அதிர்ஷ்டம் எது? பேரதிர்ஷ்டம் எது?

முற்றுப் பெறாத தேவைகளின் முடிவில்லாத தேடலில்தான் வாழ்க்கையின் சூட்சமமே அடங்கியுள்ளது.

பணத்தை, நிம்மதியை, கேளிக்கையை, ஆரோக்கியத்தை என எதையாவது ஒன்றைத் தேடிய வண்ணமே நமது வாழ்க்கை ஓடுகிறது.

ஒரு மனிதனுக்கு தேடல் மட்டும் இல்லையென்றால் அதற்குப் பிறகு அவன் வாழ்வதற்கான அர்த்தமில்லாமல் போகும். வாழ்வே சுவையிழக்கும். சுற்றியுள்ளவர்களையும் தொந்தரவு செய்யும்.

இங்கு தேடல் இல்லாத மனிதர்களும் குடும்பங்களும் இல்லை. தேவைதான் மனிதனை காலையில் எழ வைக்கிறது; பரபரப்பான வாழ்க்கையில் சோர்வில்லாமல் ஓடச் செய்கிறது.

 

தேடல் அவசியமானதா இல்லையா என்பதல்ல இங்கே பிரச்சினை. நமது தேவை எது? நாம் எதைத் தேடுகிறோம்? என்பதைத் தீர்மானிப்பதில்தான் நிறையப் பேருக்கு சிக்கல்.

நாம் வாழ்வது நம்முடைய வாழ்க்கையை அல்ல. யாரோ எழுதி வைத்த புரோகிராம் நம்மை தினமும் ஓட வைக்கிறது. யாருடையை வாழ்க்கையையோ, யாருக்காகவோ வாழ்கிறோம்.

நாம் யார் என்ற கேள்விக்கு விடையே கிடைப்பதில்லை. நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், என்ன சாதித்தோம் முதலிய கேள்விகளை எழுப்பவே அச்சமாக உள்ளது.

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை என உழைத்தே ஓடாகப் போனாலும், ‘ஒர்க்கிங் உமனா நீங்க?’ என்ற கேள்வியில் இல்லத்தரசிகள் எல்லாம் என்னவோ தின்று விட்டு சும்மா படுத்திருப்பது போன்ற உள்ளர்த்தம் கொடுப்பதற்கு இணையான அரசியல் கிடையாது.

சில ஆண்டுகள் கழித்த பிறகு திரும்பிப் பார்த்தால் வெறும் சூனியமே மிஞ்சுவதாக பெண்கள் உணருவது இயற்கையாகிறது.

 

நிதி மேலாண்மையில் நடுவயது நெருக்கடி (Midlife crisis) மிகவும் உன்னிப்பாகப் கவனிக்கப்பட வேண்டிய ஒரு சங்கதி. அநேகக் குடும்பங்களில் ஆண்களே பொருளீட்டும் பணியைச் செய்வதால் ஆண்களுக்கு இது தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போகிறது.

முப்பத்தைந்து வயதில் சக ஊழியருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறக்கும் போது முகத்தில் அறையும் சிக்கல் இது.

உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் 230 இருப்பதைக் கண்டு முட்டையில் மஞ்சள் கருவைத் தவிர்க்கும் போது, மெல்ல ஆக்கிரமிக்கும் சிக்கல்.

ஆக்டோபஸ் மாதிரி பல நிதித் தேவைகள் பூதாகாரமாகக் கழுத்தைச் சுற்றி வளைக்கும் போது அவர்களுக்கான போக்கிடம் மற்றும் வாய்ப்புகள் சுருங்கிப் போயிருக்கும்; தேவைகளோ பெருகிப் போயிருக்கும்.

 

நிதித் தேவைகள் உடனடித் தேவைகள், குறுகிய காலத் தேவைகள், நீண்ட காலத் தேவைகள் என பல வகைப்படுகின்றன.

அவற்றை முன் கூட்டியே அடையாளம் கண்டு திட்டமிட்டு, அவற்றைப் பூர்த்தி செய்ய சரியான காலத்தில் உரிய செயல்களைச் செய்யாமல் விட்டால், இந்த மத்திம வயதுச் சிக்கல் மேலும் சிக்கலானதாகிப் போகும்.

பொறுப்பான குடும்பஸ்தர்கள் இந்தப் பொறுப்புகளில் இருந்து தவறுவதில்லை. அதன் காரணமாகவே அவர்களது மன உளைச்சல் கூடுவதுண்டு.

விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பகுதி இத்தகையை பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதுமானதாக இல்லை.

இப்படி புறவாழ்க்கையின் தேவைகளைத் தேடியே பெரும் பொழுது செலவழிவதால் அகவாழ்க்கையைக் கவனிக்க முடிவதில்லை.

 

வேலைக்காகப் படிப்பதும், விரும்பிப் படிப்பதும் வேறு வேறு. மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்வதும், பணத்துக்காக பிடிக்காத வேலையைச் செய்வதும் கூட அப்படித்தான்.

Hobby எனப்படும் பொழுது போக்கு நமது சமூகத்தில் ஒருவிதமான ஆடம்பரமாகக் கவனிக்கப்படுகிறது.

மனதுக்குப் பிடித்த, உடம்பையும் மனதையும் மறுபடியும் ரீசார்ஜ் செய்ய உதவும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை பொறாமையோடுதான் பார்க்கிறோம்.

பொழுதுபோக்கு என்பது பொழுதை வீணே கழிக்கும் ஒரு செயலாக, நேரத்தை மட்டுமல்லாமல் பணத்தையும் விரயமாக்கும் ஒரு சங்கதியாகவே உள்ளது.

செய்தாக வேண்டுமே என்ற கட்டாயத்தில் செய்வது வேலை. பொழுதுபோக்கு அதற்கு நேரெதிர்.

ஞாயிற்றுக் கிழமை காலையில் 5 மணிக்கு மனைவியும் குழந்தைகளும் விழிக்கும் முன்னர் ஷூவை மாட்டிக் கொண்டு தென் சென்னையில் உள்ள ஒரு மலையில் டிரெக்கிங் போகும் ஆண்களை நான் அறிவேன்.

யாருக்கும் தெரியாமல் ஒளித்து ஒளித்து எம்ப்ட்ராய்டரியும் ஜரிகை வேலைப்பாடுகளும் செய்யும் பெண்கள் இருக்கிறார்கள்.

எல்லோரும் தூங்கிய பின்னர் எந்த இம்சையும் இல்லாமல் புத்தகம் படிக்கும் ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள்.

இவையெல்லாம் மனதுக்குப் பிடித்த செய்கைகள்.

 

பொருளாதாரத்திற்கான தேடல் ஏற்படுத்தும் இறுக்கத்தினால் மனதிற்குப் பிடித்த செய்கைகளை தவிர்ப்பது இயலுமென்றாலும் கூட அது தவறானது.

ஆண்களுக்கு Midlife crisis இல் பொழுது போக்கு அடிபட்டுப் போவது ஒருபக்கம் இருக்க, பெண்களுக்கு குறிப்பாக வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு, லைஃபே கிரைசிஸ்தான்.

தனக்கென சுயஅடையாளம் இன்றி, அங்கீகாரம் இல்லாத வேலைக்காரியாகக் காலம் தள்ளும் நிலை பலருக்கு வாய்க்கிறது. அவர்களுக்கெல்லாம் நிச்சயமான பொழுதுபோக்கும் மன அழுத்தத்திற்கான வடிகாலும் அவசியம்.

பணத் தேவைக்காச் செய்யும் வேலையும், மன நிறைவுக்காகச் செய்யும் வேலைக்கும் வித்தியாசம் வேறு வேறு. அதே நேரத்தில் இரண்டுமே அவசியம்.

இந்த இரண்டுக்குமே நேரம் ஒதுக்க முடிகிற நபர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவர்கள். இந்த இரண்டுமே ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்?

உங்கள் கணவருக்கு கிரிக்கெட் பிடிக்கும். ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் பார்ப்பார். அரிதாக நேரம் கிடைக்கும் போது விளையாடவும் செய்வார். அது அவரைப் பொறுத்த மட்டில் வெறும் பொழுதுபோக்கு.

டெண்டுல்கருக்கும் கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட் என்றால் அந்த மராத்தியருக்கு உயிர். பொழுதுபோக்கும் அதுதான், தொழிலும் அதுதான். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் வாய்ந்தவர் டெண்டுல்கர் !

அத்தனை பேரும் டெண்டுல்கர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

உதாரணத்திற்கு எங்கள் அபார்ட்மெண்டில் ஒருபெண்ணுக்கு மெஹந்தி போடுவது மிகவும் பிடிக்கும்.

தோழிகளுக்கு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உறவினர்களுக்கு என டிசைன் டிசைனாக மருதாணி போட்டுக் கொண்டிருந்தவர், இப்போது அதை தொழிலாக செய்கிறார்.

அவரது கணவர் மாதம் முழுவதும் வேலை செய்து சம்பாதிப்பதில் பாதியை, இவர் ஒரு சில நாட்களில் சில மணிகள் மட்டுமே செலவு செய்து சம்பாதிக்கிறார்.

இன்னொரு நண்பருக்கு பாடுவதில் விருப்பம். அவரைப் போலவே சிலபேர் சேர்ந்து ஒரு குரூப் ஆரம்பித்து, திருமணம் மற்றும் சில விசேஷங்களில் பாடி காசும் சம்பாதிக்கிறார்கள். ஆபீஸ் வேலை இல்லாத மாலைப் பொழுதுகளையும், வாரக் கடைசிகளையுமே இதற்கு ஒதுக்குகிறார்கள்.

குழந்தைகளோடு பழகுவதில் அலாதியான ஆசையுள்ள ஒரு பெண் Day Care சென்டர் நடத்துகிறார். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் நிறையக் குழந்தைகள் இவரது கண்காணிப்பில் இருக்கிறார்கள். கை நிறைய வருமானம். மனசு நிறைய சந்தோசம்.

இன்னொரு பெண் கணவர் ஆபீஸில் இருந்து வருவதற்குள்ளாக பாட்டு கிளாஸ் எடுக்கிறார்.

 

கிரேசி மோகன் கூட பத்து வருட காலம் வேலை பார்த்துக்கொண்டே நாடகம் போட்டிருக்கிறார். அதன் பிறகுதான் முழுநேரக் கலைஞராக உருவெடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

ஏ.ஆர்.முருகதாஷ் படம் கஜினி. அதில் சூர்யா பேசும் ஒரு வசனம்: “கஷ்டப்பட்டு வேலை செய்யாமல் இஷ்டப்பட்டு வேலை செய்யணும்”

ஒவ்வொருவருக்கும் ஒரு hobby இருக்கும்.  அது கெஸ்ட் லெக்சர் எடுப்பதாகஇருக்கலாம்.  ஒற்றை அரிசியில் தாஜ்மஹாலை உருவாக்குவதாக இருக்கலாம். அல்லது நடு ராத்திரியில் உட்கார்ந்து எதையாவது எழுதுவதாக இருக்கலாம்.

அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வேலையையும் செய்துகொண்டு, பொழுது போக்கிலும் ஈடுபட முடிந்தால் நீங்கள் அதிர்ஷ்டம் பெற்றவர்கள்.

அப்படி இஷ்டப்பட்டுச் செய்யும் வேலையின் மூலம் ஒரு கூடுதல் வருமானம் கிடைக்குமாறு செய்தால் நீங்கள் புத்திசாலிகள்.

பொழுதுபோக்கும், தொழிலும் ஒன்றாக அமைந்தால் நீங்கள் பேரதிர்ஷ்டம் கொண்டவர்கள்.

ஓரளவு அதிர்ஷ்டம் மற்றும் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் ஜமாய்க்கலாம்.

செல்லமுத்து குப்புசாமி

 

செல்லமுத்து குப்புசாமி அவர்கள் சிறந்த‌ நிதி மற்றும் முதலீட்டு ஆலோசகர். அவர் everydayfin.com என்ற இணையதளத்தை நிர்வகித்து வருகிறார்.

 

One Reply to “அதிர்ஷ்டம் எது? பேரதிர்ஷ்டம் எது?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.