மீல்மேக்கர் குருமா செய்வது எப்படி?

மீல்மேக்கர் குருமா சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் ஆகும். மீல்மேக்கரை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைப்பதே வழக்கம்.

இந்த குருமாவில் மீல்மேக்கர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இனி சுவையான மீல்மேக்கர் குருமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மீல்மேக்கர் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – ஒரு எண்ணம் (பெரியது)

உப்பு – தேவையான அளவு

மசால் அரைக்க

மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்

சீரகப் பொடி – ¾ ஸ்பூன்

வத்தல் பொடி – ¾ ஸ்பூன்

மஞ்சள் பொடி – சிறிதளவு

தேங்காய் –  ¼ மூடி (நடுத்தரமானது)

தாளிக்க

கடுகு – ½ ஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கொத்து

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

செய்முறை

முதலில் மீல்மேக்கர் நன்கு மூழ்குமளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

மீல்மேக்கரை கொதித்த நீரில் போட்டு மூடி வைக்கவும்.

மீல்மேக்கர் நன்கு கொதிநீரில் ஊறிவிடும்.

ஐந்து நிமிடம் கழித்து மீல்மேக்கரை குளிர்ந்த நீரில் போடவும்.

பின் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கழித்து மீல்மேக்கரை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

ஊறிய மீல்மேக்கர்
ஊறிய மீல்மேக்கர்

 

பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

 

சதுரத் துண்டுகளாக பெரிய வெங்காயம்
சதுரத் துண்டுகளாக பெரிய வெங்காயம்

 

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

பின் மல்லிப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, துருவிய தேங்காய், தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மசாலா தயார் செய்து கொள்ளவும்.

 

மசாலா
மசாலா

 

பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தை சேர்த்து வதக்கும்போது
வெங்காயத்தை சேர்த்து வதக்கும்போது

 

வெங்காயம் வதங்கிய பின் மசாலா, தேவையான உப்பு  மற்றும் தேவையான தண்ணீர் ஆகியவைச் சேர்க்கவும்.

 

மசாலா சேர்த்ததும்
மசாலா சேர்த்ததும்

 

மசாலா, உப்பு  மற்றும் தண்ணீர் சேர்த்ததும்
மசாலா, உப்பு  மற்றும் தண்ணீர் சேர்த்ததும்

 

பின் ஒரு நிமிடம் கழித்து அதனுடன் மீல்மேக்கர் சேர்த்து கொதிக்க விடவும்.

 

மீல்மேக்கர் சேர்த்ததும்
மீல்மேக்கர் சேர்த்ததும்

 

மசால் வாடை போய் எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

 

தயார் நிலையில் மீல்மேக்கர் குருமா
தயார் நிலையில் மீல்மேக்கர் குருமா

 

சுவையான மீல்மேக்கர் குருமா தயார்.

இதனை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை ஆகியவற்றுடன் இணைத்து சாப்பிடலாம்.

 

சுவையான மீல்மேக்கர் குருமா
சுவையான மீல்மேக்கர் குருமா

 

குறிப்பு

மீல்மேக்கர் குருமாவிற்கு சிறிய மீல்மேக்கரைத் தேர்வு செய்யவும்.

விருப்பம் உள்ளவர்கள் மல்லிப் பொடி, சீரகப் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக மசாலா பொடி 1½ ஸ்பூன் அளவிற்கு 100 கிராம் மீல்மேக்கருக்கு சேர்த்து குருமா தயார் செய்யலாம்.

விருப்பம் உள்ளவர்கள் மல்லி இலையை பொடியாக நறுக்கி கடைசியில் தூவி இறக்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.