தன்னம்பிக்கை நிறைந்த நாகேஷ்

நாகேஷ் வானொலி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது தன்னம்பிக்கை பற்றி தனது கருத்தினைத் தெரிவித்தார். அது பற்றிப் பார்ப்போம்.

வானலியில் பேட்டி எடுப்பவர் நாகேஷிடம், “நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?”  என்று கேட்டார்.

அதற்கு நாகேஷ், ” நான் கவலையே படமாட்டேன் சார்” என்றார்

ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,  குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு கட்டடம் கட்டுறோம்.

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு அந்தக் கட்டிடத்துக்கு வர்ணம் எல்லாம் அடிக்கிறோம்.

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து, கிரஹப் பிரவேசத்தன்று கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், எங்கயோ மறைத்து வைப்பார்கள்.

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.

வாழையை ஆடு மாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.

“நான் வாழை அல்ல! சவுக்குமரம்!” என்று நாகேஷ் கூறினார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.