ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி என்பதுதான் இவ்வாரத்தின் பதிவு. பொதுவாக ஜாம் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் சிறியவர்கள் இதனை மிகவும் விரும்பி உண்பர்.

கடைகளில் செய்யப்படும் ஜாம்மில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க காப்புப் பொருட்கள் சேர்ப்பர். அது ஆரோக்கியமானது அல்ல.

வீட்டில் தயார் செய்யப்படும் ஜாம்மானது சுவையோடு ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. இனி எளிய முறையில் ஆப்பிள் ஜாம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 2 எண்ணம் (தோராயமாக 400 கிராம்)

வெள்ளை சர்க்கரை – ஆப்பிள் விழுதில் பாதி அளவு

தண்ணீர் – 1/4 டம்ளர்

எலுமிச்சம் பழம் – 1/2 மூடி (மீடியம் சைஸ்)

செய்முறை

ஆப்பிளை கழுவி தோல் நீக்கிக் கொள்ளவும்.

பின்னர் அதனை சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

 

ஆப்பிள் துண்டுகள்
ஆப்பிள் துண்டுகள்

 

தண்ணீர் சேர்க்கும் போது
தண்ணீர் சேர்க்கும் போது

 

விழுதாக்கியதும்
விழுதாக்கியதும்

 

எலுமிச்சம் பழத்தை கழுவி பாதியாக்கிக் கொள்ளவும்.

ஆப்பிள் விழுதினை அளந்து கொள்ளவும்.

1 பங்கு ஆப்பிள் விழுதிற்கு 1/2 பங்கு வெள்ளை சர்க்கரை சேர்த்தால் சரியாக இருக்கும்.

அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து அதில் ஆப்பிள் விழுதைச் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

 

ஆப்பிள் விழுதினை அடுப்பில் வைத்ததும்
ஆப்பிள் விழுதினை அடுப்பில் வைத்ததும்

 

ஆப்பிள் கலவைக் கொதித்து லேசாக கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வெள்ளைச் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.

 

ஆப்பிள் விழுது கெட்டியாக ஆரம்பித்ததும்
ஆப்பிள் விழுது கெட்டியாக ஆரம்பித்ததும்

 

சர்க்கரையைச் சேர்க்கும் போது
சர்க்கரையைச் சேர்க்கும் போது

 

சர்க்கரை இளகுவதால் ஆப்பிள் கலவை நீர்த்துக் காணப்படும்.

மிதமான தீயில் அடுப்பினை வைத்து அவ்வப்போது கலவையை கிளறிக் கொண்டே இருக்கவும்.

கலவை கெட்டியாகி பளபளவென தெரியும்.

அப்போது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஆப்பிள் கலவையை போட்டு, லேசாக சாய்க்கும்போது கலவை நழுவாது அப்படியே இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.

 

கலவை கெட்டியானதும்
கலவை கெட்டியானதும்

 

பதம் பார்க்கும் போது
பதம் பார்க்கும் போது

 

இப்பொழுது எலுமிச்சாற்றை கலவையில் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

 

எலுமிச்சையை பிழியும் போது
எலுமிச்சையை பிழியும் போது

 

எலுமிச்சை சாற்றினைச் சேர்த்ததும்
எலுமிச்சை சாற்றினைச் சேர்த்ததும்

 

சுவையான ஆப்பிள் ஜாம் தயார்.

 

ஆப்பிள் ஜாம்
ஆப்பிள் ஜாம்

 

எலுமிச்சைச் சாற்றை ஜாம்மில் சேர்ப்பதால், ஜாம் இறுகி விடாமல் இருப்பதோடு அதனுடைய இனிப்புச் சுவையை தித்திக்கச் செய்யும்.

இதனை, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு

ஜாம்மிற்கு பழுத்த மாவு போன்ற ஆப்பிளைப் பயன்படுத்தினால் சுவை மிகும்.

விருப்பமுள்ளவர்கள் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக மண்டை வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஜாம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.