மகளிர் தினம்

மகளிர் தினம் என்பது சமூக, பொருளாதார, கலாச்சாரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றில் பெண்களின் சாதனைகளை நினைவு கூறும் நாள். இத்தினம் பரவலாக உலகத்தின் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

20-ம் நூற்றாண்டில் வட அமெரிக்கா, ஐரோப்பாவில் பெண் தொழிலாளர்களின் போராட்டத்தின் எதிரொலியே மகளிர் தினத்திற்கு அடித்தளம் அமைத்தது. இந்நாளானது உலக பணிபுரியும் மகளிருக்கான நாள் என்றே தொடங்கி மகளிர் தினம் என உருமாறியது.

பெண்களுக்கான உரிமை, அங்கீகாரம் மற்றும் அன்பு ஆகியவை பெண்களுக்கு கிடைத்தலே இத்தினத்தின் நோக்கம் ஆகும். உலகின் பல நாடுகள் இத்தினத்தில் விடுமுறை அளித்து இத்தினத்தை சிறப்பித்துள்ளன.இன்னம் சில இடங்களில் அன்பைப் பரிமாறும் விழாவாகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்களிடம் அரசியல், சமூக விழிப்புணர்வு மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பது இத்தினத்தின் சாராம்சம் ஆகும். இத்தினத்தின்போது வைலட் கலர் ரிப்பன் அணிவதை ஒரு சில நாட்டுப் பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

மகளிர் தினம் தோன்றிய விதம்

1789ல் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின்போது பெண்கள் ஆண்களுக்கு சமமான உரிமைகள், அரசனது ஆலோசனைக் குழுவில் பிரதிநித்துவம், ஆண்களுக்கு நிகராக பெண்களை நடத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆட்சி செய்த லூயிஸ் பிலிப் என்ற மன்னன் போராட்டத்தை ஒடுக்க எண்ணி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டான். இறுதியில் தோல்வி அடைந்து ஆட்சியிலிருந்து விலகினான்.

பிரெஞ்சு புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துதல், பெண்களை ஒதுக்குதல் ஆகியவற்றை எதிர்த்து பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலியில் பெண் வாக்குரிமை கேட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 1848-ல் பிரான்ஸ் நாட்டு பிரஷ்யனில் 2-வது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் என்ற அரசனின், அரசவை ஆலோசனை குழுவில் பெண்களுக்கான‌ இடம் மற்றும் வாக்குரிமை வழங்கிய நாள் மார்ச் -8 ஆகும். மேலும் 1857 மார்ச் -8ல் அமெரிக்காவில் நெசவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் மகளிர் தினம் மார்ச் -8ல் கடைபிடிக்கப்படுவதற்கு அடித்தளம் அமைத்தன.

1908-ல் அமெரிக்காவில் உலகப் பெண்கள் ஆடை உற்பத்தி தொழிலாளர் சங்கம் சம ஊதியம் மற்றும் வேலை நேரத்தைக் குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. இதனை நினைவு கூறும் விதமாக 1909 பிப்ரவரி 28-ல் அமெரிக்க குடியரசுக் கட்சியால் நியூயார்க் நகரில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

1910 ஆகஸ்ட்டில் டென்மார்க் நகரில் நடைபெற்ற உலக பெண்கள் மாநாட்டில் சமூக ஆர்வலர் கிளாரா ஜெட்கின் என்பவரால் மகளிர் தினம் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது. இம்மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்துகொண்டு இதற்கு ஆதரவு தந்தனர். ஆனால் இம்மாநாட்டில் மகளிர் தினத்திற்கான நாள் எதுவும் குறித்து தீர்வு செய்யப்படவில்லை.

1911-மார்ச் 19-ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் ஆண்‍ – பெண் சமஉரிமை, பெண் வாக்குரிமை கேட்டு பேரணி, மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றை மேற்கொண்டனர். 1911 மார்ச் 25-ல் நியூயார்க்கில் முக்கோண தீ விபத்து ஏற்பட்டது.  140 உழைக்கும் பெண்கள் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் வெளிநாட்டவர் மற்றும் வயிற்றுப் பிழைப்புக்காக நியூயார்க்கில் வசித்தவர்கள். இதனை எதிர்த்து பாதுகாப்பான முறையில் தனக்கும் மற்றும் தன் குடும்பத்திற்கும் உழைக்க உரிமை வேண்டும் என்ற வாசகம் உடைய அட்டையை ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.

1920-ல் சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கெலன்ரா என்ற பெண் உலக மகளிர் தினம் மார்ச் -8 என்று பிரகடனம் செய்தார். அதிலிருந்து ஆண்டு தோறும் மகளிர் தினம் மார்ச் -8 அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1945ல் ஐ.நா சபையானது உலகில் ஆணுக்கு பெண் சமம் என்பதை அதிகார பூர்வமாக வெளியிட்டது. 1975-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை உலக பெண்கள் வருடமாக பிரகடனப்படுத்தியது.

 

இந்தியாவில் பெண்கள் நிலை

இந்தியாவில் சங்க காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி அறிவு பெற்றிருந்ததோடு அரசியல், சமய மற்றும் சமூக செயல்களிலும் ஈடுபட்டனர். ஆண்டாள், ஒளவையார், காக்கைப் பாடினியார், மங்கையர்கரசியார், குந்தவை நாச்சியார் ஆகியோரை எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஆனால் இடைக்காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு, கல்வி அறிவு இன்றி வீட்டிற்குள்ளே முடக்கப்பட்டனர். சதி என்னும் கணவன் இறந்த உடன் கணவனுடன் உயிருடன் மனைவியையும் எரிக்கும் உடன்கட்டை ஏறுதல் நிகழ்ச்சியால் கணவனை இழந்த பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

குழந்தைத் திருமணம் மற்றும் வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். குழந்தைத் திருமணத்தில் இளமைப்பருவத்தில் கணவன் இறக்க நேரிட்டால் பெண்களுக்கு மறு மண உரிமை மறுக்கப்பட்டது. கோவிலில் தாசிகள் என்னும் பெண்கள் தங்கள் ஆடல் கலை மூலம் இறைதொண்டு செய்து வந்தனர்.

பெண்கள் பொட்டு கட்டுதல் என்னும் நிகழ்ச்சியின் மூலம் கோயில் தாசிகளாக மாற்றப்பட்டனர். நாளடைவில் இவர்கள் நிலைமை மாறி பணக்காரர்களின் ஆசை நாயகிகளாக‌ மாற்றப்பட்டனர். இவர்களும், இவர்களுடைய வாரிசுகளும் திருமணம் செய்யும் உரிமை சமுதாயத்தில் மறுக்கப்பட்டது. மேலும் பெண் சிசுக்கொலை நடந்தேறியது.

1852-ல் சதித் தடைச்சட்டம், 1856-ல் விதவை மறுமணம், 1872-ல் பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணத் தடைச்சட்டம், 1956ல் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம், 1976ல் சமபணிக்கு சம ஊதியம் (ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம்), 1992-ல் பெண் சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை திட்டம் ஆகிய திட்டங்கள் பெண்களின் நலன் காக்க இந்திய‌ அரசால் இயற்றப்பட்டுள்ளன.

எனினும் நடைமுறையில் இவை முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் உள்ளன.

 

சமூகத்தில் பெண்களின் பங்கு

ஒவ்வொரு ஆணின் வெற்றி, மரியாதை, கவுரவம் ஆகியவை அனைத்தும் தாய், சகோதரி, மகள், பாட்டி, பேத்தி என எல்லா நிலைகளிலும் உள்ள பெண்களைச் சார்ந்தே உள்ளன.

ஒரு குழந்தைக்கு நல்லொழுக்கங்களை கற்பித்து நல்ல மனிதனாக வளர்க்கும் பொறுப்பு குழந்தையின் தாயையே சாரும். நல்ல மனிதனை உருவாக்கி நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பை பெண்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

எனவே சமுதாய மறுமலர்ச்சி என்பது பெண்களின் சுதந்திரம், உரிமை மற்றும் அவர்களின் வளர்ச்சியினாலேயே நிகழும் என்பது மறுக்க முடியாத வெளிப்படையான உண்மை.

மேலும் பெண்ணானவள் அவளுக்கு உள்ள‌ சுதந்திரம் மற்றும் உரிமையைக் கொண்டு நற்செயல்களை செய்யும் போதுதான் மகளிர் தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.