ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியை சிறுவன் ஒருவனுக்கு வயதான பாட்டி கூறிக் கொண்டிருந்ததை மரங்கொத்தி மணிக்கருத்தன் கேட்டது.

அதைக் கேட்டவுடன் மரங்கொத்தி மகிழ்ச்சியால் மரத்தினை கொத்துவதை விட்டுவிட்டு அவர்களைக் கவனித்தது.

அப்போது வெடி ஒன்று வெடிக்க மரங்கொத்தி மணிக்கருத்தன் பயந்து அவ்விடத்தை விட்டு காட்டை நோக்கிச் சென்றது.

மாலையில் வழக்கமாக கூடும் வட்டப்பாறைக்கு முதலில் மரங்கொத்தி மணிக் கருத்தன் வந்தது.

“இதுவரை பழமொழியைக் கூறியவர்களே அதற்கான விளக்கத்தையும் கூறினார்கள். ஆனால் இன்று நான் பழமொழியை மட்டுமே அறிந்துள்ளேன். பழமொழிக்கான விளக்கத்தை என்னால் அறியமுடியவில்லை” என்று மனதிற்குள் வருந்தியது.

அப்பொழுது காக்கை கருங்காலன் வட்டப்பாறைக்கு வந்தது. கருங்காலனிடம் மரங்கொத்தி மணிக் கருத்தன் தன்னுடைய மனக்குறையைக் கூறியது.

காக்கை கருங்காலனும் “கவலைப்படாதே மணிக் கருத்தா உன்னுடைய பழமொழிக்கான விளக்கத்தை நான் விளக்குகிறேன்” என்றது.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே குட்டி யானை குப்பன் அங்கே வந்தது.

“மணிக் கருத்தா நீ முதலிலேயே இங்கே வந்துவிட்டாயா?. இன்று நீதான் பழமொழியைக் கூறப் போகிறாயா?” என்றது. “ஆமாம்” என்று ஒரே வரியில் மணிக் கருத்தன் பதில் கூறியது.

அப்போது வட்டப்பாறைக்கு ஒவ்வொருவராக எல்லோரும் வர ஆரம்பித்தனர். கூட்டத்தினர் எல்லோரும் வந்தவுடன் காக்கைக் கருங்காலன் “என் அருமைக் குழந்தைகளே இன்று மரங்கொத்தி மணிக் கருத்தன் தான் கேட்ட பழமொழி குறித்து உங்களிடம் கூறுவான்” என்றது.

மரங்கொத்தி மணிக் கருத்தன் “நான் இன்று கேட்ட பழமொழி ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதாகும்” என்றது.

காக்கைக் கருங்காலன் எழுந்து “இப்பழமொழிக்கான விளக்கத்தை நான் கூறுகிறேன். இன்றைக்கு மருத்துவப் பணியிலிருக்கும் மருத்துவர்களை மனம் புண்படும்படி பேசுவதற்காக இந்தப் பழமொழியை பயன்படுத்துகின்றனர்.

இன்னும் சிலரோ மருத்துவமனைகளில் நோயால் ஒருவர் இறந்தவுடன் இந்தப் பழமொழியை கூறுவதும் உண்டு. ஆனால் இதன் பொருளோ வேறு விதமானது.

தமிழர்களின் மருத்துவ முறைகளில் தலையாயது சித்த மருத்துவம் ஆகும். இம்மருத்துவம் சித்தர்களால் கண்டு உணரப்பட்டு மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ முறையில் அடிப்படையாக மூலிகைத் தாவரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

நோய்க்கு தக்க மூலிகைகளை கொடுத்து நோயைத் தீர்க்க முயலும் ஒருவன், மூலிகைத் தாவர வகைகளை அடையாளம் கண்டு கொள்ள தனது வாழ்நாளில் பாதியை செலவிட தயாராக இருக்க வேண்டும்.

இந்த சித்த மருத்துவ முறைகளை கற்றுக் கொள்ள மாணவனாக சேரும் ஒருவன் ஆயிரம் மூலிகைகளை வேருடன் பறித்து, அதன் தன்மைகள் குறித்தும் பயன்பாடு குறித்தும் ஆராய்ந்து அறிந்த பின்னர் தான் அவன் அரைவைத்தியன் என்ற நிலைக்கு வரமுடியும் என்று அக்காலத்தில் கூறுவார்கள்.

எனவே தான் “ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்ற இந்தப் பழமொழி உருவானது.

அது நாளடைவில் மருவி “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்று மாறிவிட்டது.

குழந்தைகளே மணிக் கருத்தன் கூறிய பழமொழிக்கான விளக்கம் புரிந்தது தானே. நாளை வேறு ஒருவர் பழமொழி பற்றிக் கூறுங்கள். இப்போது இப்பழமொழி குறித்து ஏதேனும் கூற விரும்பினால் கூறலாம்” என்று காக்கை கருங்காலன் கூறியது.

கழுதை காங்கேயன் “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதைக் கேட்டதும் அப்படியானால் இரண்டாயிரம் பேரைக் கொன்றவன் அல்லவா முழு வைத்தியன் என்று எண்ணினேன். ஆனால் நீங்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டதும் என்னுடைய சந்தேகம் முழுவதும் நீங்கி விட்டது.” என்று கூறியது.

“சரி இப்பொழுது எல்லோரும் கலைந்து செல்லுங்கள். நாளை பார்ப்போம்.” என்று காக்கைக் கருங்காலன் கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

One Reply to “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.