மாடித் தோட்டம் அமைப்பது எப்படி?

மாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்.

மாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

அதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

இடுபொருள்கள்

ஒரு தாவரம் நன்கு வளர வேண்டுமென்றால் வளமான மண் தேவை. ஆனால் மண்வைத்து மாடித் தோட்டம் அமைத்தால் மாடி காங்கிரீட் விரைவில் பலமிழந்துவிடும். ஆகையால் மண்ணிற்கு பதிலாக நல்ல வளமான இடுபொருட்களை இட வேண்டும். மாட்டுச்சாணமும், மக்கிய தேங்காய் நார் கழிவுகளும் கனமில்லாத வளமான இடுபொருள்களாகும். தேங்காய் நார் கழிவுகள் கேயர்கேக் வடிவில் கிடைக்கின்றது. மக்கிய மாட்டுச்சாண‌ம் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த எருவாட்டியை பயன்படுத்தலாம். தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கும், மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கும், சமையலறை கழிவு ஒரு பங்கும் இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

காய்கனிகள் தேர்வு செய்தல்

மாடித் தோட்டத்திற்கு நாட்டு காய்கனிகள் மிகச் சிறந்தவை. செடிக்காய்களான வெண்டைக்காய், மிளகாய், கொத்தவரங்காய் ஆகியவை சின்னபைகளில் நேரடியாக விதைக்கலாம். இவற்றில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி மட்டும் விதைத்து நாற்று மூலம் நடவு செய்ய வேண்டும்.

அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை பெரிய பை அல்லது 20லிட்டர் வாளிகளில் நடலாம். இவற்றில் அவரை, புடலங்காய், பாகற்காய் கொடி காய்களாகும், அவற்றை பந்தலிட்டு படரவிட வேண்டும். அவரைகாயில் கொடியும் உள்ளது, செடியும் உள்ளது.

குற்று மரங்கள்

குற்று மரங்கள் என்று சொன்னால் பூ மரங்கள், பழ மரங்கள் என இருவகைகளாக பிரிக்கலாம்.

பழ மரங்கள்

பழ வகைகளில் மாதுளைக்கு 50லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்ளாஸ்டிக்பை அல்லது 50 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம். முருங்கை, கொய்யா, வாழைக்கு 75 லிட்டர் முதல் 100 லிட்டர் டிரம்களை பயன்படுத்தலாம்.

பூ மரங்கள்

இட்லிபூ (வெட்சி), செவ்வ‌ரளி, மஞ்சளரளி ஆகியவற்றை 20லிட்டர் பெயிண்ட் வாளிகளில் வளர்க்கலாம்.

பூச்செடிகள்

பூச்செடிகள் என்றால் மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, சாமந்தி (செவ்வந்தி), சம்மங்கி ஆகியவற்றை மொட்டைமாடித் தோட்டத்தில் பயிரிடலாம். அவற்றில் கொடி வகைகளான மல்லிகை, முல்லை, பிச்சி ஆகியவற்றை 50லிட்டர் டிரம்களில் வளர்க்கலாம். இவற்றை பந்தலிட்டு கொடியாகவும் வளர்க்கலாம் கவாத்து செய்து குற்று செடியாகவும் வளர்க்கலாம். ரோஜாவை 10லிட்டர் வாளிகளில் வளர்க்கலாம்.

குறிப்பு :

ரோஜாவகைளில் எட்வர்டு ரோஸ் (பன்னீர் ரோஸ்), ஆந்திரரெட், செவன்டே ரோஸ் ஆகியவை சிறந்தன. இவை எல்லாவகை காலநிலைக்கும் உகந்தவை.

சாமந்தியில் வெள்ளை மற்றும் மஞ்சள் சிறந்தவை. இவை குளிர்ச்சியான காலங்களில் மட்டும் பூக்கும். மலைவாழ்நிலங்களில் எல்லா பருவங்களிலும் பூக்கும்.

கீரை வகைகள்

கொத்தமல்லி, புதினா, பாலாகீரை, காசினிகீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, பொன்னாங்கனிக்கீரை, மிளகுதக்காளிக்கீரை, ஆகியவற்றை வீட்டு மாடித் தோட்டத்தில் பயிரிடலாம்.

கீரைகளில் – கொத்தமல்லி, சிறுகீரை, அரைக்கீரை, பாலாகீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, மிளகுதக்காளிக்கீரை ஆகியவற்றை விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம்.

புதினா, பொன்னாங்கனிக்கீரை ஆகியவற்றை குச்சி (போத்துகள்) மூலம் நடவு செய்து உற்பத்தி செய்யலாம்.

வல்லாரைகீரை மட்டும் வேர்கள் மூலம் நடவு செய்து உற்பத்தி செய்ய முடியும்.

பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் முறை

பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் போது நன்கு சுத்தம் செய்தல் வேண்டும்.

அதிகப்படியான தண்ணீர் செடியின் அருகில் இருந்தால் செடியின் வேர்கள் அழுகிவிடும். ஆகையால் தண்ணீர் வெளியேற டிரம் மற்றும் வாளிகளின் அடிப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் துளை இட வேண்டும்.

பிளாஸ்டிக் டிரம் மற்றும் வாளிகளை பயன்படுத்தும் போது அவற்றில் மண்புழுக்கள் வராது.

மேற்கூறிய முறையில் மாடித் தோட்டம் அமைக்கலாம்.

 

8 Replies to “மாடித் தோட்டம் அமைப்பது எப்படி?”

  1. எங்களுக்கும் மாடிதோட்டம் அமைக்க வேண்டும் அதற்க்கு தேவையான விதைகள் பலித்தின் கவர் எங்கு வாங்க வேண்டும் சென்னையில்.

  2. எங்களுக்கும் மாடிதோட்டம் அமைக்க வேண்டும் அதற்க்கு தேவையான விதைகள் பலித்தின் கவர் எங்கு வாங்க வேண்டும் மதுரையில் 9498116989 Hakkim.s

  3. மதுரை நெல்பேட்டையில் வேளாண் அங்காடியில் விதைகள் தவிர மற்ற பொருட்களை வாங்கலாம்.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இருப்பு திருநகர் 2ம் நிறுத்தம் வேளாண் அங்காடியில் விதைகள் உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

    மேலும் விபரங்களுக்கு திரு அறிவழகன் அவர்களை 9842463192 என்ற எண்ணில் மாலை வேளை அழையுங்கள். நன்றி.

  4. இயற்கை மாடித்தோட்டத்திற்கு தேவையான எல்லா முலிகை செடிகள் அரிய வகை முலிகை செடிகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் என்னிடம் கிடைக்கும் தொடர்ப்புக்கு: Maarslla Expor No. 8/1 1st Main Road, Annanager East, Chennai 102. Phone : 9884599988 / 9042331979 / 044-26205002. Free delivery in chennai.

  5. எங்கள் வீட்டில் 350 சதுர அடி மொட்டை மாடி உள்ளது இதில் தோட்டம் அமைக்க முடியுமா
    முடியுமானால் எங்கு யாரை அனுக வேண்டும்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.