ஆமணக்கு – மருத்துவ பயன்கள்

ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.

வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும்.

பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ வளரும் இயல்புடையது. கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகளை மாற்றடுக்கில் கொண்ட, சாம்பல் நிறமான பூச்சுடைய, 10 அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.

இலைகள் மிகப் பெரியதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும், தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும்.

எளிதில் உடையக்கூடிய தண்டுக் கட்டையைக் கொண்டது. முட்களுடன் கூடிய காய்ந்தால் வெடிக்கக்கூடிய காய்களை உடையது. பழங்கள் கூர்மையான 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டவை.

விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு. விதைக்கு முத்துக்கொட்டை என்கிற பெயரும் உண்டு.

தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகின்றது.

விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது. இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை.

பழங்கால இலக்கியங்களில், இத்தாவரத்தின் அமைப்பைக் குறிக்கும் வகையில் சித்ரபீஜ (அழகான விதைகள்), பஞ்சாங்குல (உள்ளங்கை போன்ற இலைகள்), வாதாரி (வாதத்திற்கு எதிரி) ஆகிய பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செல்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன. சிற்றாமணக்கிற்கும் பேராமணக்கிற்கும் உள்ள முக்கிய வேற்றுமை அவற்றின் கொட்டைகளின் அளவைப் பொறுத்தது.

சிற்றாமணக்கு சிறிய அளவுள்ள கொட்டையும், பேராமணக்கு பெரிய அளவுள்ள கொட்டையும் கொண்டது. இந்த இரண்டு வகைகளுக்கும் மருத்துவப் பயன் ஒன்றுதான் என்பதாகவே பெரும்பாலான மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சிவப்பான விதை மூலமாக செல்வாமணக்கு என்கிற மூன்றாவது வகை பிரித்தறியப்படுகின்றது.

ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.

3 தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம்.

ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும். சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவி, அனலில் இலேசாக வதக்கி, இளஞ்சூடான நிலையில் மார்பில் வைத்துக் கட்டலாம். அல்லது ஆமணக்கு இலையைச் சிறு துண்டுகளாக அரிந்து, தேவையான அளவு துவரம் பருப்பு சேர்த்து கீரையாகச் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஆமணக்கு விதைகளைப் பச்சையாக / காய்ந்த நிலையில் அப்படியே சாப்பிடுவது மிகவும் நச்சுத்தன்மையானது, மரணம் கூட சம்பவிக்கலாம்.

விளக்கெண்ணெய் குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது என்கிற தகவல் இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. விளக்கெண்ணெய் கருத்தடை மருந்துகள், களிம்புகளிலும் அதிகமாக உபயோகமாகின்றது.

இந்தியாவின் பஸ்தர் பழங்குடி மக்கள் இதன் இலைச்சாற்றை மூட்டுகளில் ஏற்படும் வலியைப் போக்கவும், இளம் இலைகளை பேதி மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

விளக்கெண்ணெயில் உயர்தரமானது பழுப்பான வெண்மை நிறமாகவும், நல்ல மணத்துடன் கூடியதாகவும், படிவுகள் அற்றதாகவும் இருக்கும்.

தரம் குறைந்த ரகம் அடர்த்தியான மஞ்சள் நிறமாகவும், கனமாகவும், தெவிட்டலான மணம் கொண்டதாகவும் இருக்கும்.தரமான எண்ணெயையே உள்மருந்தாகக் கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.