சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

கொக்கு தலைவனும் இருன்டினிடேவும் கனலியின் கூட்டை வந்தடைந்தன. கூட்டில் கனலி இல்லை. ‘எங்க போயிருப்பாரு?’ என்று யோசித்தப்படியே அப்பகுதியை சுற்றி வந்தது கொக்கு தலைவன். இருன்டினிடேவும் ஆவலோடு காத்திருந்தது.

அப்பொழுது அங்கு வந்த அணில், “யார தேடுறீங்க?” என்று கொக்கைப் பார்த்து கேட்டது.

“இங்க கனலிய தேடி வந்தோம், எங்க போயிருக்காருன்னு தெரியுமா?” என்று கொக்கு கேட்டது.

“கனலி ஐயாவா, ஆடலரசு கூட்டுக்கு போறதா சொல்லிட்டு சாயங்காலமே போனாரு. இன்னும் வரல போல.” என்று அந்த அணில் கூறியது.

“அப்படியா, சரிப்பா நாங்க போய் பாத்துக்கிறோம்” என்று கொக்கு சொன்னது.

அணில் அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, “ஐயா, நாம ஆடலரசு கூட்டுக்கு போகலாம், அங்கதான் கனலி இருக்காராம். வாக்டெய்லும் அங்கதான் இருக்கு” என கொக்கு சொல்ல, “அப்ப உடனே அங்க போகலாம்” என்று இருன்டினிடே கூறியது.

அடுத்த அரைமணிநேர பயணத்திற்கு பின், அவை அங்கு வந்தன. ஆடலரசுவின் கூட்டை அவை தேடிச் சென்றன.

அந்தப்பக்கம், திரும்பி நின்று கொண்டிருந்த கனலியும் ஆடலரசும் ஏதோ பேசிக் கொண்டிருந்தன. அவற்றைக் கண்டவுடன், மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் கொக்கும், இருன்டினிடேவும் அங்குச் சென்றன.

“நண்பா, எப்படி இருக்க?” என்று கொக்கு அழைக்க, கனலியும் ஆடலரசும் திரும்பி பார்த்தன. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருசேர்ந்த மனநிலையில் அவை கொக்கு தலைவனைப் பார்த்தன. கூடவே நின்றுக் கொண்டிருக்கும் இருன்டினிடேவை பார்த்து அவை ஆச்சரியம் அடைந்தன.

“வா, நண்பா” என்று கனலி புன்னகையுடன் அழைத்தது. ஆடலரசும் புன்னகையுடன் வரவேற்பு அளித்தது.

அருகில் வந்தவுடன், “தம்பி நல்லா இருக்கியா?” என்று ஆடலரசுவை நலம் விசாரித்துவிட்டு, “ஒரு மகிழ்ச்சியான செய்தி, இவரு யாருன்னு தெரியுதா?” என்று இருன்டினிடேவை சுட்டிக்காட்டி கொக்கு கேட்டது.

கனலியும் ஆடலரசுவும் இருன்டினிடேவைக் கண்டு வரவேற்றன. அது தோற்றத்தில் வாக்டெய்ல் போன்ற ஸ்வாலோ குருவியை ஒத்து இருந்ததால், “இவரு! இருன்டினிடேவா?” என்று ஐயத்துடன் கேட்டது கனலி.

“ஆமா நண்பா, சரியா கண்டு பிடிச்சுட்டியே, எங்க வாக்டெய்ல்? தம்பிய பார்க்க ஐயா, ஆர்வமா இருக்காரு” என்று மகிழ்ச்சியுடன் சொன்னது கொக்கு.

அப்பொழுது கனலியும் ஆடலரசுவும் அமைதி அடைந்தன. அவை ஒன்றும் பேசவில்லை. “என்ன நண்பா, அமைதியா இருக்க? வாக்டெய்ல் எங்க இருக்கு?” என்று கூறி கூட்டை பார்த்தது கொக்கு. கூட்டில் வாக்டெய்ல் இல்லை.

“ஐயா, வாக்டெய்ல் இங்க இல்ல. இன்னிக்கு சாயங்காலம் தான் இங்க இருந்து புறப்பட்டு போச்சு” என்று சோகத்தோடு ஆடலரசு கூறியது.

உடனே, “ஆமா நண்பா, மாலைல தான் தம்பி புறப்பட்டு போச்சு, ரொம்ப தூரம் போயிருக்காதுன்னு நினைக்கிறேன்” என்றது கனலி.

“அடடா, வாக்டெய்ல தேடி இருன்டினிடே இங்க வந்திருக்காரே, இப்ப வாக்டெய்ல் எங்க போயிருக்கோ?” என்று சோர்வுடன் கொக்கு கூறியது.

இருன்டினிடேவின் மகிழ்ச்சி கலைந்தது. “ஐயா, எந்த திசையில வாக்டெய்ல் போரேன்னு சொல்லிச்சு” என்று இருன்டினிடே கேட்டது.

“ஐயா, கலக்கம் வேணாம். வாக்டெய்ல் தெற்கு திசைய நோக்கி போயிருக்கு” என்று சொன்னது கனலி.

“அப்ப நான் உடனே, கிளம்புறேன். வேகமா போனா வாக்டெய்ல கண்டுபிடிச்சிடுவேன்” என்று இருன்டினிடே நம்பிக்கையுடன் சொல்லியது.

“ஐயா, நாங்க வாக்டெய்ல் மட்டும் தனியா கிளம்பிப் போற‌த அனுமதிக்கல. இருந்தாலும் அதோட தன்னம்பிக்கையால நான் எங்க கூட்டத்த எப்படியாவது கண்டுபிடுச்சிடுவேன்னு சொல்லிச்சி. ஒருவேள இரண்டு நாட்களுக்குள்ல கண்டுபிடிக்க முடியலைன்னா, மறுபடியும் இங்க வந்துடுரேன்னு சொல்லியிருக்கு” என்றது கனலி.

கொக்கு இருன்டினிடேவைப் பார்த்தது. இருன்டினிடே சில நொடிகள் யோசித்தது. “ஐயா, நான் உடனே கிளம்பி வாக்டெய்ல தேட முயற்சிக்கிறேன். அப்படி இல்லைன்னா மூணு நாட்களுக்கு அப்புறம் நான் இங்க வர்றேன். வாக்டெய்ல் வந்தா இங்கயே இருக்கச் சொல்லுங்க” என்று சொன்னது இருன்டினிடே.

“நீங்க சொல்றது தான் சரி” என்று கனலி கூறியது.

“அப்ப நான் புறப்படுறேன். உங்களுக்கு ரொம்ப நன்றிங்க. வரும்போது கொக்கு ஐயா எல்லாத்தையும் சொன்னாரு. ஆடலரசு தான் வாக்டெய்ல கண்டுபிடிச்சுதா? உங்க மருத்துவத்தால வாக்டெய்ல குணமாக்கியிருக்கீங்க. அதுமட்டுமில்லாம, வாக்டெய்ல எங்க கூட சேர்க்க எல்லாருகிட்டேயும் சொல்லி வச்சிருக்கீங்க. நன்றி நண்பர்களே. நன்றி தம்பி.” என்று இருன்டினிடே கூறியது.

“ஐயா, உங்களப் பத்தி வாக்டெய்ல் எங்ககிட்ட நிறைய செய்திகள சொல்லியிருக்கு. அதில இருந்து உங்க ஆளுமை பண்ப தெரிஞ்சுக்கிட்டோம். கூட்டத்துல இருக்கிற ஒரு குட்டி பறவைதான்னு நினைக்காம அத தேடுறதக்கு எவ்வளவு முயற்சி எடுத்துருக்கீங்க. சீக்கிரத்துல வாக்டெய்ல நீங்க கண்டுபிடிச்சு அதோட பெற்றோர்ட சேர்ப்பீங்க” என்று வாழ்த்தியது கனலி.

அதற்கிடையில், இருன்டினிடே வந்திருக்கும் செய்தி பரவி, மரத்திலிருந்து எல்லா பறவைகளும் அங்கு ஒன்றுக் கூடின. இருன்டினிடேவை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தது கனலி. எல்லோரையும் பார்த்து தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டது இருன்டினிடே. அங்கிருந்த பறவைகள் எல்லாம் இருன்டினிடேவை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தன.

பின்னர் கொக்கு தலைவன், “ஐயா, நானும் உங்க கூட வர்றேன்” என்று இருன்டினிடேவிடம் கூறியது.

உடனே, “ஐயா, நீங்க தொடர்ச்சியா பயணத்துல இருக்கீங்க. இங்க வரும்போதே உங்களுக்கு உடல் சோர்வு இருந்தது. அதையும் மீறி, என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க. உங்கள மேலும் கஷ்டப்படுத்த விரும்பல. அதனால, நான் மட்டும் கிளம்புறேன்” என்று கூறியது இருன்டினிடே.

“இரவுல தனியா போகனுமே, அதான்” என்று கொக்கு கூற, கனலியும் அதனை ஆமோதித்தது. இருப்பினும், கொக்கின் உடல்நிலையை எண்ணி, அவற்றை சமாதானம் செய்து அங்கிருந்து நகர்ந்தது இருன்டினிடே.

என்ன தோன்றியதோ தெரியவில்லை. திரும்பி வந்து கொக்கு மற்றும் கனலியை தழுவிக் கொண்டு தனது நட்பை வெளிப்படுத்தியது இருன்டினிடே. மீண்டும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டது. பின்னர் ஆடலரசுவை வெகுவாய் வாழ்த்தியது.

நேரம் நள்ளிரவு ஆகியிருந்தது. அங்கிருந்து இருன்டினிடே புறப்பட்டது. கொக்கு, கனலி, ஆடலரசு மற்றும் மரத்தில் இருந்து எல்லாப் பறவைகளும் அதற்கு பிரியா விடை கொடுத்தன.

தெற்கு நோக்கி பயணிக்க தொடங்கியது இருன்டினிடே. காரிருள் சூழ்ந்திருந்தது. நிலவு வெளிச்சமும் அவ்வளவாக இல்லை. உயரத்தில் சிறகை விரித்துப் பறந்துக் கொண்டே, எங்காவது வாக்டெய்ல் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எவ்வித பறவைகளும் பறக்கவில்லை. தொடர்ந்து ஒரு மணிநேரமாக பயணத்தை அது தொடர்ந்தது.

தொலைவில் சில பறவைகள் ஒன்றாக பறந்துக் கொண்டிருந்தன. தனது கூட்டத்துக்கான பிரத்யேக சமிக்ஞையை இருன்டினிடே தந்தது. பதில் சமிக்ஞையை அது பெறவில்லை. எனினும் விடாமல் குரல் சமிக்ஞை தந்தவாறே அது பறந்துக் கொண்டிருந்தது.

அதிகாலைப் பொழுது வந்தது.

அதற்கு உடல் சோர்வு மிகுதியாகவே, பறக்கும் உயரத்தைக் குறைத்தது. அங்கிருந்த ஒரு மரத்தின் உச்சியில் வந்து அமர்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கியது. வாக்டெய்லும், அதன் கூட்டமும் அதன் நினைவில் வந்து சென்றன.

அமைதியாக ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்க, அங்கு ஒரு பெரிய பறவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. உடனே எச்சரிக்கையாக கிளைகளுக்கிடையில் மறைந்து கொண்டது இருன்டினிடே.

எனினும் அந்த பெரிய பறவையையே அது கண்காணித்துக் கொண்டிருந்தது. சட்டென அந்தப் பெரிய பறவை அருகில் இருந்த மரக்கிளையின் அருகில் வந்து எதையோ தூக்கிச் செல்ல, ஒரு பெரும் சத்தம் எழும்பியது.

அந்த சத்தத்தை கேட்டதும் இருன்டினிடே திடுக்கிட்டது. சத்தம் ஒரு பறவையினுடையது தான். அந்தப் பெரிய பறவை ஏதோ ஒரு சிறிய பறவையை வேட்டையாடிச் செல்வதை இருன்டினிடே உணர்ந்தது.

தொடர்ந்து அந்த வேட்டையாடப்பட்ட சிறிய பறவையின் குரல் ஒலி கேட்க, இருன்டினிடே அதிர்ச்சி அடைந்தது. காரணம், அந்த அபயக் குரல் வாக்டெய்லுடைய‌ குரல் போன்றே இருந்தது.

தாமதமின்றி மரக்கிளையில் இருந்து வெளிவந்து மேலெழும்ப, அந்த பெரிய பறவை மேலே பறந்தது. அதன் கால் இடுக்கில் சிறிய பறவை சிக்கிக் கொண்டிருந்தது.

தைரியத்துடன், அந்த பெரிய பறவையின் அருகில் சென்றது இருன்டினிடே. சிக்குண்டு தவித்த சிறிய பறவை வாக்டெய்ல் தான்.

உடனே, “ஐயா, ஐயா” என வாக்டெய்ல் கத்த, “வாக்டெய்ல் நீ பயப்படாத, நான் காப்பாத்துறேன்” என்று கூறி, அந்த பெரிய பறவையின் கால்களில் வலுவாக தனது அலகால் கொத்தியது இருன்டினிடே.

வலி தாங்க முடியாமல் வாக்டெய்லை தனது கால்விரல்களில் இருந்து அது விடுவித்தது. நல்ல வேளையாக, தனது முதுகில் நோட்டு புத்தகம் வைத்திருந்த பையை மாட்டியிருந்ததால், வாக்டெய்லுக்கு காயம் ஏதுவும் ஏற்படவில்லை.

அப்பொழுது “ஐயா, வாங்க போகலாம்” என்று வாக்டெய்ல் கூற, “நீ உடனே கீழ போ” என்று இருன்டினிடே கூறியது. அந்த பெரிய பறவை இப்பொழுது இருன்டினிடேவை தனது கால் நகங்களால் பற்றிக் கொண்டிருந்தது.

இருன்டினிடே தள‌ராமல் அந்த பறவையின் கால்களை தனது அலகால் கொத்திக் கொண்டிருந்தது. அதைக் கவனித்த வாக்டெய்லும் வீரத்துடன் சென்று அந்தப் பெரிய பறவையை தாக்கியது.

உடனே, இருன்டினிடேவை கால்களில் பற்றிக் கொண்டு கீழ்நோக்கி மரங்களுக்கு நடுவே பறந்து சென்றது அந்த பெரிய பறவை. எனினும், இருன்டினிடே மற்றும் வாக்டெய்லின் தொடர் தற்காப்புச் செயலால், அந்தப் பெரிய பறவை சோர்ந்துப் போனது. அதன் கால்களிலும் காயம் ஏற்படவே, இருன்டினிடேவை விடுவித்துவிட்டு சல்லென பறந்துச் சென்றது அந்தப் பெரிய பறவை.

கோபத்தால் அந்த பெரிய பறவையை தைரியமுடன் வாக்டெய்ல் துரத்திச் சென்றது. அந்தப் பெரிய பறவை கவனிக்காமல் சென்றதால், எதிரில் இருந்து ஒரு மரக்கிளையில் மோதியது. அதில் அதன் கழுத்து உடைய, அப்படியே கீழே சரிந்து விழுந்து உயிர் இழந்தது.

அதைக் கண்டதும் வாக்டெய்ல் திடுக்கிட்டு நின்றது. பின்னர் இருன்டினிடேவை நோக்கி திரும்பி வர, இருன்டினிடே அங்கிருந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்துக் கொண்டு, “வாக்டெய்ல், வாக்டெய்ல்” என்று அழைத்தது.

உடனே, இருன்டினிடேவின் அருகில் வாக்டெய்ல் சென்றது.

“ஐயா, நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? நம்ம கூட்டத்தை தேடி தான் நான் வந்தேன். நீங்க எப்படி இங்க வந்தீங்க?”

“வாக்டெய்ல், நீ குணமாயி வந்துட்டே ரொம்ப மகிழ்ச்சி. கொக்கு தலைவன் மூலமா நடந்த எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். இரவு, கனலி ஐயாவையும் ஆடலரசுவையும் போய் பார்த்துட்டுதான் வர்றேன். நீ தெற்கு நோக்கி கிளம்பிட்டதா சொன்னாங்க. அதான் உன்ன தேடிக்கிட்டு வந்தேன். எது எப்படியே உன்ன கண்டுபிச்சாச்சு. சரி நீ நல்லா இருக்கல்ல. உனக்கு எதுவும் காயம் இல்லையே?”

“எனக்கு எந்த காயமும் இல்லை ஐயா. நீங்க வந்துதான் என்ன காப்பாத்திட்டீங்களே.”

“சரி வாக்டெய்ல், அந்த பெரிய பறவ போயிடுச்சா”

“ஐயா, அது வேகமா போனுதுல்ல, தெரியாம மரத்துல மோதி செத்துடிச்சி”

“அடப் பாவமே, அந்த பறவைக்கு இப்படி நடந்திருக்க கூடாது. சரி வாக்டெய்ல், உங்க அம்மா அப்பாகிட்ட உன்ன சீக்கிரம் சேர்க்கனும். கிளம்பு.”

அப்பொழுது தான் வாக்டெய்ல் கவனித்தது. இருன்டினிடே தனது வயிற்றில் இருக்கி ஏதோ கட்டு போட்டுக் கொண்டிருந்ததை.

“ஐயா, என்ன கட்டு? என்ன ஆச்சு ஐயா?” பதறியது வாக்டெய்ல்.

“அந்தப் பறவையோட கால் நகம் பட்டதுல்ல‌ வந்த காயம் தான். ஒன்னும் இல்லை. நீ உடனே புறப்படு”

“ஐயா, உங்க வயித்துல இரத்தம் வடியுதே. இப்ப முதல்ல மருந்து போட்டுக்கிட்டு அப்புறம் போகலாம் என்ன மருந்து போடணும். சொல்லுங்க ஐயா நான் உடனே போய் எடுத்துகிட்டு வர்றேன்”

புன்னகையுடன், “வாக்டெய்ல், நீ பயப்படாத கிளம்பு”, மன உறுதியிடன் மேலெழுந்தது இருன்டினிடே.

வேறு வழியின்றி வாக்டெய்லும் புறப்பட்டது. அவை இரண்டும் தொடர்ந்து பயணித்தன. இருன்டினிடேவின் காயத்தில் இருந்து இரத்தம் வழிந்தது. வலியையும் தாங்கிக் கொண்டு வாக்டெய்லை அழைத்துக் கொண்டு அது பறந்தது.

காலைப் பொழுது விடிய துவங்கியது. ஒருவழியாக தனது கூட்டம் இருந்த இடத்தை அவை இரண்டும் நெருங்கின.

நேற்றிலிருந்து தலைவர் இருன்டினிடேவை காணாததால் சோகத்துடன் ஸ்வாலோ குருவிகள் அங்கு இருந்தன.

“நண்பர்களே, நம்ம வாக்டெய்ல் வந்துடிச்சு” என்று வேகமாக கத்திக் கொண்டே சல்லென தரையிறங்கியது இருன்டினிடே. அதனையடுத்து வாக்டெய்லும் தரையிறங்கியது.

தலைவர் இருன்டினிடே, வாக்டெய்லை அழைத்துக் கொண்டு வந்த செய்தி கூட்டத்தினரிடையே சடுதியில் பர‌வியது.

உடனே அவை எல்லாம் அங்கு ஒன்று கூடின. வாக்டெய்லின் அம்மாவும், அப்பாவும் ஓடோடி வந்து, வாக்டெய்லை தழுவிக் கொண்டன. “நல்லா இருக்கியா? இவ்வளவு நாட்கள் எங்க இருந்த?” என்று அவைக் கேட்டன.

எல்லா குருவிகளும் வாக்டெய்லை நோக்கிச் சென்றன. வாக்டெய்லோ, “தலைவர் ஐயாவ பாருங்க” என்று சோகத்துடன் சொல்ல, குருவிகளின் பார்வை இருன்டினிடேவின் பக்கம் திரும்பியது.

அப்பொழுது, நின்றுக் கொண்டிருந்த இருன்டினிடே நிலைதடுமாறி கீழே விழுந்தது. குருவிகள் பதற்றம் அடைந்து அதன் பக்கம் ஓடின. இருன்டினிடேவின் வயிற்றில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. “ஐயா என்ன ஆச்சு? உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று குருவிகள் அழுதுக் கொண்டே கேட்க, நடந்தவற்றை வாக்டெய்ல் கூறியது.

சில மூத்த குருவிகள் மருந்து கொண்டுவர புறப்பட முற்பட்டன.

“நண்பர்களே, நீங்க போக வேண்டாம், இங்க இருங்க, நான் சொல்றத கேளுங்க” என்று குருவிகளை இருன்டினிடே கட்டளையிட்டது.

தலைவர் ஐயாவின் கட்டளையை ஏற்று குருவிகள் எல்லாம் அழுது கொண்டே நின்றன. இருன்டினிடேவின் உடல் அசைவு மெல்ல குறையத் துவங்கிற்று. அது, வாக்டெய்லையும் அதன் பெற்றோரையும் அழைத்தது. அவை அழுது கொண்டே அதன் அருகில் வந்து நின்றன.

வாக்டெய்ல் உயிர் பிழைத்தது எப்படி என்பதை இருன்டினிடே கூறியது. கொக்கு தலைவன், கனலி மற்றும் ஆடலரசு செய்த பேருதவியினையும் அது எடுத்துரைத்தது. எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய பறவையால் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு யாரும் கவலை அடைய வேண்டாம் என அது கேட்டுக் கொண்டது.

குருவிகள் வெகுவாய் கலங்கின.

“அழாதீங்க நண்பர்களே, நான் செல்றத கவனமா கேளுங்க.” என்று கூறி, மீண்டும் தாயகமான வடமுனைப் பகுதிக்கு எப்பொழுது செல்ல வேண்டும், அதற்கான பருவநிலை மாற்றம் பற்றிய குறிப்புகளை இருன்டினிடே தெளிவாய் கூறியது.

“ஐயா, நீங்களும் எங்ககூட வருவீங்க, உங்கள எப்படியாவது காப்பாற்றுவோம்” என்று குருவிகள் தேம்பிக் கொண்டே கூறின.

ஆனால் அதன் பிறகு இருன்டினிடே எதுவும் சொல்லவில்லை. மௌனத்துடன் கூடிய புன்முறுவல் அதனிடத்தில் தெரிந்தது. அதன் நினைவில் மீண்டும் கொக்கு தலைவன், கனலி, ஆடலரசு மற்றும் சொர்க்க வனத்து பறவைகள் வந்தன. அவை செய்த நன்மைகளை அது எண்ணிப் பார்த்தது.

பின்னர், வழியில் சந்தித்த அதன் நீண்ட கால நண்பர்கள் அதன் நினைவிற்கு வந்தன. இறுதியில் அதன் தாயகமான வடமுனைப் பகுதி நினைவிற்கு வந்தது. அது வாழ்ந்த வந்த கூடு. சுற்றித் திரிந்த இடம். போன்றவற்றை எண்ணிப் பார்த்தது.

நெடும்பயணம் தொடங்கிய பொழுது அது சிந்திய கண்ணீர் நினைவிற்கு வந்தது. அது புன்னகைத்தது. இப்பொழுது அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தான் சொர்க்க வனத்தை காண வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதும், காணாமல் போன வாக்டெய்லையும் சொன்னபடி கண்டுபிடித்து அதன் பெற்றோரிடம் சேர்த்து விட்டதைக் குறித்தும் இருன்டினிடே மகிழ்ந்தது.

இனி அதற்கென எவ்வித ஆசையும் இல்லை. அதற்கென இவ்வுலகில் எதுவும் இல்லை. அதன் இறகுகள் நிலத்தில் சரிந்தன. கண்களின் அசைவு நின்றது. தனது இறுதி மூச்சை இழுத்துவிட்டது இருன்டினிடே.

உடனே சில மூத்த குருவிகள் இருன்டினிடேவை பரிசோதித்தன. அதன் உடலில் மூச்சுக் காற்று இல்லை என்பதை அவை உறுதி செய்துக் கொண்டன. கண்ணீர் மல்க, “தலைவர் ஐயா, இறந்துட்டாரு” என்று கூற, ஸ்வாலோ குருவிகள் “ஓ ஓவென கதறின.”

பெருமழை, வெள்ளம், நோய், என எல்லா பாதிப்புகளில் இருந்தும் பாதுகாத்து குருவிக் கூட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்திய உண்மை தலைவனை இழந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அவை பெருமூச்சு விட்டு அழுது புலம்பின.

சொன்ன வாக்கை காப்பாற்றிய உன்னத தலைவனை இழந்து குருவிகள் திகைத்து நின்றன. ஸ்வாலோ குருவிகளின் அழுகுரல் விண்ணை முட்டியது. சடசடவென பெருமழை பொழியத் துவங்கியது. இருன்டினிடேவின் உடல் அருகே ஸ்வாலோ குருவிகள் நின்றுக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதுக் கொண்டிருந்தன.

பூமியின் வடமுனைப் பகுதியிலிருந்து வந்த ஸ்வாலோ குருவிக் கூட்டத்தின் தலைவன் இருன்டினிடே மறைந்த செய்தி, சொர்க்க வனம் முழுவதும் அதிவிரைவாகப் பரவியது.

கொக்கு தலைவன், கனலி மற்றும் ஆடலரசுவுக்கும் இருன்டினிடேவின் மறைவுச் செய்தி தெரிய வந்தது. அதை அறிந்து அவை பெரிதும் வருந்தின. எப்படியாவது அங்கு செல்ல வேண்டும் என்று கனலி எண்ணியது.

உடனே, நீண்ட தூரம் பயணிக்கும் ஆற்றல் கொண்ட நாரை மற்றும் கொக்கு பறவைகளின் துணையோடு ஸ்வாலோ குருவிகள் இருந்த இடம் நோக்கி கனலி, ஆடலரசு மற்றும் கொக்கு தலைவன் உள்ளிட்ட பறவைகள் பயணித்தன.

அன்று மதியத்திற்குள் அவை அவ்விடம் வந்துச் சேர்ந்தன. ஆடலரசு ஓடோடிச் சென்று வாக்டெய்லை தேற்றியது. மூத்த ஸ்வாலோ குருவிகளை கனலியும் கொக்கு தலைவனும் தேற்றின.

அருகில் இருந்த சொர்க்க வனத்துப் பறவைகளும் இருன்டினிடே இறந்த துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டன.

மாலைப் பொழுது வந்தது. மீண்டும், கனலியும், கொக்கு தலைவனும் மூத்த குருவிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டன. அதன் பின்னர், இருன்டினிடேவின் உடலை அடக்கம் செய்ய அவை தீர்மானித்தன.

ஒரு உன்னத தலைவனுக்கு உண்டான மரியாதையுடன், இருன்டினிடேவின் உடலை அங்கிருந்த ஒரு நிலத்தில் அவை நல்லடக்கம் செய்தன. அந்த இடத்தில் பல்வேறு மரங்களின் விதைகளை சொர்க்க வனத்து பறவைகள் கொண்டுவந்து விதைத்தன.

இருன்டினிடே மறைந்து மூன்று நாட்கள் ஆயிற்று. ஸ்வாலோ குருவிகள் உணவு உண்ணாமல் துக்கத்தில் மூழ்கியிருந்தன. கனலியும் கொக்கும், ஸ்வாலோ குருவிகளை எப்படியோ சமாதனம் செய்து உணவு உண்ணச் செய்தன.

அதன் பின்னர், கொக்கு மற்றும் நாரைகள் உதவியுடன் கனலியும் ஆடலரசும் தங்களது கூட்டிற்கு திரும்பின.

மெல்ல மெல்ல ஸ்வாலோ குருவிகள் இருன்டினிடேவின் இறப்பை ஏற்றுக் கொள்ள துவங்கின.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது

சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.