வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்கு செயல்படும் மற்றும் கணக்கு நன்கு வரும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயினை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம்.

வெண்டைக்காய், செம்பருத்தி, பருத்தி ஆகியவை மால்வேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகைகளாகும்.

வெண்டைக்காயின் அறிவியல் பெயர் ஆபெல்மொஸ்சஸ் எஸ்குலெந்தஸ் என்பதாகும். இதன் தாயகம் எத்தோபியாவின் உயர்நிலங்களாகும்.

வெண்டைக்காய் எத்தோபியாவிலிருந்து நைல் நதி நாடுகளின் மூலம் அரேபியாவிற்கு வந்து பின் இந்தியாவை அடைந்தது.

அடிமை வியாபாரம் ஆரம்பித்தபோது ஆப்பிரிக்க அடிமைகளின் மூலம் இக்காய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை எட்டியது.

வெண்டையானது செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. வெண்டைச் செடியானது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் செழித்து வளரும் இயல்பினை உடையது. இச்செடியானது ஆறு அடி உயரம் வரை வளரும்.

வெண்டைச் செடியானது கிளைகளுடன் அகலமான இலைகளைக் கொண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களுடன் கூடிய பூவினை வெண்டைச் செடி பூக்கிறது. இப்பூக்களிலிருந்து 5-15 செமீ நீளமுள்ள பச்சைநிறக் காய்கள் தோன்றுகின்றன.

வெண்டை பூ
வெண்டை பூ

 

வெண்டைக்காய்களில் வெளிப்புறத்தில் மெல்லிய உரோமம் போன்ற பகுதி காணப்படுகிறது.

வெண்டைக்காயின் உள்ளே வெள்ளை நிற விதைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். இக்காயினை வெட்டும்போது வழவழப்பான கோழைபோன்ற பகுதி வெளிப்படும். இக்கோழையினாலே இக்காயானது பலரால் வெறுக்கப்படுகிறது.

வெண்டைக்காய் உட்புறம்

முற்றிய வெண்டையின் விதையிலிருந்து சமையலுக்கான எண்ணெய் எடுக்கப்படுகிறது. வெண்டையின் வேர் மற்றும் தண்டிலிருந்து காகிதம் தயார் செய்யப்படுகிறது.

 

வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வெண்டைக்காயில் விட்டமின் ஏ,சி,கே,பி1(தயாமின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றன.

மேலும் இக்காயில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்) ஆகியவை உள்ளன.

வெண்டையில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், மாங்கனீசு, செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்சத்து, குறைந்தளவு எரிசக்தி போன்றவை உள்ளன. இதில் பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோடீன், பீட்டா கிரிப்டோசாக்தின், லுடீன் ஸீஸாத்தைன் ஆகியவை காணப்படுகின்றன.

 

வெண்டையின் மருத்துவப்பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

வெண்டைக்காயில் வழவழப்பான கோழை போன்ற நார்சத்து காணப்படுகிறது. இந்த நார்சத்து செரிமானப்பாதையில் உணவுப்பொருட்களை மொத்தமாகச் சேர்த்து நகர்த்த உதவுகிறது.

நார்சத்தானது குடல் இயக்கங்கள் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், வாயு தொந்தரவுகள் உள்ளிட்ட சீரண பிரச்சினைகள் ஏற்படுவது தடை செய்யப்படுகிறது. மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை வெண்டைக்காயில் உள்ள நார்சத்து நீக்குகிறது.

 

பார்வைக்கான ஊக்கமருந்து

வெண்டைக்காயில் விட்டமின் ஏ அதிகளவு உள்ளது. மேலும் இதில் பீட்டா கரோடீன், லுடீன் ஸீஸாத்தைன் போன்ற ஆன்டி ஆக்ஸிஜென்ட்களும் காணப்படுகின்றன.

உடலின் வளர்சிதை மாற்றத்தினால் ப்ரீரேடிக்கல்கள் ஏற்படுகின்றன. ப்ரீரேடிக்கல்கள் பார்வை குறைப்பாடினை தோற்றுவிக்கின்றன. ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை வெண்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் தடைசெய்கின்றன.

இதனால் கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் போன்றவை வராமல் தடுக்க வெண்டைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

சரும பாதுகாப்பு

வெண்டைக்காயில் காணப்படும் விட்டமின் ஏ-வானது சருமப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விட்டமின் ஏ-வானது ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும் சருமச்சுருக்கம், வடுக்கள், முகப்பருக்கள் ஏற்படாமல் சருமத்தை வெண்டைக்காய் பாதுகாக்கிறது.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

விட்டமின் சி-யானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விட்டமின் சி-யானது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலினை நோய் தொற்றுக்கிருமிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் வெண்டைக்காயினை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம்.

 

இதய நலத்திற்கு

வெண்டைக்காயானது அதிக அளவு பொட்டாசியத்தைப் பெற்றுள்ளது. இந்த பொட்டாசியமானது உடலில் உள்ள சோடியத்தின் அளவினை சரிசெய்கிறது.

இதனால் இரத்தத்தின் அழுத்தமானது சீராகி இதயப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் வெண்டைக்காயில் உள்ள பெக்டின் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கிறது.

 

எலும்புகளின் நலத்திற்கு

வெண்டைக்காயில் காணப்படும் விட்டமின் கே-யானது எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள கால்சியம் மெக்னீசியம் போன்றவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு எலும்புகளை வலிமையாக்குகிறது.

 

வெண்டைக்காயினை வாங்கும் முறை

வெண்டைக்காயினை வாங்கும்போது புதிதான இளமையான சீரான பச்சை நிறத்தினை உடையவற்றை வாங்க வேண்டும். முதிர்ந்த, வெட்டு காயங்கள் உடைய விறைப்பில்லாத காயினைத் தவிர்த்து விடவேண்டும்.

வெண்டைக்காயினை புதிதாக இருக்கும்போதே பயன்படுத்திவிடவும். வெண்டைக்காயினை குளிர்பதனப் பெட்டியில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

வெண்டைகாயினை முழுகாயாக இருக்கும்போது தண்ணீரில் அலசி சிறிது நேரம் உலரவிட்டு சிறுதுண்டுகளாக்கி பயன்படுத்தலாம்.

வெட்டிய வெண்டைக்காய் துண்டுகளை சிறிது நேரம் உலரவிட்டால் வழுவழுப்புத் தன்மை குறையும்.

வெண்டைக்காயினை அதிக நேரம் வேக விடக்கூடாது. அதிக நேரம் வேகவிடும்போது வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் வீணாகிவீடும்.

சூப்புகள், வத்தல்கள், ஊறுகாய்கள், பொரியல்கள், சாலட்டுகள் போன்றவை தயாரிக்க வெண்டைக்காய் பயன்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து நலம் பெறலாம்.

-வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.