உழவர் திருநாள்

களர் நிலத்தையும் தம் உழைப்பால் உழுது நல் கழனிகளாக்கும் தூய தொழில் செய்பவரே உழவர்! இவரது பெருமையை திருவள்ளுவர் இவ்வாறு கூறுகின்றார்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்”
இத்தகு உயர்ந்த மதிப்பிற்குரியவர்கள் உணவை விளைவித்துத் தரும் உழவர்கள்!

உழவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது காலம் காலமாய் வரும் வாழ்வியல் மொழி!

உழவனின் மேன்மையை உணர்ந்ததால்தான் அக்காலம் தொட்டு இக்காலம் வரை கவிஞர் பெருமக்கள் உழவர்களை வாழ்த்துகிறார்கள்! வணங்குகிறார்கள்!. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதி!

தேசத்தந்தை காந்தியடிகள் ஒரு நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் என்றார். கிராமங்களில் தான் விளைநிலங்கள் உள்ளன, உழவர்களே உயிர் நாடிகளாய் உள்ளனர் என்பதே இதன் பொருள்.

அத்தகு உழவர்களுக்கும் அவர்களது உழைப்பிற்கு உறுதுணையாய் இருப்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து அதன் வாயிலாக அவர்களது நல்ஆசிகளை நாம் பெறுவதற்கு ஏதுவாக நாம் கொண்டாடுவதே உழவர் திருநாளாகும்.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ,
உழைத்து உழைத்து கரங்கள் உரமேறி இருக்க,
கலயத்தில் கஞ்சியுடன் காததூரம் நடந்து,
காளைகளை விரட்டி கழினியிலே ஏர் ஓட்டி,
உழவு வேலைகள் செய்து,
உருப்படியாய் நெல்மணிகளை களத்துமேட்டில் கொண்டு சேர்க்கும்
உயர்ந்தவரே உழவர்கள்!
ஏரோட்டிகளைப் பாராட்டி உளம் குளிரச் செய்வதே உழவர் திருநாள்!

– ஜெயந்தி

 

Comments are closed.