அறுசுவையின் பண்புகள்

ஒவ்வொரு பொருளையும் அதனதன் சுவை, வீரியம், பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு என ஆறு வகையாகப் பிரித்துள்ளனர். அறுசுவையின் பண்புகள் என்ன என்று பார்ப்போம்.

இனிப்புச் சுவையின் தன்மை: மனதிற்கு மகிழ்ச்சி, ஐம்புலன்களுக்கு புத்துணர்ச்சி, உடலுக்கு இலகுத் தன்மை, ஏழு உடற்தாதுக்களுக்கும் ஊட்டம் கொடுத்தல், ஈரத்தன்மை, குளிர்ச்சி, கனம்.

இனிப்பு சுவை மிகுதி: உடல் எடை கூடுதல், தொட்டால் வலி, சோம்பல், அதிகத்தூக்கம், பாரம், பசியின்மை, அபரிதமான தசை வளர்ச்சி.

இனிப்பு சுவை குறைவு: உடல் அசதி, சோர்வு, புலன் உணர்வு குறைதல், ஏழு உடற்கட்டுகள் வன்மை குறைதல்.

 

புளிப்பு சுவையின் தன்மை: உமிழ்நீர்ச் சுரப்பு அதிகரித்தல், கண், புருவம் சுருங்கல், வாய் சுத்தப்படுதல், சீரணம் அதிகரித்தல், உடல் வலுப்படுதல், உடலில் சிறு வெப்பம், ஈரம்.

புளிப்பு சுவை மிகுதி: தாகம், கபம் நீர்மையாதல், பித்தம் அதிகரித்தல், செந்நீர் அதிகரித்தல், தசை கெடுதல், உடல் வீக்கம்.

புளிப்பு சுவை குறைவு: பித்தம் குறையும், பசியின்மை, வாயில் நீர் ஊறல், மூட்டுவலி, உடல் வறட்சி.

 

உப்புச் சுவையின் தன்மை: உமிழ்நீர் அதிகம் சுரத்தல், தொண்டை கரகரப்பு, சீரணம் அதிகரித்தல், கபம் சுரத்தல், ஈரத்தன்மை, மிதவெப்பம்.

உப்புச் சுவை மிகுதி: பித்தம் அதிகரித்தல், தாகம், மயக்கம், உடற்சூடு, புண், அரிப்பு, தசை குறைவு, உடலின் பல பாகங்களிலிருந்தும் இரத்தம் வடிதல், விழுங்க முடியாமை, தோலில் சிறுபுண்கள்.

உப்புச் சுவை குறைவு: சுவையின்மை, வாந்தி, செரியாமை.

 

கார்ப்புச் சுவையின் தன்மை: பசி அதிகரித்தல், வாயில் எரிச்சல், சிறுவெப்பம், வறட்சி.

கார்ப்புச் சுவை மிகுதி: மலட்டுத்தன்மை, இரைப்பைப்புண், மயக்கம், மூச்சடைத்தல், தலை சுற்றல், தொண்டை எரிச்சல், அதிக வெப்பம், தாகம், நடுக்கம், காலில் குத்து வலி.

கார்ப்புச் சுவை குறைவு: பசியின்மை, செரியாமை.

 

கச‌ப்புச் சுவையின் தன்மைகள்: வாயில் அழுக்கு நீக்குதல், நாக்கு மற்ற சுவைகளை உணர வைத்தல், பசியைத் துரிதப்படுத்துதல், கட்டிகளைப் போக்கல், வறட்சி, குளிர்ச்சி.

கச‌ப்பு சுவை மிகுதி: தடிப்பு, உடற்பருமன், உடற்கட்டுகளை மெலிய வைத்தல், உடல் வன்மை குறைதல், வாய் வறட்சி.

கச‌ப்புச் சுவை குறைவு: மூட்டு வலி, நாவறட்சி, உடல் வறட்சி.

 

துவர்ப்பு சுவையின் தன்மை: பழுதடைந்த தாதுக்களை நெறிப்படுத்துதல், நாவின் சுவை அரும்புகள் சுருங்கல், மற்ற சுவை உணர்வுகளைத் தடுத்தல்.

துவர்ப்பு சுவை மிகுதி: வாய் வறட்சி, குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்படுதல், வயிற்றுப்புசம், வாய்குளறல், சீரணம் பாதிக்கப்படுதல், பக்க வாதம், வலிப்பு, சுளுக்கு.

துவர்ப்புச் சுவை குறைவு: வாயில் நீர் ஊறல், மலம் இளகிச் செல்லல்.