உழவும் தரிசும் ஓரிடத்திலே! ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே!

உழவும் தரிசும் ஓரிடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே என்ற பழமொழியை மெல்லிதாகக் காதில் விழுவதை ஒட்டகக்குட்டி ஓங்காரன் கேட்டது.

பழமொழி வரும் திசையை நோக்கிச் சென்றது. அப்போது பெண்கள் கூட்டத்தில் இப்பழமொழி குறித்து வயதான பெண்மணி கூறுவதை ஒட்டகக்குட்டி ஓங்காரன் கண்டது.

பழமொழி குறித்த விளக்கம் ஏதேனும் கிடைக்கிறதா என்ற ஆர்வத்துடன் கூட்டத்தினரை அது கவனிக்கலானது.

அப்போது இளம் பெண் ஒருத்தி “இந்தப் பழமொழியில் வித்தியாசம் ஏதும் இல்லையே. தரிசான இடத்தில் உழவு நடப்பது இயற்கை தானே. பின் எதற்காக இது உருவானது?.” என்று கூறினாள்.

அப்போது வயதான பெண்மணி “இயற்கையான ஒன்றை கூற இந்தப் பழமொழி எதற்கு?. இந்தப் பழமொழி வேறு ஒரு பொருளை நமக்கு உணர்த்துவதற்காக உருவானது.

‘அமிர்தமும் நஞ்சும் ஓரிடத்திலே’ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. அதாவது தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அமிர்தம் உண்டாவதற்கு முன்பே நஞ்சு உருவானதாக புராணக்கதை கூறுகிறது.

‘உழவும் தரிசும் ஓரிடத்திலே’ என்ற இந்தப் பழமொழியின் முதற்பாதி தரிசான இடத்தைத் தான் உழுது பண்படுத்த முடியும் என்ற நேரடியான பொருளை நமக்கு உணர்த்துகிறது.

இரண்டாவது பாதியான ‘ஊமையும் செவிடும் ஒரு மடத்திலே’ என்ற தொடர் வேறு ஒரு பொருளைக் குறிக்கிறது.

ஒரு மடத்தில் இருவர் தங்கி இருக்கும்போது அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதனால் அந்த இருவருமே ஒருவருக்கு ஒருவர் பகையை வளர்த்துக் கொண்டு ஒருவருவருக்கு ஒருவர் தீமைகள் செய்து கொண்டு வாழ்வர்.

ஆனால், அந்த இருவரில் ஒருவன் பேசமுடியாத ஊமை என்றால் எத்தகைய பிரச்சினை வந்தாலும் பேச இயலாததால் அமைதியாக இருப்பான்.

மற்றொருவன் செவிடன் என்றாகிவிட்டால் தனக்குத்தானே பேசுவானே தவிர பிறர் பேசுவதை கேட்க இயலாது. எனவே, அவனும் பேசிக்கொண்டே அமைதியாக காலம் கழிப்பான.

இவ்விதமாக இரு குறையுடைய மனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழும் போது அவர்களிடையே பிரச்சினை ஏற்படாது. அவ்விருவரும் அன்பாக இருப்பர். ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து வாழ்வர்.

நமது தமிழகத்திலும் இரட்டைப் புலவர்கள் என்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் இருவரில் ஒருவர் காலில்லாத முடவர் இன்னொருவர் கண்ணில்லாத குருடர் ஆவார்.

கண்ணில்லாதவர் முடவரை தூக்கிக் கொண்டு செல்ல முடவர் வழிகாட்டுவாராம்.

ஒவ்வொரு பாடலிலும் முதலிரண்டு அடியை ஒருவர் பாட இரண்டாவது இரண்டடியை மற்றொருவர் பாடி முடிப்பது வழக்கம். இதுபோன்றவற்றை விளக்கவே இந்தப் பழமொழி உருவாகியிருக்க முடியும்.” என்று கூறினார்.

இதனைக் கேட்ட ஒட்டகக்குட்டி ஓங்காரன் வேகமாக அவ்விடத்தில் இருந்து கிளம்பி காட்டினை நோக்கிச் சென்றது. வட்டப்பாறையில் எல்லோரும் கூடியிருந்தனர்.

காக்கை கருங்காலன் “இன்றைக்கு உங்களில் யார் பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

ஒட்டகக்குட்டி ஓங்காரன் “தாத்தா ‘உழவும் தரிசும் ஓரிடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே’ என்ற பழமொழியையும் விளக்கத்தினையும் அறிந்து கொண்டு வந்திருக்கிறேன். அதனைப் பற்றிக் கூறுகிறேன்.” என்றது.

காக்கை கருங்காலனும் “சரி. நீ கேட்டறிந்தவற்றை எல்லோருக்கும் புரியும்படி கூறு” என்றது. ஒட்டகக்குட்டி ஓங்காரன் தான் கேட்டவற்றை எல்லாம் விளக்கிக் கூறியது.

காக்கை கருங்காலன் “என் அருமைக் குஞ்சிகளே, குட்டிகளே. ஓங்காரனின் பழமொழி மற்றும் அதன் விளக்கம் புரிந்தது தானே?” என்று கேட்டது.

எல்லோரும் “புரிந்தது தாத்தா” என்று ஒருமித்த குரலில் கூறினர்.

காக்கைக் கருங்காலன் “சரி எல்லோரும் இன்று செல்லுங்கள். நாளை மற்றொரு பழமொழி பற்றி நாளை பார்ப்போம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.