முட்டாளிடம் வாதிடாதே

முட்டாளிடம் வாதிடாதே என்பது ஒரு நல்ல கதை.

நம்முடைய வாழ்கையில் அடிக்கடி பலரிடம் வாதிடவே நேரிடுகிறது. அதனால் நமக்கு நம்முடைய நேரமும், வேலையும் வீணாகி விடுகிறது.

நாம் யாரிடமாவது வாதிட நேரும்போது அவர்கள் முட்டாள்களாக இருந்தால் அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது என்பதை உணர்த்தும் கதை இதோ உங்களுக்காக.

ஒரு காட்டில் கழுதை ஒன்றுக்கும் புலி ஒன்றும் வாக்கு வாதம் நேர்ந்தது. அதாவது வானத்தின் நிறம் ஊதா என்று புலி சொன்னது. கழுதையோ பச்சை என்றது.

இருவருக்கும் இடையே நெடுநேரம் வாக்கு வாதம் நடந்தது. பின்னர் இருவரும் தங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கான சரியான தீர்ப்பை காட்டிற்கான சிங்கத்திடம் தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்தனர். இருவரும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தனர்.

கழுதை சிங்கத்திடம் “காட்டு ராஜாவே, வானத்தின் நிறம் பச்சை தானே?. இந்த புலி வானத்தின் நிறம் ஊதா என்கின்றது. நான் பச்சை என்கிறேன். நீங்கள் இதற்கு சரியான தீர்ப்பினைக் கூறுங்கள்” என்று கூறியது.

கழுதை கூறியதைக் கேட்டதும் “ஆமாம், கழுதையே, நீ சொல்வது சரிதான். வானத்தின் நிறம் பச்சைதான்.” என்றது.

சிங்கம் கூறியதைக் கேட்டதும் கழுதை “இந்த புலி நெடுநேரமாக வானத்தின் நிறம் பச்சை என்று கூறி என்னை கோபப்படுத்திக் கொண்டிருக்கிறது. நீங்கள்தான் புலிக்கு சரியான தண்டனை கொடுங்கள்.” என்று கூறியது.

கழுதைக் கூறியதைக் கேட்டதும் சிங்கம் “இந்த புலியை ஒரு வருடம் வரை சிறையில் அடையுங்கள்.” என்று கூறியது.

சிங்கம் கூறியதைக் கேட்டதும் கழுதை சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது. காடு முழுவதும் சென்று நடந்தவைகளைக் கூறி தன்னைத் தானே பெருமை அடித்துக் கொண்டு இங்கும் அங்கும் ஓடியது.

புலி சிங்கத்திடம் “வானத்தின் நிறம் ஊதா தானே.” என்றது. சிங்கம் அதற்கு “ஆமாம்” என்றது.

“நான் கூறியது சரிதானே. பின்னர் நீங்கள் ஏன் எனக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை அளித்தீர்கள்?” என்று கேட்டது.

சிங்கம் அதற்கு “வீரமும் விவேகமும் நிறைந்த நீ உனக்கு சற்றும் பொருத்தமில்லாத அறிவில்லாத முட்டாள் கழுதையிடம் தவறான‌ விசயத்திற்குப் போய் விவாதம் செய்தது முதல் தவறு.

அதனை என்னிடம்வரை கொண்டு வந்தது இரண்டாவது தவறு. எனவேதான் உனக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இனிமேலாவது முட்டாளிடம் வாதிடாதே” என்று கூறியது.

முட்டாள்களிடம் ஒருபோதும் வாதிடக் கூடாது என்பதை அறிந்து அவர்களை புறந்தள்ளி வாழ்வில் முன்னேறுங்கள்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.