இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

இல்லற வாழ்வில் சிக்கனம்

இல்லற வாழ்வில் சிக்கனம் வேண்டும். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்றிருப்பது நல்லது.

சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று கருதுகிறார்கள். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு.

சிக்கனம் வரவேற்கத் தகுந்தது; கருமித்தனம் வெறுக்கத் தகுந்தது.

எது சிக்கனம்? எது கருமித்தனம்? என்பதை மணமக்கள் உணர்ந்துகொள்வது நல்லது.

எட்டு மைல் உள்ள ஒரு ஊருக்கு வாடகைக் காரைக் கூப்பிட்டு இருபது ரூபாய் கொடுத்துப் போய் வருவது ஆடம்பச் செலவு; தேவையில்லாதது.

அவ்வூருக்கு 50 காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏறிப் போய் வருவது சிக்கனச் செலவு; விரும்பக்கூடியது.

50 காசும் கொடுக்க விரும்பாமல், 5 காசுக்குப் பட்டாணிக் கடலையை வாங்கி மடியில் கட்டிக்கொண்டு நடந்து செல்வது கருமித்தனம். இது வெறுக்கத் தகுந்தது.

 

சென்னைக்குச் செல்ல எண்ணி முதல் வகுப்பில் பயணம் செய்து, மிகப்பெரிய தங்கும் விடுதிகளில் தங்கி, வாடகைக் கார்களில் ஊரைச் சுற்றி வந்து ரூ.500 செலவிட்டு வருவது ஆடம்பச் செலவு. இது தேவையில்லாதது.

20ரூபாய் செலவில் இரண்டாம் வகுப்பில் படுத்துறங்கிச் சென்று          10ரூபாய் செலவில் ஒரு அறையில் தங்கி, பேருந்துகளில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்று, ரூ.50, 60 செலவில் சென்னைக்குப் போய் வேலையை முடித்து வருவது சிக்கனம். இது வரவேற்கத் தகுந்தது.

சாலைகளில் காத்திருந்து குறைந்த செலவில் லாரிகளில் பயணம் செய்து, சென்னை சென்று, ரயில்வே பிளாட்பாரத்திலேயே தங்கியிருந்து, செல்லவேண்டிய இடங்களுக்கு நடந்து சென்று, சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வாங்கித் தின்று தண்ணீரைக் குடித்துவிட்டுத் திரும்புவது கருமித்தனம்; இது வெறுக்கத் தகுந்தது.

 

ஓர் ஆண்மகன் விலை உயர்ந்த பட்டு சரிகை உடைகளை அணிந்து திரிவது ஆடம்பரம்; தேவையில்லாதது.

தூய்மையான வெள்ளை ஆடைகளை அணிந்து வாழ்வது சிக்கனம்; விரும்பத் தகுந்தது.

அழுக்கு நிறைந்த கிழிந்த உடைகளை உடுத்திச் செல்வது கருமித்தனம்; வெறுக்கத் தகுந்தது.

இம்மூன்றையும் பெரும் பணக்காரர்களையோ, கடும் ஏழை மக்களையோ நினைக்காமல்  நம்மைப் போன்ற நடுத்தர மக்களை எண்ணியே கூறுகிறேன்.

இவற்றிற்கு ஒரு இலக்கணமும் உண்டு.

அது, தேவைக்குமேல் செலவு செய்வது டம்பம்.

தேவையின் அளவு செலவு செய்வது சிக்கனம்.

தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம் என்பதே.

இதை மணமக்கள் தம் வாழ்நாளெல்லாம் கையாள்வது நல்லது.

இல்லற வாழ்வில்  சேமிப்பு

குடும்ப வாழ்க்கையில் சேமிப்பு இன்றியமையாத ஒன்று.

எவ்வளவு ரூபாய் வருமானம் வந்தாலும், அவ்வளவையும் செலவு செய்து வாழ்வது நல்லதல்ல.

அதற்குமேல் அதிகச் செலவு செய்து கடன் வாங்கி வாழ்வது ஒரு கெட்ட பழக்கம். இது வாழ்க்கையைக் கெடுத்துவிடும்.

ஆகவே வருவாயில் சிறிதளவேனும் மிச்சப்படுத்தி வங்கிகளில் சேமித்தாக வேண்டும். இவ்வாறு சேமிப்பது 5, 10 ஆக இருப்பினும் பின்னால் அது ஒரு பெருந்தொகையாகக் காட்சியளிக்கும்.

தேவைக்கு மேற்பட்ட சாமான்களை வீட்டில் அடைத்து வைக்கக் கூடாது. அது வீட்டிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி மூளையிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி, நாள்தோறும் துன்புறுத்தி வரும்.

 

தேவையான பொருள்களை மட்டும் வாங்கி வைத்து, வீடுகளில் அழகாக அடுக்கி வைத்து, காண்போர் மனம் மகிழும்படி சிக்கன வாழ்வு வாழ்வதே நல்வாழ்வுக்கு வழியாகும்.

உணவிலும், உடையிலும், பயணத்திலும், பொருளாதாரத்திலும், சேமிப்பிலும் மட்டுமல்ல. குழந்தை பெறுவதிலும் சிக்கனத்தைக் கையாண்டு தீரவேண்டும்.

பலர் அதிக சாமான்களை எடுத்துக்கொண்டு இரயிலிலும் பஸ்ஸிலும் பயணம் செல்கிறார்கள்.

இவற்றைத் தாங்களும் தூக்க முடியாமல், தூக்குவதற்கு ஆளும் கிடைக்காமல் கிடைக்கும் இடங்களில் அதிகக்கூலியும் கொடுக்க நேர்ந்து, சாமான்களும் களவுபோய், போகவேண்டிய இடங்களுக்குப் போகமுடியாமல் தவித்துத் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.

இத்தகையோருடைய வழிப்பயணத்தையும், சுமையையும் தொல்லையையும், துன்பத்தையும் அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களும் அனுபவித்தாக வேண்டும்.

ஆகவே எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்ற வாழ்க்கையை மணமக்கள் இன்று முதலே கையாளத் தொடங்குவது நல்லது.

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்

 

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு ஆகியவற்றை இருகண்களாகக் கருதி நல்வாழ்வு வாழ முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் வழிகாட்டுகிறார்.

திருமண வாழ்வில் ஒழுக்கம், அறம் ஆகியவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

One Reply to “இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.