அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?

அலையாத்திக் காடுகள் ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள்.

கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலை ஆத்திக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆத்துதல் என்பதற்கு மட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தல் என்பது பொருளாகும்.

இவை உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலோரப் பகுகளில் மட்டும் காணப்படுகின்றன. புவியில் உள்ள முக்கியமான சூழல் அமைப்புகளில் இதுவும் ஒன்று.

இவை சதுப்புநிலக் காடுகள், சுந்தரவனக் காடுகள், சமுத்திரக்காடுகள், கண்டன் காடுகள், சுரப்புன்னைக் காடுகள் மற்றும் தில்லைவனம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

அதிக உப்புத் தன்மை உடைய உவர் நீரும், அதிவெப்பமும் உடைய கடினமான சூழலில் இவை செழித்து வருகின்றன.

அதற்குக் காரணம் இத்தாவரங்களில் காணப்படும் உப்பினை வடிகட்டும் அமைப்பு மற்றும் அலைகள் நிறைந்த கடலில் மூழ்கி நிலைத்திருக்கப் பயன்படும் சிக்கலான வேர்கள் ஆகியவை ஆகும்.

மேலும் நீரால் சூழப்பட்டு குறைந்த ஆக்ஸிஜன் அளவு உடைய சேறு நிறைந்த வாழிடத்தில் செழித்து வாழ, இத்தாவரங்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன.

உலகெங்கும் 2மீ முதல் 10மீ வரை வளரும் சுமார் 110 வகையான தாவர வகைகள் அலையாத்திக் காடுகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதில் அடர்த்தியான புதர் குற்றுச் செடிகளும் மரங்களும் அடங்கும்.

இந்தியாவில் மட்டும் சுமார் 45 வகையான அலையாத்தி தாவரங்கள் வளருகின்றன.

திப்பரத்தை, சுரப்புன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், சிறுகண்டல், நரிகண்டல், கழுதை முள்ளி, நீர்முள்ளி, ஆற்றுமுள்ளி, கண்ணா, பன்னுக்குச்சி, தில்லை, சோமுமுந்திரி, கீரிச்செடி, உமிரி உள்ளிட்ட தாவர வகைகள் இதில் அடக்கம்.

உலகில் மொத்தம் 118 வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல நாடுகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இவற்றின் மொத்தப் பரப்பளவு சுமார் 1,37,000 சதுர கிமீ ஆகும்.

உலகில் ஐரோப்பா, அன்டார்டிக்கா கண்டங்களைத் தவிர ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இக்காடுகள் பரவிக் காணப்படுகின்றன.

இந்தோனேசியா சுமார் 23,000 சதுர கிமீ பரப்பு அலையாத்திக் காடுகளைக் கொண்டு உலகில் முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவில் சுமார் 4921 சதுர கிமீ பரப்பினைக் கொண்டுள்ள இக்காடுகள் மேற்கு வங்காளம், குஜராத், அந்தமான் நிகோபார், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் பரவியுள்ளன.

தமிழ்நாட்டில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் இக்காடுகள் காணப்படுகின்றன.

இவ்வகைக் காடுகள் சூழலில் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன.

பின்னல் போன்று சிக்கலான அமைப்பினை உடைய இத்தாவர வேர்கள் மிகச்சிறிய பாக்டீரியாக்கள் முதல் 10 அடி நீளமுள்ள சுறாக்கள் வரை பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாக திகழ்கின்றன.

இவைகள் ஆறானது கடலில் கலக்கும் இடத்தில் வாழ்வதால், ஆற்றில் இருந்து அடித்து வரப்படும் மண், கனிமங்கள் உள்ளிட்ட திடப்பொருட்கள் இவற்றின் அடர்த்தியான வேர்களினால் தடுக்கப்பட்டு அவ்விடத்தில் சேகரமாகின்றன.

இதனால் ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் வடிகட்டப்படுவதால் கடலில் மாசுகள் கலப்பது தடுக்கப்படுகிறது.

அலையாத்தித் தாவரங்கள் கடலுக்கு மீன் வளத்தைக் கொடுக்கும் பவளப்பாறைகளின் உருவாக்கத்திற்கு காரணமாகின்றன. அதாவது இத்தாவர வேர்களில்தான் இளம் பவளப்பாறைகள் தோன்றுகின்றன.

மேலும் பவளப்பாறைகளின் அழிவிற்கு கடலின் அமிலத்தன்மை முக்கிய காரணமாக உள்ளது.

இத்தாவர வேர்கள் கடலில் கலக்கும் நீராதாரங்களை வடிகட்டி கடலுக்குள் செலுத்துவதால், கடலின் அமிலத் தன்மை குறைந்து பளவப்பாறைகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஆதலால் வளமையான கடலுக்கு இக்காடுகள் மிகவும் அவசியானது.

பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் கார்பன்-டை-ஆக்ஸைடு. உலகளவில் காடுகளைப் பாதுகாப்பதால் பருவநிலை மாற்றத்திற்கான தீர்வில் 30 சதவீதத்தை எட்டலாம். ஏனெனில் நிலத்தில் உள்ள காடுகள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உட்கவர்ந்து கொள்ளும் ஆற்றலுடையவை.

ஆனால் அலையாத்திக் காடுகள் நிலக்காடுகளைப் போல 10 மடங்கு கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கவரும் திறனுடையவை. எனவே பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் அலையாத்திக் காடுகளின் பங்கு அளப்பரியது.

அலையாத்தித் தாவரங்கள் கடல் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கடற்கரை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்படாமலும் தடுக்கிறது. மேலும் இது கடலுக்கு அருகில் நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுருவதையும் (Sea Water Intrusion) தடுக்கிறது.

இத்தாவரங்கள் சுனாமி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது கடலலைகளின் வேகத்தைத் தடுத்து கடற்கரையையும், மக்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, இயற்கை அரண்களாகச் செயல்படுகின்றன.

அலையாத்திக் காடுகள் தேன், மரச்சாமான்கள், விறகுகள், மீன்கள் உள்ளிட்டவைகளைத் தந்து மக்களின் வாழ்வாதாரங்களையும் பெருக்குகின்றன. இந்தியா மற்றும் வங்கதேசத்தில் சுமார் 45 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் இக்காடுகளை நம்பியே உள்ளது.

உலகின் முக்கியமான உயிர்ச்சூழல் அமைப்புகளை அலையாத்திக் காடுகள் உருவாக்குகின்றன. காலநிலையை சீராக வைத்திருக்கவும், கடற்கரையோரங்களைப் பாதுகாக்கவும், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு உணவினை வழங்கியும், பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும், சுனாமி, புயல் இயற்கை சீற்றங்களின் சேதத்தைத் தடுக்கவும் இச்சூழலமைப்பு உதவுகிறது.

தொழிற்சாலைக் கழிவுநீர் கடலில் கலப்பது, அணைகள் மூலம் நீரினைச் சேகரிப்பதால் கடலில் கலக்கும் நீராதாரங்களின் உப்பு தன்மை அதிகரிப்பு, வீட்டு உபயோகங்கள் மற்றும் தொழிற்சாலை உபயோகங்களுக்காக மரங்கள் அழிப்பு, இறால் பண்ணைகள் அமைப்பு ஆகியவை இக்காடுள் அழிப்பிற்கு முக்கிய காரணமாகும்.

பல்வேறு நாடுகளில் இக்காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் இத்தாவரங்களை நடவும் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

எனினும் பல இடங்களில் வாழிடத்திற்கு ஏற்ப தகுந்த அலையாத்தித் தாவரங்களை பயிர் செய்யாததால் அவற்றால் வளர இயலாமல் இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அலையாத்தியை நடவு செய்யும் இடத்தில் உள்ள‌ கடலலைகளின் வேகம் மற்றும் மண்ணரிப்பு ஆகியவைiயும் இச்செயலில் பின்னடைவை உண்டாக்குகின்றன.

அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே யுனஸ்கோ நிறுவனம் ஜூலை 26-ந் தேதியை அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.

அலையாத்திக் காடுகளின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, வளமான எதிர்காலத்தை இளம் தலைமுறையினருக்கு பரிசளிப்போம்.

வ.முனீஸ்வரன்

One Reply to “அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?”

  1. இயற்கை அரணாக இருக்ககூடிய இவ்வகை காடுகளை சதுப்புநிலங்களில் வளர்ப்பதற்கு அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்து, வளர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.