எண்ணங்கள் வெளுப்பதில்லை – சிறுகதை

கல்கத்தாவுக்கு மாற்றலாகிச் செல்லும் மேலதிகாரியை ஸ்டேஷனில் வழியனுப்பக் குடும்ப சகிதம் வந்து கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஒன்பது மணிக்குத்தான். தில்லை நகரிலிருந்து எட்டரை மணிக்குக் கிளம்பியிருந்தாலே போதுமானது.

ஒரு மாற்றத்திற்காக அன்றைய இரவு உணவை, கவிதாவில் வைத்துக் கொள்ள ஏகமனதாக அனைவரும் முடிவெடுத்திருந்ததால், ஏழே முக்கால் மணிக்கே காரை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கிளம்பியாகி விட்டது.

கவிதாவில் அனைவரும் டிபனை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது மணி எட்டரைதான் ஆகியிருந்தது.

‘ஹரிகரனுக்கு ஸீட்லெஸ் கிரேப்ஸ் ரொம்ப பிடிக்கும். அரைக்கிலோ வாங்கிக் கொடுத்தால் என்ன? விரும்பிச் சாப்பிடுபவராச்சே’ என நினைத்தபடியே, ஸ்டேஷனை நோக்கி வரும் வழியில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவருடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்.

வழி நெடுக ட்ரை சைக்கிள்கள் அணி வகுத்து நிற்க, ஒவ்வொன்றிலும் கூட்டம் கூட்டமாக ஆரஞ்சுகளும், கொத்துக் கொத்தாக திராட்சைகளும், சீப்பு சீப்பாக வாழைப்பழங்களும் கொலு வீற்றிருந்தன.

ட்ரை சைக்கிள் வண்டிகளின் இடையிடையே பூ வியாபாரிகள். கிலோ அறுபத்து எட்டு ரூபாய் சொன்னவனிடம் பேரம் பேசி அறுபது ரூபாய்க்கு சம்மதிக்க வைத்து அரைக்கிலோ திராட்சையை வாங்கிக் கொண்டு நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார் ராமகிருஷ்ணன்.

“பத்து ரூபாய் கொடுங்க சார். மீதியை தருகிறேன்.” என்றான் திராட்சை வியாபாரி.

அருகிலிருந்த புக் ஸ்டாலில் இந்தியா டுடே புத்தகம் ஒன்று வாங்கிக் கொண்டு நூறு ரூபாயை நீட்டினார் ராமகிருஷ்ணன்.

ஸ்டாலில் இருந்தவனோ இவரைச் சிறிதும் சட்டை செய்யாமல், கும்பலுடன் பீடா வாங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் சிலரிடம் தனது அசட்டு சிரிப்பை ரிலே செய்து கொண்டு, அவர்களின் கையைத் தொடாத குறையாக சில்லறையை வாங்கிக் கொண்டிருந்தான்.

டுடே இந்தியா இருக்கும் லட்சணத்தை நொந்து கொண்டே “இந்தாப்பா, பாக்கி கொடு” என்றார் ராமகிருஷ்ணன்.

நூறு ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டே அவன் “சார், நோட்டு அழுக்கா இருக்கு. வேற கொடுங்க.” என்றான்.

ராமகிருஷ்ணனுக்கு வியப்பாக இருந்தது. ‘இந்த நோட்டில் செல்லும்படியாகாத அளவுக்கு அழுக்கு இருக்கிறதா என்ன?. இதைப் போய் வேண்டாம் என்கிறானே?’

வேறொரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து பாக்கியை வாங்கிக் கொண்டார்.

மறக்காமல் திராட்சை வியாபாரியிடம் அறுபது ரூபாயைக் கொடுத்துவிட்டு ஸ்டேஷனை நோக்கி குடும்பத்துடன் காரில் விரைந்தார்.

அதிகாரியை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் அனுப்பிவிட்டுத் திரும்பும் சமயம் ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகம் வாங்கக் காரை புக் ஸ்டால் முன் நிறுத்தச் சொன்னாள் நிர்மலா.

அவளிடம் “என்னம்மா இது? அப்போதே சொல்லியிருந்தால் இந்தியா டுடே வாங்கும் போதே வாங்கியிருப்பேனே. சரி, சரி சீக்கிரம் போய் வாங்கி வா” என்று அலுத்துக் கொண்டே காரை நிறுத்தினார்.

பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்த போது ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றும், புக் ஸ்டாலில் திருப்பிக் கொடுக்கப்பட்ட நூறு ரூபாயும் கையில் வந்தன. வேறு சில்லறை இல்லை.

பிளாட்பாரத்தில் பால் வாங்கி வழங்கியதிலும், தனக்கும், குடும்பத்தினருக்கும் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியிருந்ததிலும் சில்லரைகளைக் கொடுத்து விட்டிருந்தார்.

நூறு ரூபாய் அழுக்கடைந்திருப்பதாய் மறுக்கப்பட்டிருப்பதால் வேறு வழியில்லாமல் ஐநூறு ரூபாய் நோட்டை மகளிடம் நீட்டவே, “என்னப்பா, ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்க ஐநூறு ரூபாயா? சில்லறை தாங்க.” என்றாள் நிர்மலா.

“நீ ஏதாவது சில்லரை வச்சிருக்கியா ரஞ்சிதம்?” என்று மனைவி பக்கம் ராமகிருஷ்ணன் திரும்ப, “சரி, சரி நூறு ரூபாயைக் கொடுங்கப்பா” என்று நிர்மலா அவரது பதிலுக்குக்கூட காத்திராமல் அவர் கையிலிருந்து எடுத்துக் கொண்டு புக்ஸ்டாலை நோக்கி நடந்தாள்.

வாயெல்லாம் பல்லாகக் குழைந்தான் ஸ்டாலில் இருந்தவன்.

“வாம்மா என்ன வேணும்?”

நிர்மலா கேட்ட ரீடர்ஸ் டைஜஸ்ட்டைக் கொடுத்தான்.

நிர்மலா நூறு ரூபாய் நோட்டை நீட்டினாள். ராமகிருஷ்ணன் இந்தியா டுடே வாங்கியபோது கொடுத்த அதே நூறு ரூபாய் நோட்டு.

நோட்டு அழுக்காக இருப்பதாய் சொல்லி ராமகிருஷ்ணனிடமே திருப்பிக் கொடுத்த அதை இப்போது நிர்மலா கையைத் தொட்டு வாங்கிக் கொண்டான்.

நிர்மலா மீது மேய்ந்த கண்களைத் திருப்பாமலேயே நூறு ரூபாய் நோட்டைக் கல்லாவில் போட்டான். மீதி சில்லறையை எண்ணாமலேயே நிர்மலா கையில் தொட்டுக் கொடுத்தான்.

அவனது ஈனத்தனமான செய்கையை நொடியில் புரிந்து கொண்ட நிர்மலா மீதியை வாங்கிக் கொண்டு வெடுக்கென கையை இழுத்துக் கொண்டாள். அவனை முறைத்தவாறே காருக்குத் திரும்பினாள்.

இவற்றையெல்லாம் காரில் அமர்ந்தவாறே கவனித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணனுக்கு வியப்பாக இருந்தது.

‘அந்த நூறு ரூபாயைத் தான் கொடுத்த போது, அழுக்கடைந்திருப்பதாகச் சொல்லி வாங்க மறுத்தவன் தன் மகள் கொடுத்ததும் எப்படி மறுபேச்சின்றி வாங்கிக் கொண்டான்?’.

‘பெண்ணைக் கண்டதும் எண்ணங்கள் சபலமாக எவ்வளவு துரிதமாக உருமாறி விடுகின்றன?

உள்ளமும் எண்ணமும் அழுக்கடைந்ததும் ரூபாய் நோட்டு வெள்ளையாகத் தெரிந்து விட்டதோ?’

நிர்மலாவுக்காகக் கார் கதவைத் திறக்கத் தன் சீட்டிலிருந்தே பின்பக்கமாய் எம்பிய ராமகிருஷ்ணனின் மடியிலிருந்து காருக்குள் ஏதோ கீழே விழுந்தது.

கதவைத் திறந்துவிட்டு அது என்னவென்று குனிந்து பார்த்தால் ‘இந்தியா டுடே’.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998


தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.