சப்போட்டா

சப்போட்டா மெது மெதுவென அற்புதமான இனிப்புச் சுவையுடன் நாவில் நீர் சுரக்க வைக்கும் மண்நிறத் தோலுடன் கூடிய பழம் ஆகும். பல் முளைக்கும் பருவத்திற்கு முன்பே குழந்தைகள் அதனை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

சப்போட்டா ஒரு வெப்ப மண்டலத்தில் விளையும் பழவகையைச் சார்ந்தது. இதன் தாயகம் மழைக்காடுகளைக் கொண்டுள்ள மத்திய அமெரிக்க நாடுகளான மெக்ஸிக்கோ மற்றும் பிரேசில் ஆகும்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, வியட்நாம், மாலத்தீவுகள், இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிகளவு விளைவிக்கப்படுகிறது.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா நாடுகளில் வணிகப் பயிராக பயிர் செய்யப்படுகிறது.

இப்பழமானது 30 அடி முதல் 50 அடி வரை வளரும் மரத்திலிருந்து கிடைக்கிறது. வெப்பமும் மழையும் இதற்கு முக்கிய வளர் காரணிகளாக இருந்த போதிலும் மழை குறைவான வறண்ட பகுதிகளிலும் நன்கு செழித்து வளரும்.

வறட்சியான காலங்களில் முறையான நீர்பாசனத்தின் மூலம் இம்மரத்திலிருந்து அதிக பலனைப் பெறலாம். இம்மரமானது வேகமாக வளரும் தன்மை உடையது. பொதுவாக இம்மரம் பயிர் செய்து 5 முதல் 8 வருடங்களில் பலன் தர ஆரம்பிக்கிறது. நன்கு வளர்ந்த மரமானது ஒரு வருடத்திற்கு 2000 பழங்கள் வரை பலன் தரும்.

சப்போட்டாப்பழம் பெர்ரி வகையைச் சார்ந்தது. இப்பழம் பொதுவாக உருண்டை மற்றும் நீள்வட்ட வடிவில் காணப்படுகிறது. ஒரு பழம் 10 செமீ விட்டத்தில் 150 கிராம் எடையில் இருக்கிறது. இப்பழத்தின் வெளிப்புறம் பழுப்பு மற்றும் மண் நிறத்தில் காணப்படுகிறது.

இப்பழம் உட்புறம் சாக்லெட் நிறத்தில் வெண்ணெய் போன்ற மெதுவான சதைப்பகுதியைக் கொண்டுள்ளது. பழத்தின் உள்ளே 5-8 கறுப்பு நிற பளபளப்பான நீள்வடிவ விதைகள் காணப்படுகின்றன.

இப்பழம் காயாக இருக்கும்போது வெள்ளை நிறத்தில் ஒட்டக்கூடிய கடினமான கூழ் நடுப்பகுதியில் காணப்படுகிறது. இதற்கு சஃபோனின் என்ற நச்சுப் பொருளைக் கொண்டுள்ள லேக்டெக்ஸ் காரணமாகும்.

காயானது பழமாகும்போது லேக்டெக்ஸ் படிப்படியாகக் குறைகிறது.
இப்பழமானது பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகிறது. பாலுடன் கலந்து மில்க்சேக்காகவும், மிட்டாய் வடிவிலும், ஜெல்லியாகவும், ஐஸ்கிரீம் வடிவிலும் உண்ணப்படுகிறது. சில நாடுகளில் பழத்தினை நசுக்கி பழக்கூழாக்கி வெப்பப்படுத்தி பதப்படுத்தப்பட்டு சிரப் வடிவில் பயன்படுத்தப்படுகிறது.

இம்மரத்தின் உறுதியான மரக்கட்டைகள் மரவண்டிகள், கருவிக்கைபிடிகள், ரயில் குறுக்குக் கட்டைகள் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

இம்மரப்பட்டைகள் மீன்பிடிக் கோடுகள் வரைய மற்றும் பாய் மரங்கள் ஆகியவற்றில் நிறமூட்டிகளாக பிலிப்பைன்ஸ் மீனவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. மெக்ஸிக்கோவில் சுவிங்கம் செய்ய இப்பழம் பயன்படுத்தப்படுகிறது.

 

சப்போட்டாவில் உள்ள சத்துக்கள்

இப்பழத்தில் விட்டமின் ஏ,சி, தயமின்(பி1), ரிபோஃப்ளோவின் (பி2), பைரிடாக்ஸின் (பி6), நியாசின் (பி3), போலேட்ஸ், பான்தோதெனிக் அமிலம் (பி5), கார்போஹைட்ரேட், நார்சத்து, சோடியம், பொட்டாசியம், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் ஆகிய தாதுப்பொருட்கள், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற எளிய சர்க்கரை மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.

 

சப்போட்டா மருத்துவப்பண்புகள்

ஆற்றல் கோபுரங்கள்

சப்போட்டா எளிய சர்க்கரை மூலக்கூறுகளான சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டு உண்பவர்களுக்கு உடனடி சக்தியை அளிக்க வல்லது. எனவே உடனடி சக்தி வேண்டுபவர்கள், விளையாட்டு வீரர்கள் இப்பழத்தினை உண்டு பலன் பெறலாம்.

 

செரிமானத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் நார்சத்து உணவினை நன்கு செரிக்க உதவி செய்கிறது. மேலும் மலமிளக்கியாகச் செயல்பட்டு செரிக்காத உணவுப் பொருட்களை கழிவாக உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இப்பழத்தினை உண்டு மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறலாம்.

மேலும் இப்பழத்தில் காணப்படும் டானின் என்ற எதிர்ப்பு காரணி இரைப்பை அழற்சி, குடல் எரிச்சல், உணவுக்குழாய் கோளாறுகள் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

அனீமியாவை சரிசெய்ய

இரும்புச்சத்து குறைபாட்டினால் அனீமியா ஏற்படுகிறது. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதான பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. அனீமியாவால் ஏற்படும் சோர்வு, குறைவான மனச் செயல்பாடு ஆகியவற்றை சரிசெய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள சப்போட்டாவினை உண்ணலாம்.

 

இரத்தக்கசிவினை மேம்படுத்தும் பண்புகள்

இப்பழத்தில் காணப்படும் டானின் மூலவியாதி மற்றும் காயங்களால் ஏற்படும் இரத்த இழப்பினை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வயிற்றுப்போக்கு நோயால் அவதியுறுபவர்களுக்கு இப்பழம் அருமருந்தாகும்.

 

எலும்புகள் வலுப்பெற

இப்பழத்தில் காணப்படும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு எலும்புகளை வலுபெறச் செய்யலாம்.

 

கர்பிணிப் பெண்களுக்கு

இப்பழத்தில் காணப்படும் தாதுப்பொருட்கள், விட்டமின்கள், கார்போஹைட்ரேட்கள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகின்றன.

மேலும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல், உடல் பலவீனம், மயக்கம் போன்றவற்றிற்கு இப்பழம் அருமருந்தாகும்.

 

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண்பார்வைக்கு

இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள் சி,ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை வழங்குகின்றன. இதனால் இப்பழத்தினை நாம் உண்பதால் சளி, தும்மல், இருமல் போன்றவை வராமல் பாதுகாக்கப்படுகிறோம். இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ கண்பார்வையை பலப்படுத்துகிறது.

 

கேசம் மற்றும் முகப்பொலிவிற்கு

சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கேசத்தின் ஈரதன்மையைப் பாதுகாக்கிறது. மேலும் இவ்வெண்ணெய் கேசத்தை மென்மையாக்குவதுடன் பளபளபாக்கிறது. சுருட்டை முடிக்கு இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. கேசம் உதிர்தலையும் இவ்வெண்ணெய் தடை செய்கிறது.

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் இ சருமத்தை பொலிவுறச் செய்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு அழகான பொலிவான சருமத்தைப் பெறலாம்.

 

விஷப்பூச்சி கடிக்கு நிவாரணம்

இப்பழத்தின் விதைகளை அரைத்து குழைத்து விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் பூசி நிவாரணம் பெறலாம். மேலும் அரைத்த விழுதினைத் தடவி கடிவாயில் காணப்படும் கொடுக்குகளை அகற்றவும் செய்யலாம்.

 

இப்பழத்தினை தேர்வு செய்யம் முறை

சப்போட்டாவினை மாம்பழங்களைப் போல மரங்களிலிருந்து நேரடியாக பறிக்கலாம். பழுப்பு நிறத்தில் உள்ள‌ முதிர்ந்த பழத்தினைப் பறித்தால் வெள்ளை நிற லேக்டெக்ஸ் கசிவு இல்லாமல் இருக்கும்.

மேல் தோலை லேசாகக் கீறினால் பச்சை நிறம் இல்லாமல் இருக்க வேண்டும். கடைகளில் இப்பழத்தினை வாங்கும்போது புதிதாக பளபளப்புடன் மேல் தோலானது சுருக்கங்கள், காயங்கள், வெட்டுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

பழத்தின் மேற்புறத்தினை அழுத்தினால் மெதுவாக இருக்க வேண்டும்.

முதிர்ந்த காய்களை அறை வெப்பநிலையில் 7 முதல் 10 நாட்கள் வைத்திருந்தால் அவை பழுத்துவிடும்.  இப்பழத்தினை குளிர்பதனப்பெட்டியில் குறைந்த குளிரில் ஆறு வாரங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

 

சப்போட்டா உண்ணும் முறை

இப்பழத்தினை நன்கு ஒடும் நீரில் கழுவி தோலுடன் கடித்தோ அல்லது நறுக்கி விதைகளை நீக்கியோ உண்ண வேண்டும்.

 

சப்போட்டா பற்றிய எச்சரிக்கை

சப்போட்டாவில் டேனின் மற்றும் லேக்டெக்ஸ் காயாக இருக்கும்போது அதிகளவு காணப்படுகிறது. இதனால் காயைச் சாப்பிடும்போது கசப்புசுவையை உணரலாம்.

சப்போட்டாக் காயினை உண்ணும்போது வாய்புண், தொண்டை அழற்சி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்படக்கூடும். அதிகஅளவு சப்போட்டாவினை உண்ணும்போது வயிற்றுவலி ஏற்படும்.

ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த சப்போட்டாவினை அளவோடு உண்டு மகிழ்வோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.