அம்மன்

புல்லை வெட்டும் போது தன்னால்
மெல்ல வந்த குருதி யதனால்
வல்லிய துணிவுடன் அந்த இடத்தில்
நல்ல விதமாய்த் தோண்டத் தோண்ட
தெள்ளிய உயர்ந்த பெருமை கொண்டு
தானாய் உதித்த அருமை பூண்டு
நல்நா நூறாண் டுகளுக்கு முன்னே
நற்றமிழ் முகவூரில் தோன்றினாள் அம்மன்!

அம்மனே தோன்றி யதனால் மக்கள்
செம்மையாய்க் கோவி லைவுரு வாக்கத்
தொன்மை வாய்ந்த மூல யிடத்தைத்
திண்மை யாய்க்கட் டிக்களிப் புற்று
ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னே
வேம்பது பிரியலாள் முகவூர் மாரி
அம்ம னுக்கிரண் டாம்மண் டபத்தை
அழகுற மக்கள் கட்டி வைத்தார்!
கட்டி வைத்த மண்ட பத்தில்
நெட்ட நெடுமூன் றாம்திண் ணையும்
எட்டி டமுடி யாமதில் சுவரும்
ரெட்டை நூறு வருடம் முன்னே
பட்டுச் சீலை தரித்து மின்னும்
பொட்டு குங்குமம் நெற்றி தன்னில்
இட்ட மாரிக்கு முகவூர் மக்கள்
கட்டி வைத்தனர் கோவி லுக்கே!

கோவி லுக்குவேண் டியமை யக்கல்
கொண்ட மண்ட பத்தி னோடு
தேவி யின்திரு வுருவ மாக
தெய்வங்கள் உற்சவ மூர்த்திகள் நான்கு
மேவிய மூலையில் பூத ரிசபம்
மேன்மை வாகனமாய் மதில்சுவரில் நின்று
தாவிய நூறு ஆண்டுகளுக் குமுன்னே
தன்னாலே மாரி அம்மனுக்கு கிடைத்ததே!

கிடைத்தது உற்சவ மூர்த்திகள் மூன்று
காளி மாரி விநாயகர் என்று
தடைகள் பலவும் இருந்த தம்மா
தடத்தில் சிலையாய் உருவா குவதில்
கடைந்தனர் சிலைகள் மாரி காளி
கடுகளவு சிரமம் ஏது மின்றி
உடைந்தனர் உள்ளத் தால்கண பதியின்
உருவத் தையாக் கிடும்முயற் சியிலே!

முயற்சியின் முதற்கண் வலக்கால் தன்னில்
முகத்தோடு ஐங்கரன்கொண் டான்குறை கண்டான்
அயற்சியில் லாது மறுமுயற் சிக்கண்
அருட்துதிக் கையினிற் குறையினைக் கண்டான்
துயர்ச்சி கொண்டார் ஊரார் உள்ளம்
துன்பப் பட்டார் உருவாக்குஞ் சிற்பி
வியர்த்து விறுவி றுத்த வேளை
வினாய கர்தோன் றினார்க னவிலே!

கனவில் தோன்றிதர் மகர்த்தா விற்கு
கணபதி சொன்னார் மலைத்து விடாதீர்!
நினைவில் முதலில் நீவிர் எம்மை
நிறுத்தி வைக்கா காரணத் தாலே
புனைவல் வளர்ப்பில் குறையினி நன்று
புனித வில்வம் அறுகு மிட்டு
நினைவில் என்னை நிறுத்தி வைத்து
நிறைந்த வார்ப்பிடு வருவே னென்றார்!

நிறைந்த வார்ப்பினால் நற்படி அமைந்த
நிகரிலாப் பெருமை கொண்ட சிலையாம்
உறைந்து உருக்கிடும் முறையுரு வாகி
உற்சவ மூர்த்தி விநாயாகர் மேலும்
கரைத்து மேலும் தங்கச் சேர்ப்பால்
கணபதி முகவூரில் உள்ளது போலே
தரணியில் உள்ள வேறு ஊரின்
ஆலயம் ஏதும் கொள்ள வில்லை!

ஆலயம் வேறெதும் கொள்ள வில்லை
ஆனந்த கணேசரைப் போலே, மெல்ல
காலமும் கனிந்து வந்தநே ரத்தில்
கும்பா பிடேகம் நற்படி நடந்து
ஞாலமும் செழித்திட பூவிழா நடத்த
தலைவர் வீர பத்திரன் அவர்கள்
ஆலய அம்மன் கொண்டா டியிடம்
அருளான வாக்கு கேட்டார் அதற்கு?

அதற்கு அம்மன் கொண்டாடி விழாவை
ஆரம் பிப்பது சரிதா னானால்
இதற்கு என்சன் நிதானத்திற்கு
இருநாலு பக்க மக்க ளெல்லாம்
பதற்ற மோடு வருகை தருவர்
பண்போ டன்போ டவர்களை நன்று
குதர்க்க எண்ணம் ஏது மின்றி
குடிகள் அனைவரும் ஏற்க வேண்டும்!
குடி மக்கள் அனைவரையும் ஏற்கச் செய்ய
குடியி ருக்கும் முகவூர் மக்கள்
அடிமனதால் சம்மதித் தால்தான் எனது
ஆசீர் வாதமெப் போதுமுண் டென்க
வெடிவெடித் துக்கொண் டாடும் பொங்கல்
பூக்குழி விழாஎண் பதுஆண் டுகளாய்
கொடிகட்டிப் பறக்குதய் யாமுக வூரில்
கொற்றவள் மாரி அம்மன ருளாலே!

கற்றலில் களிப்புறும் கனவான்கள் கொண்டும்
கர்ம வீரத்தில் கடமையில் நின்றும்
பற்றும் பரிவும் பணிவும் பற்றி
பல்வித மேன்மை கொண்ட மக்கள்
தெளிந்த அன்பால் தேடிய தெய்வம்
நற்றவ நாயகி மாரி அம்மன்
நடுநாய கமாயூரில் அமைந்துகாப் பதுகாண்!

முகவூர் சசிராஜா க.சந்திரசேகர்