இனிப்பு பச்சரிசி செய்வது எப்படி?

இனிப்பு பச்சரிசி செய்து நவராத்திரியின் முக்கிய நாளான சரஸ்வதி பூஜை அன்று வழிபாட்டின்போது படைப்பதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

சரஸ்வதி பூஜை அன்று சுண்டல், பொரி, பொங்கல் மற்றும் பழவகைகளுடன் இனிப்பு பச்சரிசி சேர்த்து படையலிட வேண்டும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

இது உடனடி சக்தி தரும் உணவு என்பதால் இதனை விரத வழிபாட்டில் செய்யப்படும் படையலின் ஒரு பகுதியாகக் கொள்ளலாம்.

இதனை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

இனிப்பு பச்சரிசி செய்யத் தேவையான பொருட்கள்
இனிப்பு பச்சரிசி செய்யத் தேவையான பொருட்கள்

 

பச்சரிசி – 200 கிராம்

பாசிப்பருப்பு – 50 கிராம்

கருப்பு எள் அல்லது வெள்ளை எள் – 3ஸ்பூன்

தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

சீனி – 150 கிராம்

 

செய்முறை

முதலில் பச்சரிசியை தண்ணீரில் அலசி பின் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பச்சரிசி
ஊற வைத்த பச்சரிசி

 

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

பத்து நிமிடம் கழித்து அரிசியை தண்ணீர் சிறிதும் இன்றி நன்கு வடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வெறும் வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுக்கவும். பாசிப்பருப்பு பொன்நிறமானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டிவிடவும்.

பாசிப்பருப்பை வறுக்கும் போது
பாசிப்பருப்பை வறுக்கும் போது

 

பின் வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு வறுக்கவும். எள்ளானது பொரியத் தொடங்கியதும் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.

எள்ளை வறுக்கும் போது
எள்ளை வறுக்கும் போது

 

தேங்காய் துருவலை வெறும் வாணலியில் போட்டு சுருங்க வதக்கவும். இதனையும் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.

தேங்காய்ப் பூவை வறுக்கும் போது
தேங்காய்ப் பூவை வறுக்கும் போது

 

வறுத்த பாசிப்பருப்பு, எள் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றின் சூடு ஆறியவுடன் வடித்து வைத்துள்ள பச்சரிசியுடன் ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.

பின் அதனுடன் சீனி சேர்க்கவும். பச்சரிசி கலவையை நன்கு ஒரு சேரக் கலக்கவும். சுவையான இனிப்பு பச்சரிசி தயார்.

சுவையான இனிப்பு பச்சரிசி
சுவையான இனிப்பு பச்சரிசி

 

நவராத்திரி பூஜை, கணேச சதுர்த்தி உள்ளிட்ட எல்லா வழிபாட்டின் போதும் இனிப்பு பச்சரிசியை செய்து படையலிடலாம்.

தேங்காய் துருவலை வதக்கிச் சேர்ப்பதால் இதனை மறுநாளும் உண்ணலாம்.

 

குறிப்பு

பச்சரிசியைத் தேர்வு செய்யும்போது உருண்டை அரிசியாக தேர்வு செய்யவும்.

விருப்பமுள்ளவர்கள் ஏலக்காயைத் தூள் செய்து இனிப்பு அரிசியுடன் கலந்து உண்ணலாம்

சீனிக்குப் பதில் மண்டை வெல்லம் சேர்த்தும் இனிப்பு அரிசி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.