பாமக‌ தேர்தல் அறிக்கை 2016

பாமக‌ தேர்தல் அறிக்கை 2016 – பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2016க்காக அளித்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.

பதிவிறக்க – To download – PMK-Election-Manifesto-2016

 

கல்வி

* கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GSDP)4% ஆக அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.

* மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.

* மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளித் தர இயக்குனர் (Director of School Standards) நியமிக்கப்படுவார்.

* மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (CBSE) இணையான புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

* மாணவர்களின் புத்தக சுமை குறைக்கப்படும். மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டு இ-பேக் (e-bag) என்ற மென்பொருள் மூலம் பாடங்கள் தொகுத்து வழங்கப்படும். இதனால் மாணவர்கள் புத்தகப்பை சுமந்துச் செல்ல வேண்டியிருக்காது.

* மாணவர்கள் எளிதாக பள்ளிக்குச் சென்றுவர மாணவர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.

* தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9-ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

*- அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.

* தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.

* திறன் சார் கல்வி முறை (Skill Based Education), அறிவுசார் கல்வி முறை, தொழிற்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.

* பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மை குழுக்களாக (School Management Committee) மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.

* விளையாட்டு, தொழிற்பயிற்சி, நீதிபோதனை, யோகா பயிற்சி ஆகியவற்றுக்கு அதிக பாட வேலைகள் ஒதுக்கப்படும்.

* மாணவர்களுக்கான பேனா முதல் இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள் மற்றும் ஐ-பேட் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இலவச இணைய இணைப்பு தரப்படும்.

* மாணவர்களுக்கு ஆண்டுதோ-றும் மருத்துவ ஆய்வு வழங்கப்படும். மருத்துவ ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

* தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

 

உயர்கல்வி

* உயர் கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

* பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார் கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் ( Polytechnics) நீட்டிக்கப்படும். கல்லூரிப் படிப்பு முடிக்கும் போது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

* தொழில்நுட்ப தொழில்கல்வி மற்றும் பயிற்சியை (Technical Vocational Education and Training – TVET) வழங்க உலகத்தரம் கொண்ட தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதில் படிப்பவர்களுக்கு வேலை உறுதி என்ற நிலை உருவாக்கப்படும்.

* மருத்துவக் கல்லூரி இல்லாத 15 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள். விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி.

* சென்னையில் இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research – IISER) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் 6 ஒருமை பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும். ஆராய்ச்சிகளை செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

* தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology – TIT) அமைக்கப்படும். இந்த மண்டலங்களில் தலா ஒரு வேளாண் கல்லூரியும், சட்டக்கல்லூரியும் அமைக்கப்படும்.

* பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (University constituent colleges) அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். அவற்றில் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர்.

 

 

மருத்துவம்

* தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது.

* இலவச மருத்துவம் வழங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு சுகாதார இயக்கம் (Tamil Nadu Health Mission) என்ற புதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும்.

* புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கான அதிகவிலை கொண்ட மருந்துகளை வாங்குவதற்கு உதவ தனி நிதியம்.

* மருந்து விலையை கட்டுப்படுத்த Generic மருந்துகள் ஊக்குவிக்கப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வசதிகளைக் கொண்ட அதிஉயர் சிறப்பு மருத்துவமனை (Super Speciality Hospital) அமைக்கப்படும். இம்மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளுடன் தகவல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படும்.

* கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால உதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள 79,394 கிராமங்களிலும் ஆஷாக்கள் (Accredited Social Health Activists-ASHAs) நியமிக்கப்படுவார்கள். இவர்கள் கருவுற்றப் பெண்களுக்கு பேறு கால உதவிகளைச் செய்வார்கள்.

* அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், 24 மணிநேர முதலுதவி வழங்கும் மருத்துவமனைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

* உலகின் தலைசிறந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ், ஸ்டேன்ஃபோர்டு உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களுடன் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் இணைக்கப்படும்.

* மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு ஏற்படுத்தப்படும்.

* குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, அவர்களின் தாய்க்கு தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.

* பள்ளிக்கூட மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின்கீழ், அனைத்துக் கொள்கைகளுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இதற்காக மருத்துவ ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

* நோய்களைத் தடுக்கும் நோக்குடன் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

 

வேளாண்மை

* வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். உழவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் இதில் சேர்க்கப்படும்.

* தோட்டக்கலைத்துறை, நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றுக்கு தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களையும் சேர்த்து வேளாண் துறைக்கு மொத்தம் 3 அமைச்சர்கள் இருப்பார்கள்.

* வேளாண்மைக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்டவையும், மின்சார மோட்டாரும் இலவசமாக வழங்கப்படும்.

* உழவர்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஓர் டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.

* கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,200 ஆகவும் உயர்த்தப்படும்.

* உழவர்களின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; உழவர் ஊதியக்குழு அமைக்கப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதன ஆலைகள், ஏற்றுமதி மண்டலங்கள் அமைக்கப்படும். இவற்றில் வேளாண் பொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* தமிழகத்தில் 4 மண்டல வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கும் இஸ்ரேலிய வேளாண்துறைக்கும் இடையே ஒத்துழைப்பு உடன்பாடு செய்யப்படும்.

* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாது.

* காவிரி பாசன மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். பிற மாவட்டங்களில் தேவையான அளவு அமைக்கப்படும்.

* தில்லி, பெங்களூரில் செயல்படுவது போன்று திருச்சியில் சஃபல் சந்தை (Safal Market) அமைக்கப்படும்.

* பனையிலிருந்து பதனீரும், தென்னையிலிருந்து நீராவும் (NEERA) இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும்.

* நன்செய் நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

நீர்ப்பாசனம்

* நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம்… தனி அமைச்சர்

* தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.

* அவினாசி&அத்திக்கடவு, பாண்டியாறு – புன்னம்புழா, மேட்டூர் உபரி நீர் பாசனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 33 லட்சம் ஹெக்டேரிலிருந்து 60 லட்சம் ஹெக்டேராகவும், விவசாயம் செய்யப்படும் நிலங்களின் பரப்பு 48 லட்சம் ஹெக்டேரில் இருந்து ஒரு கோடி ஹெக்டேராகவும் அதிகரிக்கப்படும்.

* ஆறுகள் மற்றும் கால்வாய்களில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.

* தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வீராணம் ஏரி, பொன்னேரி ஏரி, ஆர்.எஸ்.மங்கலம் ஏரி உள்ளிட்ட அனைத்துப் பெரிய ஏரிகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

மது ஒழிப்பு

* தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பா.ம.க. ஆட்சி அமைந்தபின் முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில் தான்.

* தமிழ்நாட்டில் உள்ள மது ஆலைகளின் உரிமம் இரத்து செய்யப்பட்டு மூடப்படும்.

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுதல், கள்ளச்சாரயத்தைத் தடுத்தல், குடிநோயர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* மதுவால் கணவனை இழந்தப் பெண்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.

* கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

* கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர் கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

* கள்ளச்சாராய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 6 மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு அளிக்கப்படும். தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணையில் வெளிவரமுடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும்.

* கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.

 

 

ஊழல் ஒழிப்பு

* ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே லோக் அயுக்தா சட்டம் (Lokayukta act) கொண்டுவரப்படும்.

* முதலமைச்சரும், அமைச்சர்களும் லோக் அயுக்தா அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

* பொதுச்சேவை பெரும் உரிமைச் சட்டம் (Right to Public Service act) கொண்டு வரப்படும்.

* தகவல் ஆணையம் 10 உறுப்பினர்கள் மற்றும் தலைவரைக் கொண்ட வெளிப்படையான அமைப்பாக மாற்றப்படும்.

* தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்படும். மின் ஆளுமை (e-governance) முறையில் இணைக்கப்படும்.

* மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்களும், துறைகள் அளவில் செயலாளர்களும் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அவர்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட அலுவலகங்களில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் மட்டுமின்றி, அதைத் தடுக்கத் தவறிய பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொறுத்தப்படும்.
* ஊழல் குறித்து புகார் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி சேவை வழங்கப்படும்.

 

 

நிர்வாகம்

* முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

* ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

* அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத் தலைநகரில் நடத்தப்படும். அதேபோல், மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையிலான குழு சென்று ஆய்வு நடத்தும்.

* அரசின் முடிவுகள் பெரும்பாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் எடுக்கப்படும். சட்டமுன்வரைவுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாற்றத்துடன் நிறைவேற்றப்படும்.

* அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில், தமிழகம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக தலைமைச் செயலாளர் நிலையிலான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அம் மண்டலத்தில் நிர்வாகம் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படும்.

* திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்.

* தமிழ்நாட்டில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

* மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க முதலமைச்சர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இலவச தொலைபேசி சேவை தொடங்கப்படும்.

 

 

சட்ட மேலவை

* தமிழ்நாட்டில் சட்டமேலவை மீண்டும் ஏற்படுத்தப்படும்.

* ஆண்டுக்கு நான்குமுறை சட்டப்பேரவை கூடுவதும், 100 நாட்கள் பேரவைக் கூட்டம் நடப்பதும் உறுதி செய்யப்படும். பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

* நிதிநிலை தயாரிப்புக்கு முன்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

* நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக நடவடிக்கை திட்ட விவர அறிக்கை (Action Taken Report), தாக்க அறிக்கை (Outcome Budget), பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) ஆகியவை தாக்கல் செய்யப்படும்.

* வேளாண் துறைக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Agriculture) அமைக்கப்படும்.

* காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சுதந்திரமான காவல் ஆணையம் (Independent Police Authority) அமைக்கப்படும்.

* அனைத்து காவல் நிலையங்களிலும் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும்.

* உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

 

 

தொழில் வளர்ச்சி

* தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

* புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி 3 வாரங்களில் வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச்சாளர முறையில் (Single Window Clearance) அளிக்கப்படும்.

* ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தொழில் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

* வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முன்வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அ-னுமதியும், நிலம் மற்றும் மானியமும் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியில் 60% சென்னையிலும், 15% கோவையிலும் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் 25% மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிலையை மாற்ற தமிழகம் முழுவதும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

* தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை தொடங்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அங்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மதுரை & தூத்துக்குடி தொழில் தாழ்வாரத்தை விரைவாக உருவாக்கி, புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொழிற்சாலைகளில் பணியாற்ற சிறந்த மனித வளத்தை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழிற்கல்வி நிலையமும், ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் அமைக்கப்படும்.

* ஓசூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, தருமபுரி வரையுள்ள பகுதி தகவல் தொழில்நுட்பத் தாழ்வாரமாக மாற்றப்படும்.

* புதிய தொழில் தொடங்க முன்வருவோருக்கு உடனடியாக நிலம் வழங்க வசதியாக ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில் ஒரு சதுர அடி கூட விளைநிலமாக இருக்காது.

* சிறு&குறு விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு 50 யூனிட்களிலிருந்து 100 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.

* விசைத்தறியாளர்கள் சூரியஒளி மின்உற்பத்தி கட்டமைப்பை அமைப்பதற்கான மூலப் பொருட்கள் 90 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

* பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதுடன், விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை விற்பனை செய்ய ஜவுளி சந்தையும் ஆரம்பிக்கப்படும்.

* விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

 

 

தொழில் முதலீட்டை ஈர்க்க ஆணையரகங்கள்

* தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையர்களாக நியமிக்கப்படுவர்.

* ஒவ்வொரு மண்டலத்திலும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து அதற்கான முதலீட்டை ஈர்க்கும் பணிகளில் பொருளாதார ஆணையர்கள் ஈடுபடுவார்கள்.

* உலக அளவில் ஏற்படும் தொழில்துறை முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசுக்கு இந்த அமைப்பு பரிந்துரைக்கும்.

* தொழில்தொடங்க முன்வருவோருக்கு ஆலோசனை வழங்குதல், முதலமைச்சரைச் சந்தித்துப் பேச வகை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபடும்.

* வெளிநாடுகளில் நடைபெறும் பொருளாதார மாநாடுகள், தொழில் முதலீட்டுச் சந்திப்புகள் ஆகியவற்றில் மண்டலப் பொருளாதார ஆணையர்களுடன், தமிழக முதலமைச்சர் பங்கேற்று முதலீட்டைத் திரட்டுவார்கள்.

 

 

வேலைவாய்ப்பு

* ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்.

* 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

* 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* சுய தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படும். முறைசாரா தொழில் தொடங்குவதற்காக அரசே உத்தரவாதம் அளித்து கடன் பெற்றுத் தரும்.

* இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

* குறைந்தபட்சம் 10 பேருக்கு வேலை வழங்கக்கூடிய புதிய நிறுவனங்களைத் தொடங்க அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வட்டியில்லா கடனாகவோ / அரசின் பங்கு மூலதனமாகவோ வழங்கப்படும்.

 

 

தகவல் தொழில்நுட்பத் துறை

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, தனிப்பிரிவு தொடங்கப்படும்.

* பணி இழந்த தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கு அரசு செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, இரவு நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

 

 

ஒரு கோடி பேருக்கு வேலை

* தமிழ்நாட்டில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தமிழ்நாட்டில் 6 பெரிய துறைமுகங்களும், 20 சிறிய துறைமுகங்களும் இருப்பதைப் பயன்படுத்தியும், புதிய கிடங்குகளை உருவாக்கியும் தமிழகத்தை சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக (International Warehousing Hub) மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழக அரசுக்-குச் சொந்தமான கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்கள் விரிவாக்கப்படும்.

* சென்னையில் வாகனம் சார்ந்த தொழில்கள் அமைக்கவும், கோவை மற்றும் திருப்பூரில் ஆடை சார்ந்த தொழில்கள் அமைக்கவும் வெளிநாடுகளில் முதலமைச்சர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று முதலீடுகளைத் திரட்டி வருவார்.

* உலக மருத்துவ கவனிப்பு மையமாக தமிழகம் மாற்றப்படும்.

* சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் மருத்துவச் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படும்.

* மருத்துவம் சார்ந்த அயல்பணி வணிக மையமாக (Health Care BPO) தமிழகம் உருவாக்கப்படும்.

* தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்து பல்லாயிரக்கணக்கான செவிலியர்களை உருவாக்கி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை பெற்றுத்தரப்படும்.

* கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களை அதிக அளவில் தொடங்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

* தமிழகத்தின் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1.90 லட்சம் கோடியாகவும், தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த ஏற்றுமதி ரூ.78,400 கோடியாகவும் உள்ளது. இது இரட்டிப்பாக்கப்படும்.

* மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

 

 

பொருளாதார வளர்ச்சி

* பொருளாதார விஷயங்களில் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார வல்லுனர் குழு அமைக்கப்படும்.

* தமிழகத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 10 விழுக்காட்டுக்கும் கூடுதலாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* சர்க்கரை மீதான 5% மதிப்பு கூட்டு வரி ரத்து செய்யப்படும்.

* நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும்.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் இலவசம்

* அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.

******************

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.