சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?

இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.

வரமாக இருந்த‌ சீமைக் க‌ருவேல மரத்தின்  நன்மைகளையும்,  நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும்,  சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

சீமைக் க‌ருவேல மரத்தின் தாவரவியல் பெயர் பரோசோயிக் ஜூலிஃப்ளோரா என்பதாகும். இத்தாவரம் நாட்டு கருவேல மரத்தை ஒத்து இருப்பதாலும், வெளிநாட்டில் இருந்து வந்ததாலும் சீமைக் க‌ருவேலம் என்று அழைக்கப்படுகிறது.

வயல்களின் ஓரங்களில் வேலிக்காக இம்மரம் வளர்க்கப்பட்டதால் வேலிக்கருவேலை என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தாவரத்தின் தாயகம் மெக்ஸிகோ, கரீபியன் மற்றும் தென்அமெரிக்கா ஆகும்.

ஆனால் உலகில் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள 129 நாடுகளில் இத்தாவரம் காணப்படுகிறது.

 

சீமைக்கருவேல மரத்தின் வளரியல்பு

இம்மரம் வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் நன்கு செழித்து வளரும். 12 மீட்டர் உயரம் வரை வளரும் வளரியல்பை உடைய இம்மரத்தின் ஆணிவேரோடு பக்க வேர்களும் மிகவும் பலம் வாய்ந்தவை. எனவே சிறுசெடியாக உள்ளபோதே இத்தாவரத்தை அகற்றுவது என்பது கடினமான ஒன்றாகும்.

இத்தாவரத்தின் பூக்கள் இளம் பருவதில் பச்சை நிற மொட்டுக்களாக கருவேப்பிலை கீற்று போன்று காணப்படும். இப்பூக்கள் மலரும்போது மஞ்சள் வண்ணத்தில் காணப்படும்.

சீமைக் க‌ருவேல மரம் பூக்களுடன்
சீமைக் க‌ருவேல மரம் பூக்களுடன்

 

பின் அதிலிருந்து பச்சை நிறக்காய்கள் தோன்றுகின்றன. இவை முதிரும்போது மஞ்சள் வண்ணத்தில் உட்புறத்தில் விதைகளைக் கொண்டுள்ளன.

இத்தாவரம் அதிக வெப்பத்தினையும், அதிக வறட்சியையும் தாங்கி வளரும். நீரினைத் தேடி இதன் வேர்கள் 53 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் திறன் வாய்ந்தவை.

இத்தாவரம் அமிலத்தன்மை, காரத்தன்மை வாய்ந்த வளமில்லா நிலங்களிலும் செழித்து வளரும்.

இத்தாவரம் மழை இல்லாமல் வறட்சியாக இருக்கும் காலங்களில் காற்றிலுள்ள ஈரப்பத்தை எடுத்துக் கொள்ளும்.

 

சீமைக்கருவேல மரத்தின் நன்மைகள்

சீமைக் க‌ருவேலம் விதைகளை நீக்கிய காய்களானது இனிப்புகள், ரொட்டிகள், பிஸ்கெட்டுகள் உருவாக்குவதற்கு மூலப் பொருளாக கோதுமைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தாவர விதைகள் சர்க்கரை நோயாளிகளுக்குகான மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தாவரத்தின் பழமானது 12-14 சதவீத புரதச்சத்தினைக் கொண்டுள்ளதால் ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகியவைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பொலிவியா, ஜமைக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தாவரத்தின் பூக்களிலிருந்து தேனீக்கள் மூலம் தேன் எடுக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

இத்தாவரம் எரிபொருளாகவும், இதிலிருந்து தயார் செய்யப்படும் கரியானது பலதொழிற்சாலைகளில் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தாவரத்தின் நார்ச்சத்தானது பேப்பர், கார்போர்டு அட்டைகள், பேப்பர் அட்டைகள் போன்றவை தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தாவரம் விவசாய நிலங்களுக்கு வேலியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தாவரத்தின் பிசினில் பாலிபீனாலிக் தொகுப்புகள், ஃப்ளவினால்கள் காணப்படுகின்றன. இவை தனிப்பட்ட பீனால் பார்மால்டிகைடு ரெசின் உருவாக்கத்தில் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இத்தாவரத்தின் காயிலிருந்து பெரு, சிலி, அர்ஜென்டினா நாடுகளில் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளின் எடை அதிகரிக்க தயார் செய்யப்படும் சிரப்புகள், சருமப் புண்களுக்கான மருந்துகள் ஆகியவற்றில் இத்தாவரக் காய் பயன்படுத்தப்படுகிறது.

கடற்கரை மணல் குன்றுகளில் காற்றினால் மண்ணரிப்பு ஏற்படுவதை இத்தாவரம் தடைசெய்கிறது. இந்தியாவில் மணற்குன்றுகளில் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கும் பட்டியலில் சீமைக் க‌ருவேலம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான வளமில்லா உப்பு உவர்ப்பு நிலங்களில் இத்தாவரம் வளர்ந்து மைக்கோரைஸா பூஞ்சையை வேரில் கொண்டு வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளப்படுத்துகிறது.

நைட்ரஜன், சல்பர், கரையும் உப்புகள், கனிமச் சத்துக்கள் ஆகிய சத்துக்களை இத்தாவரமானது மரத்தின் கீழிலிருந்து 4.5 மீட்டர் ஆழம் வரை நிலைநிறுத்துகிறது.

 

சீமைக் க‌ருவேல மரத்தின் தீமைகள்

இத்தாவரம் நிலத்தின் ஆழத்தில் ஊடுருவிச் சென்று நீரினை உறிஞ்சி விடுவதால் அருகில் உள்ள ஏனைய தாவரங்களுக்கு நீர் கிடைக்கவிடாமல் செய்து பிற தாவரங்களின் வளர்ச்சியை இது தடை செய்கிறது.

மழை இல்லாத காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை உறிஞ்சிக் கொள்ளுவதால் காற்றில் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது. மழை வாய்ப்பினையும் குறைத்து விடுகிறது.

இத்தாவரத்தின் ஆணி வேர் மட்டுமில்லாமல் பக்க வேர்களும் வலிமையானவை. எனவே மழைநீர் நிலத்தினை ஊடுருவிச் செல்வதை இம்மர வேர்கள் தடைசெய்கின்றன.

இத்தாவரம் ஏனைய தாவரங்களைவிட அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடினை வெளியிடுகிறது. அதனால் காற்றில் மாசுபாட்டினை அதிகரிக்கிறது.

வறட்சியிலும், வளமில்லா நிலங்களிலும் செழித்து வளரும் வளரியல்பை உடைய இத்தாவரம் எல்லா இடங்களிலும் எளிதில் பரவி படர்ந்து வளர்வதால் விவசாய நிலங்கள் இத்தாவரத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இதனுடைய வேகமான வளரியல்பால் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து புல்களின் வளர்ச்சியினைக் கூட தடை செய்துவிடுகிறது.

இம்மரத்தின் கூரிய முட்கள் மனிதர்கள் மற்றும் ஏனைய உயிரினங்களையும் பெரிதும் பாதிப்படைச் செய்கின்றன.

பறவையினங்கள் கூட இம்மரத்தில் கூடு கட்டுவதில்லை.

நிலத்தில் ஆழமாகச் சென்று நீரினை உறிஞ்சி விடுவதால் வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவினைக் குறைத்து விடும்.

 

சீமைக்கருவேல மரத்தினால் சுற்றுச்சூழலில் தற்போது உள்ள நிலை

இம்மரமானது 1870-ல் முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் மெல்ல மெல்ல எல்லா இடங்களுக்கும் பரவிய இத்தாவரம் 1970 முதல் 1990 வரை வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

தற்போது இந்தியாவில் ஆந்திரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப்,கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது.

சமையலுக்குக்கான எரிபொருளாகவும், பயிர்களுக்கு வேலிகளாகவும் இத்தாவரம் முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

காலப்போக்கில் சமையலுக்கான எரிபொருளாக இதன் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது.

எளிதில் பரவி வளரும் தன்மை கொண்ட‌ சீமைக் க‌ருவேலம் எங்கும் பரவ ஆரம்பித்தது.

விவசாயம் செய்வது குறைந்ததால் விளை நிலங்களும் நீர் நிலைகளும் முறையாக பராமரிக்கப் படாமல் விடப்பட்டன.

தற்போது நீர்நிலைகள், விவசாய பயன்பாட்டு நிலங்கள் என எங்கும் செழித்து வளர்ந்து எண்ணிக்கையில் அதிகளவு காணப்படுகிறது.

மேலும் பூச்சிகளின் தாக்குதல் இல்லாமலும் உரத் தேவையின்றியும், எல்லா பருவங்களிலும் செழித்து வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

இத்தாவர கட்டைகள் கரிதயார் செய்யவும், தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுவதால் வறட்சியான பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதாரத்தை எவ்வித முதலீடும் இன்றி அதிகரிக்கச் செய்கிறது. அதனால் அப்பகுதி மக்களினால் இத்தாவரம் போற்றப்படுகிறது.

இதனால் வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவதுடன் மழைப்பொழிவும் குறைந்து வறட்சியை அதிகப்படுத்துகிறது.

மேலும் கரியமில வாயுவினை அதிகமாக வெளியிடும் தன்மையுள்ள இத்தாவரமானது தற்போது எண்ணிக்கையில் அதிகரித்து காற்று மாசுபாட்டினையும் அதிகப்படுத்துகிறது.

நீர்நிலைகளில் தற்போது இத்தாவரம் அதிகளவு காணப்படுவதால் நீர்நிலைகளில் நீர் ஊடுருவிச் செல்வதை இம்மர வேர்கள் தடை செய்கின்றன.

நீர் இல்லாதபோது ஆழமாகச் சென்று நிலத்தடி நீரினை உறிஞ்சி வறட்சிக்கு அடிகோல்கின்றன.

நீர்நிலைகளில் அருகில் உள்ள ஏனைய தாவரங்களின் வளர்ச்சியையும் தடைசெய்து சுற்றுச்சூழலின் உயிர்சமநிலையில் பாதிப்பினை இத்தாவரம் ஏற்படுத்துகிறது.

தற்போது எண்ணிக்கையில் அதிகரித்துள்ள சீமைக் க‌ருவேலம் சுற்றுச்சூழலுக்கு சாபமே ஆகும்.

எனவே இத்தாவரத்தின் எண்ணிகையைக் குறைப்பது என்பது அரசாங்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொருவரின் கடமை என்பதினை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

திருக்குறள்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

விளக்கம்: முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.