தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்

உலகத்திலுள்ள மொழிகளில் எல்லாம் பழமையான மொழி நம் தமிழ்மொழி என்று பலரும் கண்டறிந்து கூறியிருக்கின்றனர். ஓலைச்சுவடி முதல் கணிப்பொறியின் இணையம் வரை தமிழ் தன் தடத்தைப் பதிக்கிறது.

காலத்திற்கு ஏற்ப மொழி தன்னைப் புதுப்பிக்கிறது. அந்தப் புதுமையைப் புகுத்துபவர்கள்தான் கவிஞர்கள். இசைத்தமிழ், இயல்தமிழ், நாடகத்தமிழ் என்று பெரும் பிரிவுகளாக தமிழைப் பிரித்துள்ளனர்.

தாளத்தோடும், சந்தத்தோடும் வார்த்தைகளைக் கேட்கும்போது, அது ஆனந்தத்தின் எல்லைக்கே கேட்பவரைக் கொண்டு சென்று விடும் என்றால் அது மிகையாகாது.

தமிழ் நாடகங்களான அரிச்சந்திர மயான கண்டம், வள்ளி திருமணம், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவற்றில் வந்த நாடகத்தமிழ் பாடல்களை நம் முன்னோர் இரசித்துப் பாடினார்கள்.

அரிச்சந்திரன் மயானம் காத்தாளும் போதும் உண்மையே பேசினான் என்ற கருத்து சமுதாயத்தில் பரவியது. தேசப்பற்றைப் பற்றிப் பேசும்போது வீரபாண்டிய கட்டபொம்மனை இன்று வரை யாரும் மறக்க முடியாது. தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளைக் கூறியது வள்ளி திருமணம்.

நாடகக் காலம் மறைந்து ஊமைப்படம், பேசும் படம், கருப்பு வெள்ளைப் படம் பின்பு கலர்படம் என்று திரைப்படம் புதிய பரிணாமத்தில் வளர்ந்ததை நாம் அறிவோம்.

திரை இசைப் பாடல்கள் மனிதர்களின் மனதுக்கு அருமருந்தாக அமைந்தது என்றால் அது இன்றுவரை உண்மை என்றே கூறலாம்.

இந்தியா ஒரு விவசாயநாடு என்று அறிந்தால்,

‘கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி விவசாயி,

விவசாயி’

என்று திரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் தோன்றிப் பாடியதையும், நடித்ததையும் யாரும் மறக்க முடியாது.

‘பறக்க வேணும் என்று ஒருசின்னக் கொடி

அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி’

என்று எழுதிய கவிஞரையும், இசையமைத்த மேதையையும், பாடிய பாடகரையும், நடித்த நடிகரையும் நாம் அறிவோம்

சமதர்மத் தோட்டத்தில் பூத்த சிவப்பு ரோஜா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். (மேலே உள்ள படத்தில் இருப்பவர் அவர்தான்.) கேள்வி பதிலாக பாடல் எழுத முடியும் என்று நிரூபித்து வெற்றி கொண்டவர் அவர்.

‘காடு வெளஞ் சென்ன மச்சான்

நமக்கு கையும் காலும் தானே மிச்சம்

கையும் காலும் தானே மிச்சம்’ என்று கதாநாயகி பாடுவார்.

அதற்கு கதாநாயகன் பதில் கூறுவது போல

‘காடு வெளையட்டும் பெண்ணே

காலம் இருக்குது பின்னே

நமக்குக் காலம் இருக்குது பின்னே’ என்று நம்பிக்கையூட்டும் வரிகளைப் பாடுவார்.

தமிழ் என்னும் இலக்கியச் சோலையில் பூத்த அற்புதமான மலர் என்றால் அது கவியரசு கண்ணதாசன் தான். அவர் பாடாத பாடல்களே கிடையாது என்று கூறலாம்.

காதல், பக்தி, தத்துவம், சமூகநீதி, குடும்பம், உறவுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பிறப்பு முதல் இறப்பு வரை பாடிய அற்புத கவிஞன் கண்ணதாசன்.

‘காலமிது காலமிது கண் உறங்கு மகளே’ என்றும்,

‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ என்றும் பாடியுள்ளார்.

‘பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா?

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே’ என்றம் தன்நிலையைப் பாடியவர்.

அது அனைவருக்கும் வாழ்வியலில் பொருந்தும் கருத்தாக உள்ளது.

‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்

அவன் காதலித்து வேதனையில் வாழ வேண்டும்

பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்

அவன் பெண் என்றால் என்னவென்று உணர வேண்டும்’

என்று உண்மையை உரக்கச் சொன்னவர். மேலே உள்ள வரிகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்.

பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகம் இல்லை என்ற உலகப் பொதுமறையின் கருத்தை எளிய தமிழில் இனிமையாகக் கூறியவர் கண்ணதாசன். இப்பாடல் அனைவரின் மனக்காயத்திற்கு மருந்து என்றே கூறலாம்.

‘அண்ணன் என்னடா? தம்பி என்னடா?

அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில்

அர்த்தம் என்னடா? காசில்லாதவன் குடும்பத்திலே

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே வீணடா?

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்

அண்ணன் தம்பிகள் தானடா?

அண்ணன் தம்பிகள் தானடா?’

என்று கேள்விக்கு விடையும் கூறியுள்ளார் கவியரசர்.

மனிதரில் எத்தனை நிறங்கள், அவர் மனதினில் எத்தனை குணங்கள் என்பதை வரிசைப்படுத்தியும் கூறியுள்ளார் கவியரசு கண்ணதாசன்.
அவரின் கைவண்ணத்தில் உருவான காலத்தால் அழியாத வரிகள் இவை

‘ஆசை, களவு, கோபம், கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை உள்ளவன் மனித வடிவில் தெய்வம்

உண்மைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும்போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்’ என்று கூறுகிறார்.

மனிதனும் தெய்வமாகலாம் என்பது மேலே அவர் எழுதிய வரிகளின் அடிநாதம் என்று கூறலாம்.

‘வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ’

என்ற பாடல் வரிகளின் மூலம் நிலையாமை என்ற தத்துவத்தை தனக்கே உரிய பாணியில் கூறியவர் கண்ணதாசன். அவரின் பாடல்களுக்காக தமிழ் உலகம் என்றும் அவரைக் கொண்டாடும்.

கண்ணதாசன் வாழ்ந்த சமயத்தில் வாழ்ந்து தடம் பதித்த அற்புத மனிதர் காவியக் கவிஞர் வாலி ஆவார்.

சீனிவாசன், பொன்னமாள் தவப்புதல்வனாய் பிறந்தவர்.

திருவரங்கம் திருதலத்தில் தமிழ்மகனாய் வளர்ந்தவர்.

ரங்கராஜன் எனும் பெயரில் ஊருக்குள் இருந்தவர்.

பட்டுக்கோட்டைப் பாசவலை பாடல் கேட்டு நிமிர்ந்தவர்.

வானொலியில் வேலை பார்த்து வாலியாய் வலம் வந்தவர்.

ஓவியக் கவிஞனாய் வந்து காவியக்கவிஞனாய் மாறியவர்.

வாலி அவதாரப் புருசனை அரிதாரம் பூசாமல் அற்புதமாய் வடித்தவர்.

பாண்டவர் பூமியை பைங்கவியில் கொடுத்தவர்.

அந்த வாலிபக் கவிஞரைப் பற்றி வரும் வாரம் எழுதுகிறேன்.

முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராச‌பாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராச‌பாளையம்
9486027221

One Reply to “தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.