மேற்குத் தொடர்ச்சி மலை பறவைகள்

மேற்குத் தொடர்ச்சி மலை பறவைகள் என்னும் இக்கட்டுரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் பறவைகள் பற்றி காணப்போகிறோம்.

பறவைகள் உலகின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. சில பறவைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படும். புல பறவைகள் நாடு விட்டு நாடு செல்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 508 வகையான பறவையினங்கள் காணப்படுகின்றன.

கர்நாடாகாவின் ஐநூறு வகையான பறவைகளில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலையை சார்ந்தவை.

16 வகையான பறவையினங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகின்றன.

அவற்றைப் பற்றி பார்ப்போம்.

நீலகிரி சிரிப்பான்( Nilgiri laughing thrush)

நீலகிரி சிரிப்பான்
நீலகிரி சிரிப்பான்

 

மலைகளின் உயரத்தில் வசிக்கும் இது மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரியிலும், அடர்ந்த காடுகளிலும் வேலிகளிலும் காணப்படுகின்றது.

இது பத்து பன்னிரெண்டு பறவைகள் கொண்ட கூட்டமாக காணப்படும். இவை க்கீ-க்கீ-க்கீ என ஒன்றை தொடர்ந்து ஒன்றாக கத்தத் தொடங்கி பின் குழு முழுவதும் சிரிப்பது போல கலகலப்பான குரல் எழுப்பும்.

நீலகிரி காட்டுப் புறா (Nilgiri wood pigeon)

நீலகிரி காட்டுப் புறா
நீலகிரி காட்டுப் புறா

 

அடர்நிறத்தில் இருக்கும் இது கருப்பு புறா என்று அழைக்கப்படுகிறது. இது மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் பெரிய வகை புறாவாகும்.

நீலகிரியில் காடுகளில் உள்ள மரங்களின் பழங்களையும், சிறு நத்தைகளையும் உணவாகக் கொள்ளும். அடிக்கடி இடம் பெயரும். ஹு ஹு என ஆந்தை போல குரல் எழுப்பும்.

குட்டை இறக்கையன் (White bellied Short wing)

குட்டை இறக்கையன்
குட்டை இறக்கையன்

 

இது 1200மீ உயரமான மலைப்பகுதிகளில் உள்ள புல்தரைப் பள்ளதாக்குகள், சோலை காடுகளில் வாழ்கிறது.

இவை பெருமளவில் பழனிமலை, ஆனைமலை, ஏலக்காய் மலை, செம்பங்கி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இது மரப்பொந்தினை வசிப்பிடமாக் கொள்கிறது.

அகன்றவால் புல் பறவை (Broad tailed grass bird)

அகன்றவால் புல் பறவை
அகன்றவால் புல் பறவை

 

இது பொதுவாக உயரமான புல்வெளி மலைகளிலேயே காணப்படுகிறது. பரந்த வட்டமான வாலினைக் கொண்ட இது பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

புற்கள் மற்றும் நாணல்களுக்கு இடையே காணப்படும் இது திறந்தவெளியில் எப்போதாவது காணப்படும். இது கர்நாடகா, புனே, லோனாவ்லா மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.

சாம்பல் மார்பக சிரிப்பான் (Grey breasted laughing thrush)

சாம்பல் மார்பக சிரிப்பான்
சாம்பல் மார்பக சிரிப்பான்

 

இதில் பழனி சிரிப்பான், அசம்பு சிரிப்பான் என இரண்டு இனங்கள் உள்ளன. பழனி சிரிப்பான் பாலக்காட்டுக் கணவாய்க்கு தெற்கே மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.

அசம்பு சிரிப்பான் அச்சங்கோவில் ஆற்றுக்குத் தெற்கே காணப்படுகிறது. இது சிறுகுழுக்களாக காணப்படுகிறது. இது பூக்களின் மகரந்தங்கள், பூவிதழ்கள், பழங்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும்.

கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ண ஈப்பிடிப்பான் (Black & rufous flycatcher)

கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ண ஈப்பிடிப்பான்
கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ண ஈப்பிடிப்பான்

 

இது மேற்கு தொடர்ச்சி மலையின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் காணப்படுகிறது. உயரமான மலைப்பகுதிகளான நீலகிரி, பழனி மலைகளில் அதிகளவு உள்ளது.

இது தரைப்பகுதியிலிருந்து 2மீ உயரம் வரை பறந்து பூச்சிகளைப் பிடிக்கிறது. இது விடியல் மற்றும் அந்திப் பொழுதில் பூச்சிகளை வேட்டையாடுகிறது. அச்சமயங்களில் ஒருமணி நேரத்தில் 100 பூச்சிகளை வேட்டையாடுகிறது.

நீலகிரி ஈப்பிடிப்பான்( Nilgiri flycatcher)

நீலகிரி ஈப்பிடிப்பான்
நீலகிரி ஈப்பிடிப்பான்

 

இது மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி பகுதியில் காணப்படும் ஒரு பறவையினம் ஆகும். இது சோலை காட்டின் அதிக உயரத்திலும், நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது.

இது கருஊதா மற்றும் வைலட் கலந்து அடர்நிறத்தில் இருக்கும். அடர் நிறத்தில் இருப்பதால் அமர்ந்திருக்கும்போது இதனை அவ்வளவு எளிதாக இனம் காண இயலாது.

நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri pipit)

நீலகிரி நெட்டைக்காலி
நீலகிரி நெட்டைக்காலி

 

இது தனித்துவமான பறவையாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையின் உயரமான பகுதிகளில் உள்ள மலைசார் புல்தரைகள், சிறு நீரோடைகள் உள்ள இடங்களில் காணப்படுகின்றது.

இது இணையாகவோ, தனித்தோ காணப்படுகிறது. இவை தொந்தரவுக்கு ஆளாகும்போது குட்டைபுதர், மரங்களுக்குள் சென்று மறைந்து விடுகின்றன.

நீலப்பைங்கிளி (Malabar blue winged parakeet)

நீலப்பைங்கிளி
நீலப்பைங்கிளி

 

இது மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமைமாறா காடுகளில் காணப்படுகின்றன. இது நீலம் தோய்ந்த பச்சைநிற உடலும், கழுத்தில் பளபளப்பான பசுநீல வளையமும் நீலநிற இறக்கையும் வாலும் கொண்டிருக்கிறது.

குழுவாகக் காணப்படும் இது தானியங்கள், விதைகள், கொட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும்.

மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar grey hornbill)

மலபார் சாம்பல் இருவாச்சி
மலபார் சாம்பல் இருவாச்சி

 

இது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும் காணப்படும் இருவாச்சி பறவையினம் ஆகும். இது நீண்ட அலகினைக் கொண்டிருந்தாலும் மற்ற இருவாச்சிகளில் காணப்படும் அலகிற்கு மேலே உள்ள புடைப்பு காணப்படுவதில்லை.

அடர்ந்த காடுளில் காணப்படும் இது பழங்கள் மற்றும் பூச்சியினங்களை உணவாக்குகின்றன. சாம்பல் நிறத்தில் காணப்படும் இது கறுப்பு மற்றும் வெள்ளைநிற வால்பகுதியைக் இருக்கிறது.

வெள்ளை வயிற்று மரப்பறவை(White bellied treepie)

வெள்ளை வயிற்று மரப்பறவை
வெள்ளை வயிற்று மரப்பறவை

 

காக்கை குடும்பத்தைச் சேர்ந்த இது மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் காணப்படுகிறது. இதனுடைய தொண்டை மற்றும் நெஞ்சுப்பகுதி கருமைநிறத்திலும், கழுத்தின் பின்பகுதி வெள்ளையாகவும் முதுகுப்பகுதி செம்பழுப்பு மற்றும் கருப்புநிறத்திலும் உள்ளது.

இதனுடைய வாலின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளையாகவும், மீதி கருப்பாகவும் இருக்கிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவாவிற்கு தெற்கே காணப்படுகிறது.

சாம்பல் தலை புல்புல்( Grey headed bulbul)

சாம்பல் தலை புல்புல்
சாம்பல் தலை புல்புல்

 

தென்மேற்கு இந்தியாவில் கோவா முதல் தமிழ்நாடு வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் இது காணப்படுகிறது. இது அடர்ந்த காடுகளின் ஆறுகள் மற்றும் ஈரப்பதமான இடங்களில் உள்ள நாணல்கள் மற்றும் புதர்களில் வசிக்கிறது.

இதனுடைய தனிப்பட்ட குரலினை வைத்து இது புதருக்குள் இருப்பதை அறிந்து கொள்ளலாம். இவை பழங்கள் மற்றும் இருவாழ்விகளை உணவாக்குகின்றன.

செஞ்சிலம்பன் (Rufous babbler)

செஞ்சிலம்பன்
செஞ்சிலம்பன்

 

இது உளறுவாய்க் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது பழங்காலந்தொட்டு வாழும் பறவைகளில் ஒன்று. இது இருக்குமிடம் கலகலப்பான சத்தமாகவே இருக்கும்.

இது மேற்கு தொடர்ச்சி மலைகளில் புல், காட்டுப்புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படுகிறது. இது அடர்ந்த பழுப்பு நிறத்தையும் நீண்ட வாலினையும் உடையது.

வயநாட்டு சிரிப்பான் (Waynad laughing thrush)

வயநாட்டு சிரிப்பான்
வயநாட்டு சிரிப்பான்

 

இது நீலகிரி கொடைக்கானல் ஆகிய இடங்களில் அடிவாரம் முதல் சிகரம் வரை ஈரப்பதம் மிகுந்த காடுகளில் காணலாம்.

ஒரு பறவை கத்தத் தொடங்கியதும் அடுத்து அதற்கு அடுத்து என ஒவ்வொன்றாக குரலெழுப்பி பின் கூட்டம் முழுவதும் சிரிப்பது போலக் கொக்கொலிக்கும். இதனுடைய கூட்டத்தில் ஏழு முதல் அதிகளவாக நாற்பது பறவைகள் இடம் பெறலாம்.

வெள்ளை வயிறு நீல ஈப்பிடிப்பான் (White bellied Blue flycatcher)

வெள்ளை வயிறு நீல ஈப்பிடிப்பான்
வெள்ளை வயிறு நீல ஈப்பிடிப்பான்

 

13 செமீ நீளமுடைய இது நீளமான அலகினைக் கொண்டுள்ளது. அடர்த்தியான காடுகளுக்குள் பறக்கும் பூச்சிகளையும் இது எளிதாக பறந்து பிடிக்கிறது.

ஆண் பறவையானது கருநீல வண்ணத்தில் வயிற்றுப்பகுதி வெள்ளையாக இருக்கிறது. பெண் பறவையானது ஆலிவ் வண்ணத்தில் வெள்ளைநிற வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளது. இது அடர்ந்த காட்டுகள் மற்றும் சோலைகளில் காணப்படுகிறது.

சிறுந்தேன்சிட்டு (Crimson backed sunbird)

சிறுந்தேன்சிட்டு
சிறுந்தேன்சிட்டு

 

தேன்சிட்டுகளில் மிகவும் சிறிய இப்பறவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது. காட்டுப்பகுதிகளில் காணப்படும் இப்பறவை சிலதாவரங்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற காரணமாக இருக்கின்றது.

மழைகாலத்தில் இது மலையடிவாரத்திலும், பிறகாலங்களில் உயரமான மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.

 

மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் பறவைகள் அறிந்து கொண்டீர்களா?

இவற்றுள் சில அருகி வருகின்றன.

காட்டைப் பாதுகாப்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலை பறவைகள் பற்றி எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வாய்ப்பளிப்போம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.