யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்

யார் சிறந்தவர் என்று எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார் பேராசிரியர். 

அது ஒரு கல்லூரி வகுப்பறை. அங்கு பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவர் தனது மாணவர்களிடம் “என் அருமை மாணவர்களே. உங்களால் நான் கூறும் 3 நபர்களில் யார் சிறந்தவர் என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு மாணவர்கள் “சரி கூறுகிறோம்” என்றனர்.

முதல் நபர்

 ஆசிரியர் “நான் மூன்று நபர்களின் நடவடிக்கைகளைக் கூறுகிறேன்.” என்று ஆரம்பித்தார்.

முதலாம் நபர் மோசமான அரசியல்வாதிகளுடன் நட்பு வைத்திருந்தார். ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டு ஜோதிடர்களை அடிக்கடி கலந்தாலோசிப்பார்.

இருமனைவியர்களைக் கொண்டிருந்தார். தொடர்ந்து புகைப்பிடிப்பார். தினமும் எட்டு முதல் பத்து தடவை மது அருந்துவார்.

இரண்டாம் நபர்

இரண்டாம் நபர் இருமுறை அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். மதியம் வரை உறங்கும் பழக்கத்தை உடையவர்.

தினமும் மாலை வேளையில் விஸ்கி அருந்துவார். கல்லூரி நாட்களில் அபின் எனப்படும் போதைப்பொருளை உபயோகித்தவர்.

மூன்றாம் நபர்

மூன்றாம் நபர் போரின் ஹீரோ என்று வர்ணிக்கப்படுகிறார்; சைவ உணவினை உண்டவர்.

குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இவருக்கு கிடையாது. தனது மனைவியை ஏமாற்றியதில்லை.

யார் சிறந்தவர்

சரி என்னுடைய கேள்விக்கு விடையளியுங்கள்” என்றார் ஆசிரியர்.
மாணவர்கள் அனைவரும் “மூன்றாம் நபரே சிறந்தவர்” என்று கூறினர்.

அதற்கு ஆசிரியர் “நான் இப்போது மூன்று நபர்களும் யார் என்று உங்களுக்குக் கூறுகிறேன்.

பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

பிராங்கிளின் ரூஸ்வெல்ட்
பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

 

முதலாவது நபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட். அவர் அமெரிக்காவின் 32-வது ஜனாதிபதி. இரண்டாம் உலகப்போரில் நேரடியாக பங்கு வகித்தவர்.

அமெரிக்காவின் மூன்று முக்கிய ஜனாதிபதிகளில் ஒருவர். இரண்டுமுறைக்கு மேல் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர். 20-ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவர். 

அமெரிக்காவை வல்லரசாக்கியதில் முக்கியமானவர்.

 

வின்ஸ்டன் சர்ச்சில்

வின்ஸ்டன் சர்ச்சில்
வின்ஸ்டன் சர்ச்சில்

 

இரண்டாவது நபர் வின்ஸ்டன் சர்ச்சில் முன்னாள் இங்கிலாந்து பிரதமர். பிரித்தானிய அரசியல்வாதிகளில் முக்கியமானவர். பிரித்தானிய இராணுவ அதிகாரி. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து வெற்றி பெறக் காரணமானவர்களில் முக்கியமானவர்.

அடால்ஃப் ஹிட்லர்

அடால்ஃப் ஹிட்லர்
அடால்ஃப் ஹிட்லர்

 

ஜெர்மனியின் சர்வாதிகாரி. ஆரியக்கோட்பாட்டை வலியுறுத்தியவர். இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவர்.

வெள்ளை இனத்தவர் மட்டுமே சிறந்தவர்; மற்றவர்கள் வெள்ளையர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற கோட்பாடு உடையவர்.

இரண்டாம் உலகப்போருக்கும் மிகப்பெரிய அழிவுக்கும் காரணமானவர்.

வாழ்க்கைப் பாடம்

தனி வாழ்வில் மிக மோசமாக இருந்தவர்கள், பொது வாழ்வில் மக்களுக்கு நல்லது செய்யும் நல்லவர்களாக இருந்தார்கள்.

தனி வாழ்வில் நல்லவராக இருந்தவர், லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் கொடுங்கோலனாகப் பொது வாழ்வில் இருந்தார்.

நான் கூறியது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.

எவரையும் அவருடைய நடவடிக்கைகளை வைத்து எடைபோடுவது தவறு. 

ஒருவரின் குணநலன்கள் என்பது சிக்கலான நிகழ்வு. 

ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் முக்கியமானவர்கள்.

யாரையும் நியாயப்படுத்தவும் செய்யாதீர்கள்; புறந்தள்ளவும் செய்யாதீர்கள்.

எல்லோரையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.