புத்தியில்லாதவர்களின் செயல்கள்

செல்லக் குட்டிகளே, புத்தியில்லாதவர்களின் செயல்கள் பற்றி நான் இன்னைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன்.

இந்த கதைளைப் படிச்சப் பிறகு புத்தியில்லாதவர்களிடம் எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

தோட்டக்காரர்

முன்னொரு காலத்தில் காட்டின் அருகே அழகிய தோட்டம் ஒன்று இருந்தது. அந்த தோட்டத்தில் பழம் தரும் மரங்கள், மூலிகைச் செடிகள், அழகான கொடிகள் உள்ளிட்ட நிறைய தாவரங்கள் இருந்தன.

அந்த அழகிய தோட்டத்தை ஒரு தோட்டக்காரர் தினமும் நீர் ஊற்றி பராமரித்து வந்தார். காட்டில் இருந்த சில குரங்குகள் தோட்டக்காரரின் நடவடிக்கைகளை தினமும் கவனித்து வந்தன. சில நாட்களில் அவை தோட்டகாரரிடம் நட்பாகப் பழகி சிநேகம் கொண்டன.

தோட்டக்காரருக்கு தோட்டத்தைப் பராமரிப்பதில் அவை உதவி செய்தன. ஒரு நாள் தோட்டக்காரர் வெளியூரில் வசிக்கும் தன் மகனைப் பார்க்க எண்ணினார்.

ஆனால் தோட்டத்தைப் பராமரிக்க வேறு யாரும் இல்லாததால் அவரால் வெளியூர் செல்ல இயலவில்லை. அதனால் மிகவும் மனம் வருத்தம் கொண்டார்.

குரங்குகள் தோட்டக்காரரின் மனவருத்தத்தைக் கண்டன. அவை தோட்டக்காரரிடம் “தோட்டக்கார ஐயா, தங்களின் மனவருத்தத்திற்கு காரணம் என்ன?” என்று கேட்டன.

தோட்டக்காரரும் “என் அருமைத் தோழர்களே. எனது மகன் வெளியூரில் வசிக்கிறான். நான் அவனை சென்று பார்க்க வேண்டும்.” என்றார்.

குரங்குகள் தோட்டக்காரரிடம் “நல்ல விசயம் தானே. தாங்கள் சென்று தங்களின் மகனை காண வேண்டியது தானே” என்றன.

அதற்கு தோட்டக்காரர் “அதில்தான் சிக்கல் ஒன்று இருக்கிறது. நான் வெளியூர் சென்று விட்டால் யார் எனது தோட்டத்தில் இருக்கும் செடி, கொடி, மரங்களைப் பராமரிப்பது?. இவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சாவிட்டால் இவை வாடிவிடும். இதுதான் எனது கவலை.” என்று கூறினார்.

குரங்குகள் “ஐயா, தாங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களின் தோட்டத்தை நீங்கள் வெளியூரிலிருந்து வரும்வரைப் பார்த்துக் கொள்கிறோம்.” என்று கூறின.

தோட்டக்காரரும் “மிக்க மகிழ்ச்சி. நான் வரும்வரை நீங்கள் தாவரங்களுக்கு தேவையான நீரினை ஊற்றி பாதுகாத்து வாருங்கள்” என்று கூறினார்.

“ஐயா, எவற்றிற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை மட்டும் கூறுங்கள்” என்று குரங்குகள் கேட்டன.

அதற்கு தோட்டக்காரர் “ஆழமான வேரினை உடையவைகளுக்கு அதிக நீரும், ஆழம் குறைந்த வேரினை உடையவைகளுக்கு குறைந்த நீரும் ஊற்றுங்கள்” என்று கூறினார்.

குரங்குகளும் சந்தோசமாக “சரி ஐயா, நீங்கள் நாளைக்கு வெளியூருக்கு கிளம்புங்கள். நீங்கள் வரும்வரை பத்திரமாக தோட்டத்தைப் பார்த்துக் கொள்வோம்” என்று கூறின.

 

குரங்குகளின் வேலை

தோட்டக்காரரும் மறுநாள் வெளியூருக்கு கிளம்பினார். ஒருசில நாட்கள் கழித்து அவர் தோட்டத்திற்கு வந்தார். தோட்டத்தில் இருந்த தாவரங்கள் எல்லாம் பிடுங்கப்பட்டுக் கிடந்தன.

இதனைக் கண்ட தோட்டக்காரர் அதிர்ச்சி அடைந்தார். அவர் குரங்குகளிடம் “ஏன் தாவரங்களைப் பிடுங்கினீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவை “நீங்கள் தானே ஆழமான வேரினை உடையவைகளுக்கு அதிக நீரும், ஆழம் குறைந்த வேரினை உடையவைகளுக்கு குறைந்த நீரும் ஊற்றுங்கள் என்று கூறினீர்கள். ஆதலால் எவற்றின் வேர் ஆழமாக உள்ளது, எவை குறைந்த ஆழத்தினை உடைய வேர்களைக் கொண்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள தாவரங்களைப் பிடுங்கினோம்.” என்று பதில் கூறின.

தோட்டக்காரர் புத்தியில்லாதவர்களின் செயல்களை எண்ணி வருந்தினார்.

இக்கதை கூறும் கருத்து

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பான செயல்களை ஒப்படைக்கக் கூடாது.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.