ஆபிரகாம் லிங்கனும் அரிவாளும்

ஜனாதிபதி தேர்தலில் ஆபிரகாம்லிங்கன் வயல்வெளிகளுக்குக் கூடச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஓட்டுக் கேட்டார். அப்படி அவர் ஒரு வயலுக்குச் சென்ற பொழுது, அங்கே ஒரு விவசாயி அறுவடை செய்து கொண்டிருந்தார்.

“உங்கள் ஓட்டு எனக்கே வேண்டும்” என்று அவரிடம் லிங்கன் கேட்டுக் கொண்டார். அந்த விவசாயி, “நான் சாப்பிடப் போகிறேன்; கொஞ்சம் கதிர்களை அறுக்கிறீர்களா?” என்றார். அவரிடம் இருந்து அரிவாளை வாங்கிக் கொண்டு, அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டார், லிங்கன்.

விவசாயி திரும்பி வரத் தாமதம் ஆனதால், லிங்கன் வாக்காளர்களைச் சந்திக்கச் சென்று விட்டார். சாப்பிட்டு விட்டு விவசாயி திரும்பி வந்தபோது, லிங்கனைக் காணவில்லை; கதிர்கள் மட்டும் அறுத்து, கட்டி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அரிவாளைக் காணோம்.

தேர்தல் முடிவடைந்தது; லிங்கன் வெற்றி பெற்றார். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு விருந்து நடத்தினார். அதற்கு இந்த விவசாயியையும் அழைத்திருந்தார். விழாவின் போது, லிங்கன் விவசாயியைப் பார்த்து, நலம் விசாரித்தார்.

“நான் அழகாக அறுவடை செய்திருந்தேனா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார், லிங்கன். “நன்றாகத்தான் அறுவடை செய்து இருக்கிறீர்கள்! ஆனால்…. அரிவாளை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார், விவசாயி.

“பண்ணையில் இருந்த குடிசையின் கூரையில் செருகி வைத்து விட்டு வந்தேனே” என்றார், லிங்கன். விருந்து முடிந்தது; விவசாயி நேரே பண்ணை வீட்டிற்குத் திரும்பினார். அங்கே குடிசையின் கூரையில் லிங்கன் செருகி வைத்திருந்த அரிவாள் அப்படியே இருந்தது.