உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

உலக தாய்மொழி தினம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு. இத்தாய்மொழியைச் சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலக மக்களின் தாய்மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதே இந்நாள் கடைப்பிடிப்பதின் நோக்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை சக மனிதனுக்கு மொழியாலே தெரிவிக்கிறான்.

குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தாயின் ஒலியை தாய்மொழி வடிவில்தான் முதலில் அறிகிறது. எனவே தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் விழி போன்றது.

பல மொழிகளைக் கற்று அறிந்த அறிஞனால் ஏதேனும் ஒன்றை புரிந்த கொள்ள அவன் முதலில் பயன்படுத்துவது தாய்மொழியே ஆகும்.

 

உலக தாய்மொழி தினம் உருவான விதம்

இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் உருது பாகிஸ்தானின் அரசு மொழியாக இருந்தது. 1952-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மக்கள் வங்கமொழியை அரசு மொழியாக அங்கரீக்க கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பிப்ரவரி 21 அன்று தாகாவில் ஊரடங்கு உத்திரவு இடப்பட்டது. உத்திரவினையும் மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர்.

இந்த நான்கு மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ஐ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது.

வங்கதேச அரசின் முயற்சிகள் மற்றும் அனைத்துலக ஆதரவு அமைப்புகள் காரணமாக 1999 பிப்ரவரி 21 அன்று பொது மாநாட்டில் உலக தாய்மொழி தின அறிவிப்பினை யுனெஸ்கோ வெளியிட்டது.

பல்வேறு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதையும் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் கொள்கையாகக் கொண்டு இவ்வறிப்பு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது.

2000 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ஆம் நாள் உலக தாய்மொழி தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு சர்வதேச மொழிகளின் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

வங்காளதேச நாட்டில் உலக தாய்மொழி தினம் கடைப்பிடிப்பதற்காக அன்றைய தினம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தாய்மொழியின் சிறப்பு

தாய்மொழியைப் பயிற்று மொழியாக கொண்ட ஜெகதீஸ் சந்திர போஸ், பி.சி.ராய், எடிசன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்கள் பலர் உலகில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றனர்.

ஜப்பானியர்கள், ஜெர்மனியர்கள் போன்றோர் தங்கள் தாய்மொழி மூலம் கல்வி கற்று பொருளாதார தன்னிறைவு பெற்று தாங்களும் முன்னேறி தாங்கள் சார்ந்த நாட்டினையும் முன்னேற்றி வருகின்றனர்.

பல மொழி புலமை பெற்ற பாரதியும் தன்னுடைய தாய்மொழியாம் தமிழ்மொழியானது தான் கற்றறிந்த மொழிகளில் மிகவும் இனிமையானது என “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று குறிப்பிடுகின்றார்.

காந்திஜியும் “குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் எண்ணங்களுக்கிடையேயான இணக்கத்தைக் குறைத்துவிடும். எனவே தாய்மொழியே பயிற்று மொழியாக இருப்பது சிறந்தது” என 1917-ல் புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் உரை ஆற்றியுள்ளார்.

இந்திய தேசிய கீதம் இயற்றியவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஆங்கில மொழியில் கவிதைகளை திறம்பட எழுதியவரும் ஆகிய ரவீந்தரநாத் தாகூரும் தன் தாய்மொழியான வங்களாத்தில் நன்கு புலமைப் பெற்றதாலே கவிதை உலகில் புகழின் உச்சியை தொட்டார்.

காந்திஜியும் தன் சுயசரிதையான சத்திய சோதனையை முதலில் தம் தாய்மொழியிலேயே எழுதினார் என்பதும் தாய்மொழிக்கான சிறப்பாகும்.

 

தாய்மொழியாம் தமிழின் சிறப்பு

நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள் சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழியாக மொழி ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

தமிழ்மொழி ஏனைய மொழிகளைவிட மிகநீண்ட இலக்கண இலக்கிய மரபுகளை உடையது. அதனாலே தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இன்றைக்கு இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவும் தமிழ் உள்ளது. காலத்தினால் பிறமொழிகளின் ஆதிக்கம் அதிகரித்த போதும் இன்றைக்கும் நிலைத்து வழக்கத்தில் இருக்கும் மொழி தமிழ் என்பது பெருமை கொள்ளத்தக்க விசயமாகும்.

ஒவ்வொருவரும் தம்தம் தாய்மொழியைப் போற்றி பாதுகாக்க உலக தாய்மொழி தினத்தில் உறுதி மொழி ஏற்று அதனை செயல்படுத்த முனைவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.