரன்கள் குவித்தார்.

1994ல் இலங்கையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்திய செய்தார். தனது 79வது சர்வதேச ஒருநாள் போட்டியில் தான் முதல் ஒரு நாள் போட்டி சதத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். இது உலக சாதனை ஆகும். இதில் 49 சதங்களும் 56 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டியில் முதலில் இரட்டை சதம் அடித்த பெருமையும் சச்சினையே சாரும். 2016 பவுன்டரிகளை அடித்த முதல் வீரரும் இவரே.

 

சச்சின் அடித்த சதங்கள்
சச்சின் அடித்த சதங்கள்

 

ஒரு நாள் போட்டிகளில் பந்து வீசி 154 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் இருமுறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 140 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 15,470 ரன்களை எடுத்து உலகின் முதல்நிலை வீரராக உள்ளார். இதில் 51 சதங்களும் 68 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக டெஸ்ட் போட்டியில் 248 ரன்கள் எடுத்துள்ளார். 46 விக்கெட்கள் மற்றும் 115 கேட்சுகளையும் டெஸ்ட் போட்டியில் பிடித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 100 சதங்கள் அடித்துள்ளார்.

 

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகள்

டெஸ்ட் போட்டிகளில் 13 தடவைகள் ஆட்டநாயகன் விருதையும், 4 முறை தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார். ஒரு நாள் போட்டியில் 60 முறை ஆட்டநாயகன் மற்றும் 14 முறை தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார்.

 

அணித்தலைவராக

1996-ல் இந்திய அணித்தலைவர் பொறுப்பை ஏற்றார். டெண்டுல்கர் தலைமையில் மொத்தம் 73 ஒருநாள் போட்டிகளையும் 25 டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணி எதிர் கொண்டது.

இதில் ஒருநாள் போட்டியில் 23 முறை வென்று 43 முறை தோற்றது. டெஸ்ட் போட்டிகளில் 4 முறை வென்று 9 முறை தோற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தோல்விகளால் 2000-ல் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

டெண்டுல்கர் 90 முதல் 100 ரன்களுக்கு இடையில் 23 முறை ஆட்டமிழந்துள்ளார். 99 ரன்கள் எடுத்த நிலையில் 3 முறை ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலககோப்பை

மொத்தம் ஆறு உலகக் கோப்பைப் போட்டிகளில் சச்சின் பங்கேற்றுள்ளார். (1992, 1996, 1999,2003, 2007, 2011). 2011-ல் நடைபெற்ற உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தது தனக்கு கிடைத்த கடவுளின் ஆசிர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

1999-ல் உலக கோப்பை போட்டி நடைபெற்ற போது சச்சினின் தந்தை காலமானார். தந்தை மறைந்து சில நாட்களிலேயே ஆடுகளத்துக்கு திரும்பிய சச்சின் கென்யாவுக்கு எதிரான போட்டியில் 101 பந்துகளில் 140 ரன்கள் குவித்து அதை தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.

ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்று 1723 ரன்களைக் குவித்துள்ளார்.

 

சர்ச்சையில் சச்சின்

2001ல் தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக கூறி ஒரு போட்டியில் விளையாட சச்சினுக்கு தடை விதிக்கப்பட்டது. இவ்விவகாரம் இந்திய பார்லிமென்ட் வரை விவாதிக்கப்பட்டது. பின் ஐசிஐசி தலையிட்டு தடை நீக்கப்பட்டது.

2002-ல் சொகுசு காரை வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்த போது அதற்குரிய சுங்க வரி செலுத்தும் விவகாரத்தில் டெண்டுல்கர் சர்ச்சையில் சிக்கினார். இவருக்காகவே சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ரூ.1.13கோடி விலக்கு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் கூட தொடரப்பட்டது.

 

வழங்கப்பட்ட விருதுகள்

1994-ல் சிறந்த விளையாட்டு வீரருக்கான அர்ஜூனா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.

1997-ல் இந்தியாவின் விளையாட்டு வீரருக்கான உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது  வழங்கப்பட்டது. இதனை பெற்ற முதல் விளையாட்டு வீரராகவும் சச்சின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 டிசம்பரில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2013 அக்டோபரில் 20-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2013 நவம்பரில் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் மொத்தம் 664 போட்டிகளில் விளையாடி 34,357 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய விமானப்படையில் கெளரவ குரூப் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 2012-ல் ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

விடாமுயற்சி, பொறுமை, பெருந்தன்மை, உணர்ச்சி வசப்படாமல் பிரச்சினைகளை அணுகுதல் போன்றவை சச்சினின் உயர்ந்த குணங்களாகும். நாமும் அவரது உயர்ந்த குணங்களைப் பின்பற்றுவோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.