பருத்திச் செடி

பூங்காவனம் என்றொரு காடு இருந்தது. அதில் பரந்து விரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது.

அதில் ஆண்கிளி, பெண்கிளி, கிளிக்குஞ்சுகள் ஆகியவற்றைக் கொண்ட கிளிக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது.

ஆலமரத்துக்கு அருகில் கொய்யா மற்றும் வாழை மரங்களும் பருத்திச் செடியும் இருந்தன. கிளிக் குடும்பம் ஆலமரத்தின் பழங்களை கொத்தித் தின்னும்.

மேலும் கொய்யா மரம், வாழை மரம் ஆகியவற்றின் பழங்களையும் கொத்தித் தின்று மகிழ்வுடன் வாழ்ந்து வந்தது.

மரங்களின் பழங்களைக் கொத்தி தின்பதால் கிளிகள் எப்போதும் மரங்களுடன் பேசிக் கொண்டே இருந்தன.

பருத்திச் செடியை மட்டும் அவை கண்டு கொள்வதே இல்லை. ஆனால் பருத்திச் செடியோ கிளிக் குடும்பத்துடன் நட்புக் கொள்ள விரும்பியது.

அது கிளிக் குடும்பத்திடம் “கிளிகளே, நீங்கள் ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?. என்னோட மட்டும் நட்புக் கொள்ள மறுக்கிறீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு கிளிகளும் “பருத்திச் செடியே, உன்னால் உங்களுக்கு என்ன பயன்?. நாங்கள் குடி இருக்கும் ஆலமரம் எங்களுக்கு வீடாக இருக்கிறது. நாங்கள் உண்ண பழங்கள் தருகின்றது.

கொய்யா மற்றும் வாழை மரங்கள் எங்களுக்கு கனிகள் தருகின்றன. அதனால் அவற்றோடு மட்டும்தான் நட்புக் கொள்வோம். உனது நட்பு எங்களுக்கு தேவை இல்லை.” என்று கோபத்துடன் கூறி விட்டு சென்றன.

கிளிகள் பேசியதைக் கேட்டதும் பருத்திச் செடி மிகவும் வருத்தம் கொண்டது.

சிறிது நாட்கள் கழித்து வசந்த காலம் முடிந்து குளிர் காலம் தொடங்கியது. குளிர் காலத்தின் ஆரம்பத்தில் லேசான குளிர் வீசியது. நாளாக நாளாக குளிர் அதிகமாக தாக்கியது.

ஒரு நாள் இரவில் கடும்பனி வாட்டியது. குளிரைத் தாங்க முடியாமல் கிளிகளும், கிளிக்குஞ்சுகளும் நடுங்கின.
இப்படியே, குளிர் வாட்டினால் தம்முடைய குஞ்சுகள் இறந்து விடுமோ என்று கிளிகள் அஞ்சின.

அவை குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஏதேனும் வழி உண்டா என தேடி அலைந்தன.

அப்போது பருத்திச் செடி கிளிகளை அழைத்து “கிளிகளே, என்னுடைய பஞ்சுகளை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பஞ்சானது குளிரிலிருந்து உங்களையும், குழந்தைகளையும் காப்பாற்றும்.” என்று கூறியது.

கிளிகளும் வேண்டா வெறுப்பாக பஞ்சினை எடுத்துக் கொண்டு சென்றன. தங்களுடைய வீட்டில் பஞ்சினைப் பரப்பி வைத்தன.

அன்று கடும்குளிர் பெய்தும் பஞ்சானது இதமான வெப்பத்தைத் தந்து கிளிக்குடும்பத்தைப் பாதுகாத்தது. கிளிகளுக்கு பருத்திச் செடியின் அன்பு அப்போதுதான் புரிந்தது.

மறுநாள் காலை அவை பருத்திச் செடியிடம் வந்து நன்றி தெரிவித்துக் கொண்டன.

பருத்திச் செடியிடம் வந்து “பருத்திச் செடியே வெறுப்பைக் காட்டிய எங்களை குளிரிலிருந்து காப்பாற்றிய உன்னை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம். இன்று முதல் நீயும் எங்களுக்கு நண்பன்தான்.” என்று கூறின.

அன்று முதல் பருத்திச் செடியும், கிளிகளும் நண்பர்களாக இருந்தன.

 

நம்மை வெறுப்பர்களிடமும் அன்பு காட்ட வேண்டும், யாரிடமும் எதனையும் எதிர்பார்த்து நட்புக் கொள்ளக் கூடாது ஆகிய கருத்துக்களை பருத்திச் செடி என்ற இக்கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.