விட்டமின் சி அதிகம் கொண்ட நூல்கோல்

நூல்கோல் நாம் அரிதாகப் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று. இதனுடைய சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் பற்றித் தெரிந்தால் நாம் இக்காயை அடிக்கடி பயன்படுத்துவோம்.

நூல்கோல் பற்றிய எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

நூல்கோல் ப்ராசிகாசி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. முட்டைகோஸ், காலிபிளவர், களைக்கோசு, பரட்டைக்கீரை, பச்சைப்பூகோசு, சீமைப் பரட்டைக்கீரை ஆகியோர் நூல்கோலின் உறவினர்கள் ஆவர்.

நூல்கோலின் அறிவியல் பெயர் பிரேசிகா ஒல்லேரிசா என்பதாகும். இக்காயின் தாயகம் வடமேற்கு ஐரோப்பா ஆகும்.

 

நூல்கோலின் அமைப்பு மற்றும் வளரியல்பு

நூல்கோலானது நல்ல வடிவால் வசதியுள்ள வளமான நிலத்தில் நன்கு வளரும். மிதமான சூரிய ஒளியும், குளிர்ச்சியான காலநிலையும் இப்பயிர் வளர ஏற்றது.

 

நூல்கோல் தோட்டம்
நூல்கோல் தோட்டம்

 

நூல்கோல் குற்றுச்செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இத்தாவரம் 50 செமீ உயரம் வரை வளரும்.

நூம் காய்கறியாகப் பயன்படுத்தும் நூல்கோல் வீக்கமான தண்டுப் பகுதியாகும். நூல்கோல் வெளிர் பச்சை மற்றும் கருஊதா நிறங்களில் மேல்தோலினைக் கொண்டிருக்கிறது.

 

நூல்கோல் செடி
நூல்கோல் செடி

 

உட்புறம் சதைப் பகுதி வெள்ளையாக இருக்கும். இக்காயானது பம்பர வடிவத்தில் காணப்படுகிறது.

 

சிவப்பு நிற நூல்கோல்
சிவப்பு நிற நூல்கோல்

 

நூல்கோல் தாவரம் மஞ்சள் நிறப்பூக்களையும், அடர் பழுப்பு நிற விதைகளையும் பெற்றிருக்கிறது.

 

நூல்கோல் பூ
நூல்கோல் பூ

 

இப்பயிர் பயிர் செய்த 55-60 நாட்களில் நூல்கோல் அறுவடைக்கு தயாராகிறது. சராசரியாக இக்காயானது 150 கிராம் அளவில் இருக்கும்.

இக்காயானது தனிப்பட்ட மணத்துடன் இனிப்பு சுவை கொண்டதாக உள்ளது. நூல்கோல் மட்டுமல்லாது அதனுடைய இலைகளும் உணவாக உண்ணப்படுகின்றன.

 

நூல்கோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நூல்கோலில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இக்காயானது ஆரஞ்சினைப் போல் ஐந்து மடங்கு விட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது.

மேலும் இக்காயில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

இக்காயானது தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் இக்காயில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதம், அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து, பீட்டா கரோடீன்கள் ஆகியவை உள்ளன.

 

நூல்கோலின் மருத்துவப் பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

நூல்கோலானது அதிகளவு நார்ச்சத்தினையும், நீர்ச்சத்தினையும் கொண்டுள்ளது. இக்காயில் நார்ச்சத்தானது உடலில் நச்சினை கழிவாக எளிதில் வெளியேற்றகிறது.

இதனால் மலச்சிக்கல், வீக்கம், வயிற்று வலி ஆகியவை ஏற்படுவதில்லை. செரிமானப் பாதையில் உணவு செரிக்கும் தன்மையை இக்காயின் நார்ச்சத்து மேம்படுத்துகிறது.

மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை நார்ச்சத்து ஊக்குவிக்கிறது. எனவே இக்காயினை அடிக்கடி உடலில் சேர்த்து மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் நீங்கி நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

 

ஆரோக்கிய உடல்எடை இழப்பிற்கு

நூல்கோலானது குறைந்த எரிசக்தியையும், அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே

இக்காயினை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பசிப்பதில்லை. எனவே இடைவேளை உணவு, நொறுக்குத்தீனி தேவைப்படாது. இதனால் இக்காயினை உண்டு ஆரோக்கிய உடல்எடை குறைப்பினைப் பெறலாம்.

ஆரோக்கியமான தசைகள் மற்றும் நரம்புகள் செயல்பாட்டிற்கு
தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இந்த ஊட்டச்சத்து நடத்தல், ஓடல், மூச்சு விடுதல் என அன்றாட செயல்பாட்டில் பங்கேற்கிறது.

பொட்டாசியம் மிகுந்த இக்காயினை உணவில் சேர்க்கும்போது நமது நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராகி நமக்கு புத்துணர்வினைத் தருகிறது.

 

இரத்த அழுத்தத்தை சீராக்க

பொட்டாசியம் இரத்த குழாய்களின் குழல்விரிப்பான செயல்பட்டு சிரைகள் மற்றும் தமனியில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

மேலும் உடலில் உள்ள சோடியத்தின் அளவினை பொட்டாசியம் சமன்செய்து செல்களில் திரவநிலையைக் காக்கிறது.

 

அனீமியாவைத் தடுக்க

நூல்கோலில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது. இவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் உடல்உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்பட்டு உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

மேலும் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு, தலைவலி, பலவீனம், நோய் எதிர்ப்பின்மை, அனீமியா போன்றவை தடைசெய்படுகின்றன.

இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து உடல் உட்கிரக்கிக்கும் இரும்புச்சத்தின் அளவினை அதிகரிக்கிறது. இதனால் நூல்கோலை உணவில் சேர்த்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

 

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

நூல்கோலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு காரணமான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு ஆகியவை காணப்படுகின்றன.

நமக்கு வயதாகும்போது எலும்புகள் பாதிப்படைகின்றன. இதனால் வாதம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்குக் காரணமான நூல்கோலினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பார்வைத் திறன் மேம்பட

நூல்கோலில் பார்வைத்திறன் மேம்பட காரணமான பீட்டா கரோடீன்கள் காணப்படுகின்றன. இவை வயதாகும் போது ஏற்படும் கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

ஊடலில் ஆக்ஸிஜனேற்றத்தினால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து பார்வைத் திறனை பாதுகாக்கின்றன. எனவே நூல்கொலினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

வளர்ச்சிதை மாற்றத்தினை சீராக்க

பி தொகுப்பு விட்டமின்கள் உடலில் உள்ள நொதிகளை சரிவர சுரக்கச் செய்து வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற காரணமாகின்றன. நூல்கோல் அதிகளவு பி தொகுப்பு விட்டமின்களைக் கொண்டுள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சீரான வளர்சிதை மாற்றத்தினைப் பெறலாம்.

 

புற்றுநோயைத் தடுக்க

நூல்கோலானது அதிகளவு குளுக்கோசினலேட் உள்ளிட்ட பைட்டோ-நியூட்ரியன்களைக் கொண்டுள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிஜென்ட்டுகள் புற்றுநோயை தடை செய்கின்றன. எனவே இக்காயினை உண்டு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

 

நூல்கோலினை வாங்கும் முறை

நூல்கோலினை வாங்கும் போது அவை மிதமான வடிவில் கையில் தூக்கும்போது கனமானதாகவும் ஒரே சீரான நிறத்துடனும் இருக்க வேண்டும்.

மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள், கீறல்கள், கையில் தூக்கும்போது எடை குறைவாக உள்ளவை, முதிர்ந்தவற்றை தவிர்த்து விடவும்.

அறையின் வெப்பநிலையில் 3-5 நாட்கள் வைத்திருந்து இக்காயினை பயன்படுத்தலாம். இக்காயினை குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இக்காயின் மேற்பரப்பினை சீவி விட்டு தண்ணீரில் கழுவி வேண்டிய வடிவில் வெட்டிப் பயன்படுத்தலாம்.

நூல்கோல் அப்படியேவோ, சமைத்தோ உண்ணப்படுகிறது. சாலட்டுகள், ஊறுகாய்கள், சூப்புகள் தயாரிப்பிலும் இக்காய்; பயன்படுத்தப்படுகிறது.

விட்டமின் சி, பி6 (பைரிடாக்ஸின்), பொட்டாசியம் அதிகம் உள்ள நூல்கோலினை அடிக்கடி உணவில் சேர்த்து நலமுடன் வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.