அட்மிஷன் – சிறுகதை

அட்மிஷன் போடுவதற்கு, ஃபைலில் மலை போல் குவிந்து கிடந்த விண்ணப்ப படிவங்களைப் பரிசீலனை செய்யத் தயாரானார் வெங்கடேஸ்வரன்.

அவரது பெயருக்குக் கீழே ‘ஹெட்மாஸ்டர்’ என்று பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை ஒன்று டேபிளில் அவர் முன் காட்சியளித்தது.

ஏதோ கேட்பதற்காகக் காலிங் பெல்லை அழுத்தி பியூனை அழைத்தபோது டேபிளை அலங்கரித்த போன் இவரை அழைத்தது.

ரிசீவரை எடுத்துக் காதில் வைத்த போது எதிர்முனையில் “இஸ் மிஸ்டர் வெங்கடேஸ்வரன் அவைலபிள்?” என்றதோர் குரல் கேட்டது.

“எஸ்.. ஸ்பீக்கிங்” என்றார் எச்.எம். வெங்கடேஸ்வரன்.

“நான் தான் ராம்பிரகாஷ் எம்.பி. பேசுறேன். நேரில் வந்து பேசணும்னு தான் நினைச்சேன். சௌகரியப்படலை. விஷயம் என்னான்னா, ராக்ஃபோர்ட் ஜூவல்லரி மார்ட் ஓனர் ரவீந்திரநாத் நம்ம டவுன்ல பெரிய புள்ளி. அவர் மகனுக்கு பிளஸ் 1 ஃபர்ஸ்ட் குரூப்ல ஒரு சீட் வேணும். அப்ளிகேசன் கொடுத்திருக்கார். பையன் பேரு ராம்நாத். கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. நான் அப்புறமா நேரில் வந்து பார்க்கிறேன்.” ஒரே மூச்சில் மள மளவெனப் பொரிந்து தள்ளிவிட்டுப் போனை வைத்து விட்டார் ராம்பிரகாஷ் எம்.பி.

வெங்கடேஸ்வரன் நிதானமாக ஃபைலை பிரித்து ராம்நாத்தின் விண்ணப்பப் படிவத்தை எடுத்து அவனது பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை நோட்டமிட்டார்.

வந்திருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் கிட்டதட்ட அனைவருமே நானூற்றுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஓரிரு மாணவர்களின் மதிப்பெண்கள் சற்று குறைவாக இருந்தன.

ராம்நாத்தின் மதிப்பெண்கள் அவரிடம் சிரிப்பை வரவரழைத்தன. ஐநூறுக்கு நூற்றித் தொண்ணூற்றைந்து மதிப்பெண்களே பெற்றிருந்தான்.

‘அட்மிஷனுக்கே வழியில்லையாம். இதில ஃபர்ஸ்ட் குரூப் வேணுமாம்’ உதட்டை பிதுக்கி தோளைக் குலுக்கிக் கொண்டார்.

மறுநாள்

பிளஸ் 1 வகுப்பில் சேரத் தகுதியானவர்களின் பட்டியல் வெளியானது.

ராம்நாத் பெயர் அதில் இல்லாததை அறிந்த ரவீந்திரநாத், ராம்பிரகாஷ் எம்.பி.யை அணுகி செய்வதறியாது கையைப் பிசைந்து நின்றார்.

எம்.பி. பள்ளியினுள் நுழைந்ததும் ஒவ்வொருவரும் பரபரப்புடன் காணப்பட்டனர்.

எச்.எம். அறை வாயில் முன் ஸ்டூல் ஒன்றில் அமர்ந்திருந்த பியூன் பவ்யமாக எழுந்து நின்று சல்யூட் அடித்து எம்.பியை உள்ளே அனுப்பினான்.

வெங்கடேஸ்வரன் எழுந்து நின்று எம்.பியை புன்னகையுடன் வரவேற்று, கைகுலுக்கி எதிரே அமரச் செய்தார்.

“மிஸ்டர் வெங்கடேஸ்வரன், ராம்நாத் அட்மிஷன் விசயமாக நான் நேத்து அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கலை. என் சொல்லுக்கு நீங்க காட்டற மரியாதை இது தானா?”

“ஐயையோ, என்ன சார் இப்படி பேசறீங்க. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். பையனோட மார்க்குகள் ரொம்ப குறைச்சலா இருக்கு. மெரிட்ல பாக்கறச்சே அவனுக்கு அட்மிஷன் கொடுக்க முடியாத நிலை சார்.”

“ஓகோ, மெரிட்ல தான் கொடுப்பீங்களாக்கும். நீpங்க இந்த ஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா சேர்ந்து ரெண்டு மாசந்தான் ஆவுது. இது மேனேஜ்மெண்ட் ஸ்கூல்ங்கறது ஞாபகமிருக்கா? ரவீந்திரநாத் மிகப்பெரிய புள்ளி. டொனேஷன், அது இதுன்னு எதையாவது சொல்லி கேட்டு வாங்கி ஒரு சீட் கொடுக்கிற வழியப் பாருங்க. உங்களுக்கும் கணிசமா ஒரு தொகை கிடைக்கிறாப் போல கரெஸ்பாண்டெண்ட் கிட்டச் சொல்லி ஏற்பாடு பண்றேன்.”

“ஸாரி சார், இந்த வெங்கடேஸ்வரன் முப்பத்தஞ்சு வயசிலேயே எச்.எம். ஆகி, இருபத்தஞ்சு வருசம் சர்வீஸ் போட்டவன். உடல்ல தெம்பு இருக்கிறதினாலே ரிடையர்மெண்டுக்குப் பிறகும் இந்த ஸ்கூலுக்கு உழைக்க வந்திருக்கேன். மனசாட்சிக்கு விரோதமா எதையும் செஞ்சு எனக்குப் பழக்கமில்லை சார். ஸாரி நான் எதுவும் செய்ய முடியாது.”

ராம்பிரகாஷ் எழுந்தார்.

“மிஸ்டர் வெங்கடேஸ்வரன், இனியும் உங்கக்கிட்டப் பேசிப் பயனில்லை. நான் கரெஸ்பாண்டெண்டைப் பாத்துக்கிறேன். இந்த ஸ்கூலை விட்டுக் கிளம்ப ரெடியா இருந்துக்குங்க.”

ராம்பிரகாஷ் கோபத்துடன் வெளியேறியதும், அன்று மாலை ஏழு மணியளவில் ரவீந்திரநாத்தைப் பார்க்க விரும்புவதாக வெங்கடேஸ்வரன் அவருக்குப் போன் செய்து தகவல் தெரிவித்தார்.

முக்கியமான வேலைகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு எச்.எம். வெங்கடேஸ்வரனை எதிர்பார்த்துக் காத்திருந்த ரவீந்திரநாத்திற்கு உள்ளுர ஒரு திருப்தி.

‘எம்.பி. ராம்பிரகாஷ் நேரில் போய் செமத்தையா டோஸ் கொடுத்திருப்பார். அதனால்தான் பையனைச் சேர்த்துக் கொள்வதாக நேரிலேயே சொல்ல வருகிறார்’ என நினைத்துக் கொண்டார்.

வேலையாள் வந்து வெங்கடேஸ்வரன் வந்திருப்பதைத் தெரிவித்ததும், ஹாலுக்கு வந்தார் ரவீந்திரநாத்.

காலையில் ராம்பிரகாஷ் வந்துவிட்டுப் போன விவரத்தை விரிவான எடுத்துச் சொன்னார் வெங்கடேஸ்வரன்.

“எம்.பி. இவ்வளவு சொல்லியும் ஏன் தயங்கறீங்க?”

“தயக்கமில்லை சார். உங்க பையனைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க என் மனம் இடம் தரல. எதெதற்கு ரெக்கமெண்டேஷன்னு ஒரு வரைமுறையே இல்லாமப் போச்சு. படிப்புக்கு கூடவா ரெக்கமண்டேஷன்? நிறைய மார்க்குகள் வாங்கிய மாணவ மாணவியர்களுக்கு மத்தியில உங்க பையன் ரொம்பக் குறைச்சலா மார்க்குகள் வாங்கியிருக்கும் போது அவங்களை எல்லாம் மீறி எப்படிங்க இடம் தர முடியும்?”

“நியாயத்தை எடுத்துச் சொல்லத்தான் இப்ப வந்தீங்களா? சீட் தர முடியுமா? முடியாதா?”

“கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க சார். ரெண்டு வாரத்துக்கு முன்னால, மதுரை வைர வியாபாரி மஞ்சுநாத் குடும்பத்திலேருந்து உங்க பெண்ணை வந்து பார்த்துட்டு லெட்டர் போடுறதா சொல்லிட்டு போனாங்களாம். கேள்விப்பட்டேன். இன்னைய வரைக்கும் அவங்க பதில் எழுதினாங்களா?”

“இல்லை அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் கேட்கிறீங்க?”

“அவங்க உங்க பெண்ணை ஏத்துகலைன்னு வச்சுக்குங்க. என்ன செய்வீங்க?”

“என் பெண்ணுக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? ஆஸ்தியில்லையா?”

“யார் சார் இல்லைன்னு சொன்னது? நீங்க லட்ச, லட்சமா பணத்தை அபிசேகம் பண்ணித் திருமணம் செய்யறதாச் சொல்லியும் அவங்க வேண்டாம்னு சொல்லிட்டா என்ன செய்வீங்க?”

“கழுதையை விட்டுட்டு வேற இடம் பார்ப்பேன்.”

“நான் கேட்கிறேனேன்னு தப்பா நெனைக்கக் கூடாது. இந்த ராம்பிரகாஷ் எம்.பி.யை தூது அனுப்பி மாப்பிள்ளை வீட்டாரைச் சம்மதிக்க வைக்க உங்களால் முடியுமா?”

ரவீந்திரநாத் ஒருகணம் தடுமாறிப் போனார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.

வெங்கடேஸ்வரன் தொடர்ந்தார்.

“ஒவ்வொருவரும் மத்தவங்க கிட்ட அவங்கவங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஏதோ ஒண்ணை எதிர்பார்க்கிறாங்க. அது எதுவானாலும் இருக்கலாம். அவங்க மனசுக்குத் திருப்தியில்லேன்னு வரும்போது ஒதுக்கிடறாங்க. காய்கறிக் கடைக்குப் போறோம். தேங்காயை விரல்களால் சுண்டிப் பார்த்து நல்லது தானான்னு சோதிக்கிறோம். மனசுக்குப் பிடிக்கிலேன்னா வாங்கிறதில்லை. கத்தரிக்காய் சொத்தைன்னு தெரிஞ்சதும் ஒதுக்கிடறோம்.

காய்கறிக்காரன் உடனே எம்.பியையோ, எம்.எல்.ஏவையோ கூட்டியாந்து அவைகளை நாம் வாங்கிக்தான் ஆகணும்னு சிபாரிசு செய்ய சொல்ல முடியுமா? அதுபோலத்தான் கல்வியும். அறிவுக்கும், திறமைக்கும் தான் முதலிடம் மிஸ்டர் ரவீந்திரநாத். புரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் வர்ரேன் சார்.”

வெங்கடேஸ்வரன் எழுந்து அமைதியாக வெளியேறினார்.

நிசப்தமான நடு இரவில் போன் அலறியதும் தூக்கக் கலக்கத்துடன் போனை எடுத்து ‘ஹலோ’ என்றார் ராம்பிரகாஷ் எம்.பி.

“நான்தான் ரவீந்திரநாத் பேசுறேன். என் பையன் அட்மிஷன் விசயமா நீங்க கரெஸ்பாடெண்ட்டைப் பார்த்து மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம். என் பையன் அந்த ஸ்கூலுக்கு லாயக்கில்லை சார். அவனை மறுபடியும் நல்லா படிக்கச் சொல்லி, நிறைய மார்க்குகள் வாங்க,இம்ப்ரூவ்மெண்ட் எக்ஸாமுக்காகப் பணம் கட்டச் சொல்லிட்டேன் சார். உங்க உதவிக்கு ரொம்ப தாங்ஸ்.”

ரவீந்திரநாத்தின் குரல் எதிர்முனையில் ஒலித்ததும், அவரது திடீர் மனமாற்றத்தின் காரணம் புரியாது திகைத்தார் எம்.பி. ராம்பிரகாஷ்.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.