எங்கள் வேலை அல்ல

பச்சைபுரி என்ற நாட்டின் அரசர் தேசிங்கு என்பவரிடம் இராமு என்பவர் அரண்மனை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மிகவும் நல்லவர். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்பவர்.

அரசர் தேசிங்கு இராமுக்கு எங்கும் செல்வதற்காக பல்லக்கு ஒன்றினை அளித்தார். பல்லக்கு தூக்குவதற்கு நான்கு பேரையும் அரசர் அனுப்பி வைத்தார்.

பசு மாட்டிற்குப் புல்

ஒருநாள் இராமு பல்லக்கு தூக்கிகளிடம் தொழுவத்தில் இருந்த பசு மாட்டிற்குப் புல் கொண்டு வந்து போடும் படி கூறினார்.

ஆனால் பல்லக்கு தூக்கிகள் “பசு மாட்டிற்குப் புல் கொண்டு வந்து போடுவது எங்கள் வேலை அல்ல. பல்லக்கு சுமப்பது மட்டுமே எங்கள் வேலை. அதற்காகவே எங்களை அரசர் அனுப்பியுள்ளார்” என்று கூறி புல் கொண்டு வந்து தர மறுத்து விட்டனர்.

பல்லக்கு தூக்குபவர்கள் கூறிய வார்த்தைகள் இராமுவை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தின.

எனினும் அவர் ‘அவர்கள் ஏதோ தெரியாமல் பேசி விட்டனர்’ என்று எண்ணி பெருந்தன்மையுடன் அவர்களை விட்டு விட்டார்.

காணாமல் போன‌ கன்றுக் குட்டி

மற்றொரு நாள் இராமு அன்புடன் வளர்த்து வந்த இளம் கன்றுக் குட்டி ஒன்று காணாமல் போய் விட்டது.

பல்லக்கு தூக்கிகளை அழைத்த இராமு “நான் அன்புடன் வளர்த்த கன்றுக் குட்டி காணாமல் போய் விட்டது. எனவே நீங்கள் என்னுடைய கன்றுக் குட்டியை தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.

அப்போதும் பல்லக்கு தூக்கிகள் “நாங்கள் கன்றுக் குட்டியைக் கண்டுபிடிக்கும் வேலைக்காக இங்கு வரவில்லை. பல்லக்கு தூக்கும் வேலைக்காக மட்டும் இங்கு வந்துள்ளோம்” என்று கூறி கன்றுக் குட்டியை தேட மறுத்து விட்டனர்.

பல்லக்கு தூக்கிகள் கூறியதைக் கேட்டதும் இராமுவிற்கு கோபம் வந்தது. இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மனதிற்குள் எண்ணினார்.

பல்லக்கு தூக்குங்கள்

நண்பகலில் பல்லக்கு தூக்கிகளிடம் “நீங்கள் போய் பல்லக்கினைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.

பல்லக்கு தூக்கிகள் பல்லக்கினைக் கொண்டு வந்தனர். இராமு அதில் ஏறிக் கொண்டார்.

கன்றுக் குட்டியைத் தேடுவதற்காகக் கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான காட்டுப் பாதைகளில் பல்லக்கினைக் கொண்டு செல்லச் சொன்னார்.

வெயில் நன்கு சுட்டு எரித்தது. பாதையோ கரடுமுரடாக இருந்தது. பல்லக்கு தூக்கிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

“ஐயா எங்களை ஏன் இப்படி வேகாத வெயிலில் போட்டு வதைத்து எடுக்கிறீர்கள்.” என்று இராமுவிடம் கேட்டனர்.

அதற்கு இராமு “நீங்கள் பல்லக்கு தூக்குபவர்கள். நான் கன்றுக் குட்டியைத் தேடுபவன். உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். என் வேலையை நான் செய்கிறேன்” என்றார்.

அப்போது தான் பல்லக்கு தூக்கிகள் தங்களுடைய செயலுக்காக வருந்தி இராமுவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

எங்கள் வேலை அல்ல கதையின் கருத்து

வேலை செய்வர்கள் விதிகளை பின்பற்றுகிறோம் என்று யோசிப்பதைவிட, சூழ்நிலையை உணர்ந்து நல்ல முறையில் வேலையை செய்ய வேண்டும்.

இதுதான் வேலை செய்பவருக்கும் வேலை வாங்குபவருக்கும் இணக்கத்தை உண்டாக்கும் என்பதை எங்கள் வேலை அல்ல என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.