இன்னுமா அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?

ஒரு ஜென் குருவும் அவரது சீடனும் குடிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்.

அப்போது ஓர் இளம்பெண் அவர்களுக்கு முன்னே ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள்.

திடீரென ஆற்றில் வெள்ளம் வந்தது. அதிவேகமாக நீர்மட்டம்
உயர்ந்துவிட்டது.

அந்தப் பெண்ணிற்கு நீச்சல் தெரியவில்லை. அவள் வெள்ளத்தில் தத்தளித்தாள்; உயிருக்குப் போராடினாள்.

குரு சட்டென்று அவளை நெருங்கிச் சென்று அவளைத் தன் கைகளால் தூக்கினார்.

தன் தலைக்குமேல் அவளைத் தூக்கியபடி ஆற்றைக் கடந்து
அக்கரையை அடைந்தார்.

கரையில் அந்தப் பெண்ணை இறக்கி விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெண்ணும் நன்றி சொல்லிவிட்டு வேறு வழி சென்றாள்.

சீடனுக்கோ ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் குருவைக் கேள்வி கேட்க அவனுக்குத் தைரியமில்லை. மாலையிலும் அவன் தவிப்போடே இருந்தான்.

குருவோ அவனுடைய தவிப்பைப் புரிந்து கொண்டார்.

சீடனைப் பார்த்து, ‘என்ன குழப்பம்? பயப்படாமல் கேள்’ என்றார்.

தயங்கிய சீடன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, குருவே, இன்று காலை ஆற்றில் நடந்த சம்பவம்…’ என்று இழுத்தான்.

‘தைரியமாகச் சொல்’ என்றார் குரு.

‘இல்லை குருவே, ஆற்றில் ஓர் இளம்பெண்ணைத் தொட்டுத் தலைக்குமேல் தூக்கினீர்களே?’ என்று எப்படியோ கேட்டு முடித்துவிட்டான் சீடன்.

குரு கோபப்படவில்லை; கடகடவென்று சிரித்தார்.

‘சீடனே, அவளை நான் அங்கேயே இறக்கி விட்டு விட்டேனே; நீ இன்னுமா அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?’ என்றார் குரு.

சீடன் மவுனமானான்.

அந்த சீடனைப் போலத்தான் நாமும். தேவையற்ற பல
விச‌யங்களை நம் தலைமேல் தூக்கிச் சுமந்துகொண்டு திரிகிறோம்.

பாரத்தை இறக்கி வைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.